கற்சிலையாக மாறிய மனிதர்கள்!

கற்சிலையாக மாறிய மனிதர்கள்!
Updated on
1 min read

அந்தக் கால மாயாஜாலப் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? மனிதனைக் கல்லாக மாற்றும் காட்சிகள் சர்வ சாதாரணமாக வரும். நிஜமாகவே மனிதர்கள் கல்லாக மாற முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனால், இயற்கையின் பேரழிவு மனிதர்களைக் கல்லாக மாற்றிய சம்பவம் இந்த உலகில் நடந்திருக்கிறது.

இத்தாலியில் பாம்பெய், ஹெர்குலானியம் என அழகான இரு நகரங்கள் இருந்தன. இரு நகரங்களுக்கும் அருகே மவுண்ட் வெசுவியஸ் என்ற எரிமலை இருந்தது. அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்த எரிமலை, கி.பி. 79-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் சுயரூபத்தைக் காட்டியது. அப்போது விடுமுறைக் காலம் என்பதால் பொதுமக்கள் விடுமுறையை சந்தோஷமாகக் கழித்துக்கொண்டிருந்தனர்.

திடீரென எரிமலை வெடித்துச் சிதறியது. கண் இமைக்கும் நேரத்தில் பாம்பெய், ஹெர்குலானியம் நகரமெங்கும் புகை மயம். நெருப்புக் குழம்பு வழிந்தோடியது. இந்தக் கோரச் சம்பவத்தில் மக்கள் என்ன ஆனார்கள் என்றுகூடத் தெரியாத அளவுக்கு இரு நகரங்களும் நெருப்புக் குழம்பில் சிக்கி மண்மேடாகின. ஒரு காலகட்டத்தில் இரு நகரங்களையும் இத்தாலி நாட்டு மக்கள் மறந்தே விட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கட்டடக் கலை நிபுணர்கள் ஹெர்குலானியம் வந்தனர். புதைந்திருந்த இரு நகரங்களையும் 1738-ம் ஆண்டு முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தனர். சுமார் 12 அடுக்கு மண் படிவங்கள் இரு நகரங்களையும் மூடி மறைத்திருந்தன. மனிதர்கள், குழந்தைகள், விலங்குகள் என எல்லோர் மீதும் நெருப்புக் குழம்பு பாய்ந்ததில், அனைவரும் கல்லாகவே மாறி இருந்தனர். பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட கல் மனிதர்கள் அந்நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி ஒரு சோகமான வரலாற்றுப் பின்னணி கொண்ட அந்த இரு நகரங்களும் இப்போது முக்கியச் சுற்றுலாத் தலங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in