Published : 13 May 2020 08:40 AM
Last Updated : 13 May 2020 08:40 AM

மாய உலகம்: பொம்மையின் கடிதங்கள்

மருதன்

புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான ஃபிரான்ஸ் காஃப்கா ஒரு நாள் பூங்காவில் நடைபோட்டுக்கொண்டிருந்தபோது, கண்கள் முழுக்கக் கண்ணீரோடு நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமியைப் பார்த்தார். நெருங்கிச் சென்று மென்மையாக விசாரித்தார். யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்திருந்ததைப் போல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள் குட்டிப் பெண். ‘’என் பொம்மையைக் காணவில்லை. இங்கேதான் வைத்திருந்தேன். நீ இல்லாமல் இனி நான் என்ன செய்வேன் சூசி?’’

காஃப்கா சுதாரித்துக்கொண்டார். “உன்னைப் போல் பெரிய கண்களும் நீண்ட தலைமுடியும் கொண்ட பொம்மையையா தேடுகிறாய்?’’ சிறுமியின் கண்கள் விரிந்தன. “ஆமாம், நீங்கள் பார்த்தீர்களா?’’ தலையசைத்தார் காஃப்கா. ‘’ஒரு மணி நேரத்துக்கு முன்னால்தான் பார்த்தேன். ஏதோ அவசர வேலையாம். என்னைத் தேடி ஒரு சிறுமி வருவாள். அவளிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு ஓடிப் போய்விட்டாள்.’’

“எங்கே, எங்கே கடிதம்?’’ பரபரப்போடு கையை நீட்டிய சிறுமியைப் பார்த்து புன்னகை செய்தார் காஃப்கா. “யாராவது தேடினால் தரலாம் என்று பத்திரமாக வீட்டில் கொண்டுபோய் வைத்துவிட்டேன். நீ ஒன்று செய். மாலை ஆறு மணிக்குச் சரியாக இந்த மரத்தடிக்கு வந்துவிடு. கடிதத்தைக் கொண்டுவருகிறேன். உன் பெயர் என்ன?’’ நான்சி என்று சொல்லிவிட்டு இவரை நம்பலாமா வேண்டாமா என்று குழப்பத்துடன் விடைபெற்றுக்கொண்டாள் சிறுமி.

ஆறு மணிக்கு முன்பாகவே துள்ளலும் நடையுமாக மரத்தடிக்கு வந்து சேர்ந்தாள் நான்சி. அவளுக்கு முன்பே காத்திருந்த காஃப்கா கடிதத்தை எடுத்து நீட்டினார். “எனக்குப் படிக்கத் தெரியாதே, நீங்களே படியுங்கள்.’’ சிறுமியை அமரச் சொல்லிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தார் காஃப்கா.

“அன்பிலும் அன்பான நான்சிக்கு, என்னை மன்னித்துவிடு. நீ என்னைக் கீழே வைத்துவிட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய தோழி மேரியைப் பார்த்தேன். இன்று இரவே ரஷ்யாவுக்குப் போகிறாளாம். நீயும் வா என்று கையைப் பிடித்து இழுத்தாள். நானாவது நான்சியை விட்டு வருவதாவது? மாட்டேன் என்றேன். நானும் உனக்குத் தோழிதானே? என்னோடு வந்தால் என்னவாம்? தனியாகக் கப்பலில் போக பயமாக இருக்கிறது என்று அவள் சொன்னபோது என்னவோ போல் ஆகிவிட்டது.

புல்வெளியில் உட்கார்ந்து கதை மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருந்த ஒருவரிடம் காகிதமும் பேனாவும் வாங்கி உனக்கொரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவசரமாகக் கிளம்பிவிட்டேன். கவலைப்படாதே நான்சி. இனி தினமும் உனக்கு எழுதுவேன். உன் இதயத்தில் என்றும் வாழும் சூசி.’’

அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் டானென்று ஆறு மணிக்கு இருவரும் மரத்தடியில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். தினம் ஒரு புதிய கடிதத்தைப் படித்துக் காட்டுவார் காஃப்கா. ‘’அன்புள்ள நான்சி, ரஷ்யாவில் குளிர் எப்படி இருக்கும் தெரியுமா? அப்பப்பா, நீ ஒரு நிமிடம் இங்கே வந்து நின்றால் போதும், உன் குட்டி பற்கள் மேலும் கீழும் பாலே நடனம் ஆட ஆரம்பித்துவிடும். அதென்ன பாலே நடனம் என்று நீ விழிப்பது இங்கிருந்தே தெரிகிறது. இதோ உனக்காக நான் வரைந்து காட்டியிருக்கிறேன், பார்த்துக்கொள். (கை நடுங்குவதால் கொஞ்சம் கோணல் மாணலாக இருக்கும், பொறுத்துக்கொள்!).’’

ஒரு நாள் சூசி கதை சொல்வாள். இன்னொரு நாள், ரஷ்ய நாட்டுப்புறப் பாடலை அறிமுகப்படுத்துவாள். (அதற்குள் கொஞ்சம் ரஷ்ய மொழியும் கற்றுக்கொண்டு விட்டாளாமே!) வீட்டிலிருந்தபடியே பனி மனிதன் செய்வது எப்படி என்று ஒருமுறை படங்களோடு செய்முறை விளக்கம் (‘இந்த சூசிக்கு ஒரு குச்சியையாவது வளையாமல் வரையத் தெரிகிறதா, பாருங்களேன்!) அனுப்பினாள். ஒரு நாள் கத்தரிக்கப்பட்ட படங்கள் மட்டும் வரும். ('இன்று ஒரு மேடை நாடகம் பார்க்க ஓடிக்கொண்டிருக்கிறேன். எழுத நேமில்லை என்பதால் படங்கள் மட்டும்!'). அதென்ன நாடகம் என்று நீங்கள் கேட்கவே வேண்டாம். மறுநாளே மேடை காட்சிக் காட்சியாக விவரித்துத் தீர்த்துவிடுவாள். வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள் ஏராளம் ஏராளம் வந்துகொண்டிருந்தன.

சுவையோடு தினம் ஒரு கடிதம் எழுதும் சூசியை முன்பைவிட அதிகம் பிடித்துவிட்டது நான்சிக்கு. மணி தவறாமல் வந்து, பொறுமையாகக் காத்திருந்து, உற்சாகத்தோடு அங்கும் இங்கும் நடந்தபடி ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டும் நண்பரும் நான்சியைக் கவர்ந்துவிட்டார். கடிதங்கள் வளர்ந்துகொண்டே சென்றன. நான்சிக்கு இப்போது நன்றாகப் படிக்கத் தெரியும். சூசியால் கடிதம் எழுத முடியாது என்பதையும் அவள் ஒரு நாள் தெரிந்துகொண்டாள். இருந்தாலும் பூங்காவுக்குச் செல்வதை அவள் நிறுத்திக்கொள்ளவில்லை.

நான்சி இனியும் குழந்தையல்ல என்பதை காஃப்கா அறிவார். ஆனாலும் சூசியின் கடிதங்களை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். எழுத்துக்கு உயிர் உண்டு என்று அவருக்குத் தெரியும். எழுத்துக்குக் கை, கால், கண், காது, இதயம் எல்லாம் இருக்கிறது. யாராவது அழுதால் எழுத்தின் கரங்கள் நீண்டு சென்று துடைத்துவிடும்.

உங்களைவிட்டு யாராவது பிரிந்து சென்றால் எழுத்தின் கால்கள் விரைந்து சென்று அவரைக் கொண்டுவந்து உங்களிடம் சேர்த்துவிடும். உங்களுக்கு துயரமென்றால் எழுத்தின் இதயம் உங்களுக்காகத் துடிக்கும். உங்களைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நம்பிக்கையளிக்கும் நூறு கதைகளை உருவாக்கிச் சொல்லும். எழுத்து ஒரு மாய உலகம். அந்த உலகில் சூசியும் நான்சியும் காஃப்காவும் எப்போதும் கரம் கோத்து மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x