Published : 15 Jul 2020 09:41 AM
Last Updated : 15 Jul 2020 09:41 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஆழமான கடல் பகுதிக்குச் சென்றவர் யார்?

கடலின் மிக ஆழமான மரியானா டிரெஞ்ச் பகுதிக்கு யாராவது சென்றிருக்கிறார்களா, டிங்கு?

- எஸ். மாரிச்செல்வம், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

1960-ம் ஆண்டு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஜாக்கஸ் பிக்கார்ட், அமெரிக்கக் கடற்படை அதிகாரி டான் வால்ஷ் இருவரும் கடலின் மிக ஆழமான மரியான டிரெஞ்ச் பகுதிக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பினார்கள். 11 கி.மீ. ஆழம் உள்ள இந்தப் பகுதிக்குச் சென்று திரும்பியது மிகப் பெரிய சாதனை. காரணம், நீரின் அழுத்தம் மிக மிக அதிகமாக இருக்கும். 10 மீட்டர் ஆழத்துக்குக் கடலில் இறங்கினால், கடல் மட்டத்தை விட இரு மடங்கு அழுத்தம் அதிகமாகிவிடும். 20 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் மூன்று மடங்காகிவிடும்.

மரியானா டிரெஞ்ச் பகுதியில் ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 1.25 மெட்ரிக் டன் அழுத்தம் இருக்கும். அதாவது சுமார் 7,900 டபுள் டெக்கர் பேருந்துகளின் எடைக்குச் சமமான அழுத்தம் இருக்கும். சாதாரணமாக மனிதர்களால் ஒரு கிலோ மீட்டர் ஆழத்துக்குச் செல்ல முடியாது. அப்படியே இறங்கினால் அழுத்தம் காரணமாக நசுங்கிவிடுவார்கள்.

பாதுகாப்பான இயந்திரத்தின் உதவியால் இருவரும் மரியானா டிரெஞ்ச் வரை சென்று திரும்பினார்கள். 2012-ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநரும் கடல் ஆராய்ச்சியாளருமான ஜேம்ஸ் கேமரான் நவீன இயந்திரத்தின் உதவியால் மரியானா டிரெஞ்ச் பகுதிக்குச் சென்று திரும்பினார். சமீபத்தில் கடல் ஆராய்ச்சியாளர் விக்டர் வெஸ்கோவோவுடன் விண்வெளி வீராங்கனை கேத்தரின் சல்லிவனும் மரியானா டிரெஞ்ச் பகுதிக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார்கள், மாரிச்செல்வம்.

நம் மூக்கு காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்து உடலுக்கு அனுப்புகிறதா, டிங்கு?

- ஆர். ஜனனிஸ்ரீ, 8-ம் வகுப்பு, ஆக்சீலியம் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

காற்றில் உள்ள வாயுக்களில் இருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து உடலுக்கு அனுப்பும் பணியை மூக்கு செய்வதில்லை. நுரையீரல்தான் செய்கிறது, ஜனனி. காற்று நுரையீரலுக்குள் நுழைந்து, ஆல்வியோலி என்ற மூச்சுச் சிற்றறைகளுக்குள் செல்லும். அங்கே உள்ள ரத்த நுண் குழாய்கள், காற்றில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளை மட்டும் ரத்தத்தில் கலக்கச் செய்யும். ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜனை இழுத்துக்கொண்டு, கார்பன்டை ஆக்சைடை நுரையீரலுக்கு அனுப்பிவிடும்.

ராபின்சன் க்ரூசோ நாவலை இப்போதுதான் படித்தேன். மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நீ படித்திருக்கிறாயா, டிங்கு?

- எம்.வி. வெண்மதி, 10-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

ஓ... படித்திருக்கிறேன். ஆங்கில எழுத்தாளர் டானியல் டீஃபோ எழுதி, 1719-ம் ஆண்டு வெளி வந்த நாவல். விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து தப்பித்த ராபின்சன், ஆள் இல்லாத தீவில் எப்படி வாழ்கிறார் என்பதை மிகவும் சுவாரசியமாகச் சொல்லியிருப்பார். 301 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாவல் நிலைத்து இருப்பதற்குக் காரணம் அபாரமான கற்பனைதான்! ராபின்சன் க்ரூசோவைப் போலவே ஒரு குடும்பம் மனிதர்கள் வசிக்காத தீவில் கரை ஒதுங்கும். ஸ்விஸ் ஃபேமிலி ராபின்சன் என்ற அந்த நாவலையும் படித்துப் பாருங்கள் வெண்மதி.

எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கரோனா தொற்று பரவுகிறதே, என்ன செய்வது டிங்கு?

- பி. ராஜராஜன், மதுரை.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் மிகக் கவனமாக இருப்பதுதான். ஒருவேளை தொற்றால் பாதிக்கப்பட்டதாக நினைத்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா தொற்று உறுதியானால், நம்பிக்கையோடு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவும் சிகிச்சையும் எடுத்துக்கொண்டால், விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடலாம். அதனால் கரோனாவை நினைத்து அளவுக்கு அதிகமாகப் பயப்படத் தேவையில்லை. அதே நேரம் அசிரத்தையாகவும் இருக்கக் கூடாது, ராஜராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x