Published : 10 Jun 2020 09:58 AM
Last Updated : 10 Jun 2020 09:58 AM

மாய உலகம்: கவிதை என்றால் என்ன?

ஓவியம்: லலிதா

மருதன்

ஒரு குவளையில் பால் கொண்டுவந்து கொடுத்தால் மூக்கை உள்ளே விட்டு, பால் தனியே தண்ணீர் தனியே பிரித்து எடுக்கும் ஆற்றல் அன்னப் பறவைக்கு உண்டு என்று சொல்வார்கள். அமெரிக்காவில் அப்படி ஒரு மாபெரும் விமர்சகர் இருந்தார். அவரிடம் ஒரு கவிதையைக் கொண்டுபோய் நீட்டினால் தலையை உள்ளேவிட்டு இது நல்லது, அது கெட்டது என்று தீர்ப்பு சொல்லிவிடுவார்.

ஒரு நாள் வால்ட் விட்மன் என்னும் இளம் கவிஞரின் படைப்பை யாரோ கொண்டு சென்று அவரிடம் தெரியாத்தனமாகக் கொடுத்துவிட்டார்கள். மூக்கைத் தீட்டிவிட்டுக்கொண்டு பாய்ந்தார் விமர்சகர். ஒரே நிமிடத்தில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

”இதெல்லாம் ஒரு கவிதையா? ஒரு பக்கம் திருப்பினால் புல், பூண்டு, வெட்டுக்கிளி என்று கவிதை இலக்கணத்துக்குத் தொடர்பில்லாத என்னென்னவோ வருகிறது. இன்னொரு பக்கம் விடுதலை, ஜனநாயகம், அடிமைத்தனம் என்று செய்தித்தாளில் வர வேண்டிய அரசியல் எல்லாம் நுழைந்திருக்கிறது. குறைந்தபட்சம் அழகியலாவது இருக்கிறதா? முதல் வரியில் ராஜா வந்தால் இரண்டாவதில் ரோஜா வர வேண்டும் என்பதுகூடவா ஒரு கவிஞனுக்குத் தெரியாது?” கத்தியது பத்தாது என்று புத்தகத்தை எடுத்து எரியும் நெருப்பிலும் வீசினார்.

வேறு யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இனி கவிதை இருக்கும் திசையில்கூடத் தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று ஓடியே போயிருப்பார்கள். விட்மன் அலட்டிக்கொள்ளவே இல்லை. என்ன செய்வது? சிலருக்குத் தொட்டிக்குள் வளரும் செடிதான் பிடிக்கும். அதைத்தான் தினம் தினம் கண்காணித்து, நம் விருப்பத்துக்கு ஏற்ப கத்தரித்து வளர்க்க முடியும். என் கவிதையோ காட்டுச்செடி. எங்கிருந்து, எப்போது, எப்படிக் கிளம்பும், எங்கெல்லாம் நீண்டு செல்லும், எத்தகைய மலர்களை அளிக்கும், அந்த மலர்களின் நறுமணம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது. எப்படி வளர வேண்டும் என்று அது விரும்புகிறதோ அப்படி வளரும்.

ஒரு கவிதைக்குள் இன்னதுதான் வர வேண்டும், இன்னது எல்லாம் வரக் கூடாது என்று சொல்ல முடியுமா? நான் காணும் மரக்கிளையில் புறா வந்து அமர்ந்தால் நிச்சயம் அதைப் பாடுவேன். வந்து அமர்வது காகம் என்றால், நீ போ என் கவிதைக்குள் உனக்கு இடமில்லை என்று விரட்ட மாட்டேன். உலக மகா கவிகள் எல்லாம் பஞ்சவர்ணக்கிளியைத்தான் பாடியிருக்கிறார்கள் என்பதற்காக பஞ்சவர்ணக்கிளி வரும்வரை நான் பேனாவை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்க மாட்டேன். எது என் இதயத்தைத் தொட்டு அசைக்கிறதோ, எது என் உணர்வுகளைத் தூண்டிவிடுகிறதோ, எது என்னை விழிப்படையச் செய்கிறதோ அதைத்தானே நான் பாட முடியும்?

இதுதான் உன் இதயத்தைத் தொட வேண்டும் என்று இன்னொருவர் கட்டளையிட முடியுமா? ஆயிரம் கிளைகளோடு விரிந்திருக்கும் ஆலமரத்தைவிட ஒரே ஒரு புல்லின் ஒரே ஓர் இதழ் என்னை ஈர்க்கலாம். ஓங்கிப் பொழியும் பெருமழையைவிட புல்லின் இதழ் மீது வந்து விழுந்து, விழவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தத்தளித்துக்கும் ஒரே ஒரு நீர்த் துளி என்னை ஆக்கிரமிக்கலாம். மழைதான் கவிதைக்கான பொருள், துளியல்ல என்று அந்த அற்புதமான கணத்திடம் நான் சொல்ல முடியுமா?

நானும் கனவு காண்பவன்தான். ஆனால், எப்போது விழித்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். என் மனிதன் சுரங்கத்துக்குள் இறங்கும்போது என் கவிதை மலர்களையும் மலைகளையும் தேடிக்கொண்டிருக்காது. மாறாக, அவனோடு சுரங்கத்தில் இறங்கிச் செல்லும். அவனோடு வியர்வை சிந்தும். அவன் ஏக்கங்களைக் காது கொடுத்துக் கேட்கும்.

நான் காணும் அமெரிக்காவே என் கவிதையிலும் இடமபெற்றிருக்கும். என் கவிதையில் அடிமைத்தனம் வருகிறது என்றால் என் அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை என்று பொருள். நான் வறுமையைப் பாடுகிறேன் என்றால் என்னைச் சுற்றிலும் வறுமை படர்ந்திருக்கிறது என்று பொருள். என் மனிதன் வீடற்றவனாக இருந்தால் என் கவிதை நிலைகொள்ளாமல் தவிக்கும். என் மனிதன் பசித்திருந்தால் என் கவிதை இரவெல்லாம் அழுதுகொண்டிருக்கும்.

உங்களுக்குத் தூய்மையே முக்கியம் என்றால் என் கவிதையை நெருங்காதீர்கள். உங்களுக்கு நறுமணம் மட்டுமே வேண்டும் என்றால் என் காகிதத்தை முகராதீர்கள். நீங்கள் இன்பத்தை மட்டுமே நாடுபவர் என்றால் என் எழுத்து உங்களுக்கானதல்ல.

எப்படி வந்து விழ வேண்டுமோ அப்படி வந்து விழும் கதிரவனின் ஒளி. எங்கெல்லாம் வீச வேண்டுமோ அங்கெல்லாம் தவறாமல் வீசும் காற்று. எங்கெல்லாம் வளர வேண்டும் என்று விரும்புகிறதோ அங்கெல்லாம் பரவிப் பரவி வளர்ந்துகொண்டே இருக்கும் புல். நான் இயற்கையின் குழந்தை. என் தாய் விடுதலையை நேசிக்கச் சொல்கிறார். காட்டுச்செடி போல் இரு என்கிறார். உன் இதயத்திலிருந்து பாயும் சொற்களை ஒருபோதும் தடுக்காதே என்கிறார். இதுதான் நான். இப்படித்தான் இருப்பேன் நான்.

‘புற்களின் இதழ்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்த வால்ட் விட்மனின் கவிதைகளை உலகம் நெஞ்சோடு தழுவிக்கொண்டது. பாவம், அந்த அன்னப் பறவை விமர்சகர்தான் காணாமலேயே போய்விட்டார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x