சித்திரக்கதை: கஞ்சனை வீழ்த்திய பேராசை

சித்திரக்கதை: கஞ்சனை வீழ்த்திய பேராசை
Updated on
2 min read

ஆத்திக்குடி அழகிய கிராமம். அந்த கிராமத்தில் அழகிரிசாமி வசித்துவந்தான். சரியான கஞ்சன். வெறும் கஞ்சனல்ல,வடிகட்டின கஞ்சன் இந்த அழகிரிசாமி. எந்த வேலையும் செய்ய மாட்டான். வேலை செய்தால் பசிக்குமே…! பசித்தால் காசு செலவழித்துச் சாப்பிட வேண்டுமே…! என்று சும்மாவே தண்ணீர் குடித்துவிட்டு இருப்பான் அழகிரிசாமி.

‘அய்யோ…பாவம்…!’ என்று யாராவது இரக்கப்பட்டு ஏதாவது கொடுத்தால் போதும்; வஞ்சகமில்லாமல் சாப்பிடுவான்.

“நீதான் கையிலே காசு வச்சிருக்கியே, ஏதாவது வாங்கிச் சாப்பிடேன்…!” என்று சொன்னால், உடனே அவனுக்குக் கோபம் வந்துவிடும்.

“கையில இருக்கிற காசைச் செலவழிக்கிறது ரொம்ப சுலபம். ஆனா, சேர்க்கிறதுதான் ரொம்ப கஷ்டம்…!” என்று தத்துவம் சொல்ல ஆரம்பித்து விடுவான்.

அழகிரிசாமியைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் அவனிடம் உதவி கேட்க மாட்டார்கள். அவனும் யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டான். அவ்வளவு கெட்டியான பேர்வழி.

ஒரு நாள் பக்கத்திலிருக்கிற சாலக்குடி எனும் ஊருக்குப் போக நினைத்தான் அழகிரிசாமி. அந்த ஊருக்குப் பேருந்தும் இருக்கிறது. யார் காசு செலவழித்துப் பயணச்சீட்டு எடுப்பது? துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

நல்ல கோடை வெயில் கொளுத்தியெடுத்தது. மேலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. துண்டால் உடம்பைத் துடைத்துக்கொண்டான்.

நடந்து வந்ததில் பசியெடுத்தது. கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ‘மடக் மடக்’கென்று குடித்தான்.

மீண்டும் நடந்தான். ‘உஸ்…உஸ்…’ வெயில் தாங்க முடியவில்லை. வியர்க்க விறுவிறுக்க நடந்தான்.

வழியில் ஒரு பாட்டி சிறிய சாப்பாட்டு கடை வைத்திருந்தாள்.

“ஏந்தம்பி, நல்ல மத்தியான வெயில்ல பசியோட போறியே. சாப்பிட்டுட்டுப் போறது…!” என்று அழகிரிசாமியைப் பார்த்து, அந்தப் பாட்டி சொன்னாள்.

அழகிரிசாமி மடியில் கொஞ்சம் காசுகள் வைத்திருந்தான். ஆனாலும், “பசியாத்தான் இருக்கு. ஆனா, கையில இப்ப காசில்லை பாட்டி” என்று வாய் கூசாமல் பொய் சொன்னான்.

அந்தப் பாட்டிக்கு ரொம்ப நல்ல மனசு.

“பசியா இருந்தா, சாப்பிடு. போன வேலைய முடிச்சிட்டுத் திரும்பி வர்றப்ப காசைக் கொடுத்துட்டுப் போ..!”என்று சொன்னாள்.

இதுதான் சரியான வாய்ப்பென்று அழகிரிசாமி வயிறு முட்டச் சாப்பிட்டான். ‘ஏவ்…’ பெரிதாய் ஏப்பமிட்டபடி நடையைக் கட்டினான். இந்தப் பக்கம் திரும்பி வந்தாத்தானே…! என்று மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

வயிறு முட்டச் சாப்பிட்டதில் நடக்க முடியவில்லை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வெயில் வேறு கண்களைக் கூசியது.

ஏதாவது ஒரு மரத்தடி நிழலில் கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுத்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்தான் அழகிரிசாமி.

தொலைவில் ஒரு மரம் தெரிந்தது. அந்த மரத்தை நோக்கி நடந்தான்.

அது சாதாரண மரமல்ல, அதிசய மரம். அந்த மரத்தின் அடியில் நின்று யார் எதை நினைத்தாலும், உடனே அது நிறைவேறிவிடும்.அப்படியொரு அதிசய சக்தி அந்த மரத்திற்கு உண்டு.

அந்த அதிசய மரத்தின் நிழலில் வந்து நின்றான் அழகிரிசாமி.

‘ஆகா…, இந்த மர நிழல்ல படுக்க ஒரு கட்டிலும், விரிக்க ஒரு பாயும் இருந்தா நல்லா இருக்குமே…!’ என்று நினைத்தான் அழகிரிசாமி. அடுத்த கணமே, அந்த மரத்தின் அடியில் ஒரு கட்டிலும் பாயும் வந்தன.

சந்தோஷமாய் ஏறிப் படுத்துக்கொண்டான்.

‘பெரிய அதிர்ஷ்டக்காரன் நான். இப்போது என் மடியில் உள்ள காசுகள் எல்லாம் தங்கக் காசுகளாக மாறினால், எவ்வளவு நன்றாயிருக்கும்…!’ இப்படி அழகிரிசாமி நினைத்ததுமே, அவன் மடியிலிருந்த காசுகள் தங்கக் காசுகளாக மாறின.

அழகிரிசாமிக்கு தலைகால் புரியவில்லை.

‘என்னாச்சு இன்னிக்கு நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதே…!’ என்று வியந்துபோனவன்,” இந்த மரம் முழுக்கத் தங்கக் காசுகள் முளைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்…!” என்று நினைத்தான்.

அடுத்த நொடியே, அந்த மரத்தில் தங்கக் காசுகள் முளைத்தன. உடனே, மரத்தில் ஏறி மொத்தத் தங்கக் காசுகளையும் பறித்தான். எல்லாத் தங்கக் காசுகளையும் ஒரு மூட்டையாகக் கட்டி, தலைமாட்டில் வைத்துக் கொண்டான்.

கண்களை மூடி படுக்கலாம் என்றால், தூக்கமே வரவில்லை.

திடீரென அழகிரிசாமியின் மனசில் வேறொரு எண்ணம் தோன்றியது.

“யாருமில்லா இடத்திலே தனியா படுத்திருக்கோம். இந்த நேரத்தில யாராவது திருடன் வந்து, தங்கக் காசு மூட்டையைப் பிடுங்கிக்கிட்டு, கத்தியால நம்மைக் குத்திட்டுப்போனா என்ன செய்யிறது…?”

யோசித்த மறுகணமே தலைமாட்டில் இருந்த தங்கக் காசு மூட்டையைப் பிடுங்கிய திருடனொருவன், கத்தியால் அழகிரிசாமியைக் குத்தினான்.

“அய்யோ…!”என்று அலறியபடியே கீழே விழுந்தான் அழகிரிசாமி. உள்ளதும் போய், உடம்பை இப்படிப் புண்ணாக்கிக்கொண்டேனே என்று மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அழகிரிசாமி.

ஓவியம்: ராஜே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in