Published : 20 May 2020 09:18 AM
Last Updated : 20 May 2020 09:18 AM

கதை: சின்னுவும் மின்னியும்

ஓவியம் : கிரிஜா

ச. கோபிநாத்

அழகான மதியூரில் சின்னு, மின்னி என்ற இரண்டு ஆடுகளை வளர்த்து வந்தார் சண்முகம். நாள்தோறும் அருகில் உள்ள காட்டுக்குச் செல்லும் இந்த ஆடுகள், புற்களை மேய்ந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

அன்று சின்னுவையும் மின்னியையும் காட்டில் மேய்த்துக்கொண்டிருந்தார் சண்முகம். சமீபத்தில் பெய்த மழையில் புற்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. சின்னுவுக்கும் மின்னிக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு ஆடுகளும் சாப்பிட்டுக்கொண்டே வெகுதூரம் வந்துவிட்டன.

மாலை நேரம் நெருங்கியதால், ஆடுகள் எப்படியும் வீட்டுக்குத் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் சண்முகம் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

“சின்னு, நாம் வெகு தூரம் வந்துவிட்டது போல் தெரிகிறதே?” என்று சற்று அச்சத்துடன் கேட்டது மின்னி.

“வெகுதூரம் வந்ததால்தான் இவ்வளவு சுவையான புற்களை நாம் சுவைத்திருக்கிறோம். அதைச் சாப்பிடுவதை விட்டுவிட்டு இப்படித் தூரமாக வந்துவிட்டதை நினைத்துக் கொண்டிருக்கிறாயே?” என்றது சின்னு.

“இல்லை, எனக்கு என்னவோ இப்பொழுதே நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று மீண்டும் கூறியது மின்னி.

“என்னது வீட்டுக்கா? இங்கிருக்கும் புற்களை மேயாமல் நான் வரமாட்டேன். நீ வேண்டுமானால் செல். வாய்ப்பு இருக்கும்போது அதைப் பயன்படுத்துபவன்தான் அறிவாளி” என்ற சின்னு புற்களை மேய ஆரம்பித்துவிட்டது.

“எவ்வளவு புற்கள் இருந்தாலும் நம் வயிற்றில் இடம் இருக்கும் அளவுக்குதான் நம்மால் சாப்பிட முடியும். வா, இப்போதே இங்கிருந்து கிளம்பலாம்” என்று கெஞ்சியது மின்னி.

“நீ என்ன சொன்னாலும் சரி… நான் வருவதாக இல்லை” என்று அடம்பிடித்தது சின்னு.

“சரி, நீ வராவிட்டால் போ. நான் இப்போதே வீட்டுக்குச் செல்கிறேன். நம்மைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள். இங்கு ஏதோ ஆபத்து நடக்க இருப்பது போல் தோன்றுகிறது. எனக்குப் பயமாக இருக்கிறது” என்று பேசிக்கொண்டே நடந்தது மின்னி.

கொஞ்ச தூரம் நடந்து வந்த மின்னியின் கண்களுக்குத் தூரத்தில் நரி ஒன்று எதையோ தேடிக்கொண்டே செல்வது போல் தெரிந்தது.

“ஐயோ, அந்த நரி சின்னுவைப் பார்த்தால் என்னாவது? இந்த ஆபத்தில் இருந்து எப்படியாவது சின்னுவைக் காப்பாற்ற வேண்டுமே” என்று நினைத்த மின்னி, வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றது.

சின்னு புற்களை மேய்ந்துகொண்டிருந்த பகுதிக்குச் சென்ற மின்னி, நரி எங்கேயாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டது. யாரோ நடக்கும் சத்தம் கேட்கவே அருகில் இருந்த சிறிய மரமொன்றில் ஏறியது மின்னி.

“ஆஹா! அழகான ஆடு ஒன்று அங்கே புற்களை மேய்ந்துகொண்டிருக்கிறதே…. இன்று நமக்கு வேட்டை தான்” என்று நாக்கில் எச்சில் வடிய, மின்னி அமர்ந்திருந்த மரத்துக்குக் கீழே வந்து நின்றது நரி.

’அச்சச்சோ… இந்த நரி சின்னுவைப் பார்த்துவிட்டதே… சத்தமாகக் கூப்பிட்டால் நாமும் மாட்டிக்கொள்வோம். அதே நேரத்தில் நரியிடமிருந்து சின்னுவையும் காப்பாற்றியாக வேண்டுமே’ என்று யோசித்தது மின்னி.

சட்டென்று அந்த மரத்தில் இருந்த கிளையைத் தன் தலையால் முட்டியது. மரக்கிளையை முட்டும் சத்தம் நரிக்குக் கேட்கிறதா என்று பார்த்த மின்னி, இன்னும் இன்னும் வேகமாக முட்டியது.

நரியின் பின் பகுதியில் கிளை விழுந்தது. கால் உடைந்தது. வலியால் துடித்த நரி, மெதுவாக உடைந்த காலை இழுத்துக்கொண்டு சின்னுவை நோக்கிச் சென்றது. மரத்திலிருந்து குதித்து வேகமாக ஓடியது மின்னி.

“சின்னு… சீக்கிரமாக வா… இங்கிருந்து ஓடிவிடுவோம். அதோ நரி உன்னைச் சாப்பிட வந்துகொண்டிருக்கிறது” என்று படபடப்பாகக் கூறியது மின்னி.

அதிர்ச்சியடைந்த சின்னு, மின்னியுடன் வேகமாக ஓடி, வீடு வந்து சேர்ந்தது.

“ மின்னி, அந்த நரி ஏன் ஓட முடியாமல் அங்கேயே நின்றது?” என்று கேட்டது சின்னு.

“நான் வந்துகொண்டிருந்த வழியில் நரி செல்வதைப் பார்த்தேன். எங்கே அந்த நரியிடம் நீ மாட்டிக்கொள்வாயோ என்று உன்னைக் கூப்பிட வரும் போது ஒரு மரத்தின் மீது ஏறினேன். நான் நினைத்தது மாதிரியே அந்த நரி உன்னைப் பிடிக்க மரத்தடிக்கு வந்து நின்றது. உடனே கிளையை முட்டி, நரியின் மீது தள்ளிவிட்டேன். நரியின் கால் முறிந்தது ” என்று நடந்ததை விளக்கியது மின்னி.

“நல்ல வேளை என் உயிரைக் காப்பாற்றினாய் மின்னி. நீ மட்டும் இன்று உதவி செய்யவில்லை என்றால், என் கதி அவ்வளவு தான். சாப்பிட்டது போதும் என்று நான் உன்னுடன் வந்திருக்க வேண்டும். பேராசைப்பட்டதற்குச் சரியான பாடம் படித்துவிட்டேன்” என்று தன் தவறை உணர்ந்தது சொன்னது சின்னு.

வீட்டுக்கு திரும்பிய சின்னுவையும் மின்னியையும் பார்த்து, சண்முகம் மகிழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x