Published : 10 Jun 2020 09:50 AM
Last Updated : 10 Jun 2020 09:50 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மின்சாரத்தைச்சேமிக்க முடியுமா?

பனி படர்ந்த வட, தென் துருவப் பிரதேசங்களிலும் புயல் வீசுமா, டிங்கு?

- எஸ். அபிநயா, 12-ம் வகுப்பு, நாளந்தாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி.

வட, தென் துருவப் பிரதேசங்களிலும் புயல் வீசும். இந்தப் புயல் பனித் துகள்களையும் பனிக் கட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வரும்போது, அது பனிப்புயலாக மாறுகிறது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பனிப்புயல் வீசும்போது மிகப் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது, அபிநயா.

அடுத்த ஆறு மாதத்திற்குத் தேவையான மின்சாரம் கையிருப்பில் உள்ளது என்கிறார்களே, அப்படியானால் மின்சாரத்தை எப்படிச் சேமித்து வைக்கிறார்கள், டிங்கு?

- அ. பிரியதர்சினி, 9-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

மின்சாரத்தைப் பெரிய அளவில் சேமித்து வைக்க முடியாது. இந்தியாவில் மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரியில் இயங்கும் மின்நிலையங்கள் மூலம் 58% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்மின் ஆற்றல் மூலம் 19% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தவிர, அணு மின் நிலையம், முறைசாரா மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

அடுத்த 6 மாதங்களுக்கு நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களின் கையிருப்பைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதால், கையிருப்பில் மின்சாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். வீடுகளில், நிறுவனங்களில் பயன்படுத்தும் குறைந்த அளவு மின்சாரத்தை, வேறு ஆற்றலாக மாற்றி பேட்டரி போன்றவற்றில் சேமித்து, தேவையானபோது மின்சாரமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும், பிரியதர்ஷினி.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்பைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. என்ன செய்வது டிங்கு?

- எம். பிரவீன், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். பள்ளி, திருச்சி.

கரோனாவுக்கு மருந்து இல்லை என்பதால் நாம் பாதுகாப்பாக இருப்பதைத் தவிர, வேறு வழியில்லை. இவ்வளவு நாட்கள் இருந்ததைவிட, இப்போதுதான் கூடுதல் கவனத்துடன் நாம் இருக்க வேண்டும். உங்கள் ஊரில் பொதுப் போக்குவரத்து எல்லாம் இயங்குவதால் இயல்பான நிலைக்கு மக்கள் திரும்பியிருப்பார்கள்.

அவசியம் இன்றி வெளியே செல்லாதீர்கள். வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். கடைகள், விழாக்கள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லாதீர்கள். வீட்டிலேயே இன்னும் சில மாதங்களுக்குப் பாதுகாப்பாக இருந்துவிட்டால், கரோனாவிலிருந்து தப்பிவிடலாம். சிவப்பு மண்டலத்திலிருக்கும் நானும் இவற்றைத்தான் கடைப்பிடிக்கிறேன். அதனால் பயப்படாதீர்கள், பிரவீன். நிச்சயம் கரோனாவை வென்றுவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x