

எல். ரேணுகாதேவி
ஊரடங்கில் எல்லோரும் வீடுகளில் முடங்கியிருந்தாலும், குழந்தை களுடைய சிந்தனைக்கும் கற்பனைத் திறனுக்கும் எல்லைகள் கிடையாது. இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது பன்னிரண்டு வயதான ஜி.ஆர்.ரவிநந்தனின் ஓவியங்கள்.
சென்னை திருமுல்லைவாயிலில் வசித்துவரும் பிரபல ஓவியர்களான ரோகிணி மணி,கணேசன் ஆகியோரின் மகன் .ரவிநந்தன். பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாமலேயே ஓவியங்கள் வரைவதை சுயமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
கற்பனையில் உதித்தவை
“நாங்கள் ஓவியர்களாக இருந்தாலும் நந்தனுக்கு ஓவியம் கற்றுத்தர நினைத்தது இல்லை. அவனுக்கு என்ன பிடிக்குமோ, அதைச் செய்ய உதவி வந்துள்ளோம். தற்போது அவனாகவே ஓவியங்கள் வரையத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய எண்ணத்தில் தோன்றியதை ஓவியமாக வரைகிறான். அதுதான் அவனுடைய தனித்தன்மை” என்கிறார் ரோகிணி மணி.
நான்கு வயதில் கார்ட்டூன் பொம்மைகளை வரைவதில் ஆர்வம் காட்டிய ரவிநந்தன், தற்போது பலவகை இருசக்கர வாகனங்களை வரைவதில் கவனம் செலுத்திவருகிறார். கரோனா ஊரடங்குக் காலத்தை ஓவியங்கள் வரைவதில் செலவழித்து வருகிறார். நந்தனின் ஓவியங்களில் உள்ள இருசக்கர வாகனங்கள் பெரும்பாலும் அவருடைய கற்பனையில் உதித்தவையே.
இதற்காக இருசக்கர வாகனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, பிறகு தன்னுடைய கற்பனையில் தோன்றும் இருசக்கர வாகனத்தை ஓவியமாக உருவாக்குகிறார். சைக்கிள் ஓவியத்தில் எடை குறைவான என்ஜின்களைப் பொருத்தி இருசக்கர வாகனம்போல் வரையத் தொடங்கியவர், தற்போது ஜெட் விமானங்களுக்குப் பயன்படுத்தும் என்ஜின்களைப் பயன்படுத்தி அதிவேக இருசக்கர வாகனத்தை வரைந்து, அதற்கு ‘Dodge Turbo’ என்று பெயரும் வைத்துள்ளார் ரவிநந்தன்.
தாத்தாவிடம் பாராட்டுப் பெற...
“என்னுடைய தாத்தா ஜி.மணி, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் பொறியாளராகப் பணியாற்றியவர். அவருடன்தான் அதிக நேரம் செலவழிப்பேன். ஒருநாள் காரில் சைக்கிளை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில், அதை வெல்டிங் செய்து மடக்கக்கூடிய சைக்கிளாக தாத்தா மாற்றினார். அப்படித்தான் இருசக்கர வாகனங்கள் மீது எனக்கு ஆர்வம் பிறந்தது. நான் வரைந்த இருசக்கர வாகன ஓவியங்களைத் தாத்தாவிடம் காண்பிப்பேன்.
மற்றவர்கள் பாராட்டினாலும், தாத்தா சின்னச்சின்னத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். ‘நான் உருவாக்கும் இருசக்கர வாகனம் மக்கள் எளிதாகப் பயன்படுத்தும்படி இருக்க வேண்டும்,எடை அதிகமாக இருக்கக் கூடாது. அதற்கு ஏற்றாற்போல் வாகனத்தை உருவாக்கு' என ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். தாத்தாவிடம் பாராட்டுப் பெற வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான இருசக்கர வாகனங்களை ஓவியமாக வரையத் தொடங்கினேன்” என்கிறார் ரவிநந்தன்.
இருசக்கர வாகனத்தின் முகத்தோற்றம் மட்டுமல்லாமல் அதிலுள்ள சிறு பகுதிகளைக்கூடத் தனித்தனி ஓவியங்களாக ரவிநந்தன் வரைந்துள்ளார். அதேபோல் தான் உருவாக்கிய இருசக்கர வாகனத்துக்குத் தன்னுடைய பெயரை ‘GRR’ எனச் சுருக்கி பலவகையான ‘சின்னங்’களை (லோகோ) உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஊரடங்கு மாணவர்களுக்குப் புத்தகச் சுமையைக் குறைத்து கற்பனைத் திறனை அதிகரிக்க உதவியுள்ளது என்பதை நிரூபிக்கின்றன ரவிநந்தனின் ஓவியங்கள்.