

எழுத்தாளர், நாடகக் கலைஞர் வேலு சரவணன்
புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையில் ஏழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்புவரை ஒரு பறவையைப் போல் பல ஊர்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் நாடக நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமே என்னுடைய வேலையாக இருந்தது. 25 ஆண்டுகள் என்னுடைய வாழ்க்கை நாடகங்களுக்கான பயணத்திலேயே கழிந்தது.
நான் வீட்டில் இருக்கும் நாட்களில் என் குழந்தைகள் செய்யும் சேட்டைகளிலிருந்துதான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வேன். குழந்தைகளிடமிருந்துதான் நடிப்புக்கான முகபாவங்களைக் கற்றுக்கொண்டேன். குழந்தைகள்தான் நாடகம் பயிற்றுவிக்கும் என்னுடைய ஆசிரியர்கள்.
கரோனா ஊரடங்கில்தான் வீட்டிலேயே இருக்கிறேன். இந்த அனுபவமே எனக்கு வித்தியாசமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. என் மகள் வைகவிக்கு வாசிப்பதில் ஆர்வம். அவள் படித்த புத்தகங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்வாள். இருவரும் விவாதத்தில் ஈடுபடுவோம். தற்போது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த நாவல் குறித்து யோசித்துக்கொண்டிருப்பதால் எனக்கு நேரம் போவதே தெரியவில்லை.
கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு கல்வி நிலையங்களில் வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது. ஐந்து நாட்கள் பள்ளிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கி, மீண்டும் பள்ளிக்கு வரும் மனோபாவம்தான் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை அளிக்கும்.
தற்போது குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள நீண்ட விடுமுறை, அவர்களுக்குக் கிடைத்த பொன்னான காலம். ஊரடங்கி்ல் குழந்தைகள் புத்தக வாசிப்பு, தொலைக்காட்சி, கதை கேட்டல் என எதைச் செய்திருந்தாலும் அற்புதமான விஷயம்தான். இந்த விடுமுறை குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த ஊரடங்கு முடிந்த பிறகு குழந்தைகளைச் சந்தித்து, அவர்கள் முன்னால் நடிக்கப் போகிறேன். இந்த விடுமுறைக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள், என்ன மாதிரியான மாற்றங்கள் அவர்களிடம் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்துகொண்டு புதுமையான நாடகங்களை உருவாக்கப் போகிறேன்.
- ரேணுகா