Published : 06 May 2020 10:46 AM
Last Updated : 06 May 2020 10:46 AM

சமையலறையில் அறிவியல் - அனுபவம்: அறிவை விரிவாக்கும் கேள்விகள்!

கேள்விகளே அறிவின் கதவைத் திறக்கும் சாவிகள். ‘சமையலறை அறிவியல்' பகுதியை 8-ம் வகுப்பு படிக்கும் எங்கள் மகன் முகமது இஹ்ஸானிடம் சொன்னதும் அவன் சுவாரசியமாகிவிட்டான்.கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். நானும் அவன் அப்பாவும் இணைந்து அவனுடன் கலந்துரையாடினோம். சில கேள்விகளுக்கு எங்களால் உடனே பதில் சொல்ல முடிந்தது. சில கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடினோம். பதில்களை அவனுக்குச் சொன்னபோது, அவனது கண்களில் அறிவியல் ஆர்வம் மிளிர்ந்ததை எங்களால் உணர முடிந்தது.

பூக்கள், காய்கள் கனிகளுக்கு வண்ணம் வருவது எப்படி? மனிதத் தோலுக்கு நிறம் வருவது எப்படி? பூக்களுக்கு ஏன் மணம் இருக்கிறது? சில பூக்கள் வெண்மையாக இருப்பது ஏன்? இப்படிக் கேள்விகள் அவனிடமிருந்து உருவாகிக்கொண்டே இருந்தன. அவற்றுக்கான பதில்களைத் தேடுவதில் எங்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.
கேசரி செய்தேன். அதில் எந்த நிறமூட்டியும் சேர்க்காததால் வெள்ளையாக இருந்தது.

அதைப் பார்த்து, நம் வீட்டு கேசரி மட்டும் ஏன் வெள்ளையாக இருக்கிறது? நிறமூட்டி என்றால் என்ன? இயற்கை நிறமூட்டியும் செயற்கை நிறமூட்டியும் எப்படித் தயாராகின்றன? அயோடின் கலந்த உப்பு என்றால் என்ன? அயோடின் இல்லாத உப்பு உண்டா? ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு அயோடின் தேவை? அயோடின் கிடைக்காத உணவை உட்கொள்ளக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசு அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த ஏன் வலியுறுத்துகிறது என்றெல்லாம் விவாதம் நீண்டுகொண்டே சென்றது.

மறுநாள் அப்பளம் பொரித்துக்கொண்டிருந்தேன். எண்ணெய் இல்லாமல் அப்பளம் பொரிக்க முடியாதா என்று கேட்டான். அடுப்புத் தீயில் அப்பளத்தைச் சுட்டுக் கொடுத்தேன். உடனே பதில் கிடைத்த திருப்தி அவனுக்கும் உடனே பதில் சொல்ல முடிந்த திருப்தி எனக்கும் கிடைத்ததில் இருவருக்குமே மகிழ்ச்சி. இப்படி நாள் முழுவதும் கேள்விகள் முகமதுவிடமிருந்து எப்போது வரும் என்ற ஆவலில் நாங்களும் அத்தனை சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவனும் இருப்பதால் எங்களது வீட்டடங்கு காலம் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு சமையலறையில் எவ்வளவு விஞ்ஞானம் இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது.

- நா. ஜெஸிமா ஹீசைன், இ. முகமது இஹ்ஸான்,
8-ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்,புதூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x