Published : 08 Apr 2020 08:56 AM
Last Updated : 08 Apr 2020 08:56 AM

ஜப்பான்: எட்டுத்திக்கும் பறக்கும் கதைகள் - நீள மூக்கு அள்ளு முள்ளு பிசாசுகள்

யூமா வாசுகி

ஜப்பானின் வடக்குப் பகுதி மலையில் இரண்டு பிசாசுகள் வாழ்ந்துவந்தன. ஒன்றின் பெயர் அள்ளு, மற்றொன்று முள்ளு. அந்த இரண்டு பிசாசுகளும் வெவ்வேறு நிறத்தில் இருந்தன.

அள்ளுப் பிசாசு நில நிறம்

பூசணி போன்ற பெருவயிறு

முள்ளுப் பிசாசு சிவப்பு நிறம்

பற்களெல்லாம் ஈட்டிபோல.

ஆனால், இரண்டு பிசாசுகளுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருந்தது. அவற்றின் மூக்கைப் பற்றிய விஷயத்தில். அவற்றால் எவ்வளவு தூரம்வரையிலும் தங்கள் மூக்கை நீட்ட முடியும். அந்தப் பிசாசுகள் வசிக்கும் மலையிலிருந்து ஏழு மலைகளுக்கு அப்பால்தான் நாடு இருந்தது. பிசாசுகள் இவ்வளவு தூரத்தையும் தாண்டி தங்கள் மூக்கை நீட்டும். நாட்டில் உள்ள மக்களை முகர்ந்து பார்க்கும். அவர்களைத் தங்கள் மூக்கால் சுருட்டி எடுத்து வந்து வாயில் போட்டுத் தின்றுவிடும்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள், தூரத்திலிருக்கும் மலை அடிவாரத்திலிருந்து ஓர் இனிய வாசனை காற்றில் கலந்து அங்கே வந்தது. முதலில் அள்ளுப் பிசாசுக்குத்தான் அந்த வாசனை எட்டியது.

ஏழு மலைகளுக்கு அப்புறம்

மகிழ மரம் பூத்ததுவோ?

அள்ளுப் பிசாசுக்கு சந்தேகமாக இருந்தது. ஆயினும் அது தன் மலையில் இருந்துகொண்டு, தன் மூக்கை ஏழு மலைகளைக் கடந்து நீட்டியது.

ஒன்றாம் மலையும் கடந்து மூக்கு

இரண்டாம் மலையும் கடந்து மூக்கு

மூன்றாம் மலையின் உச்சியைத் தொட்டு

நான்காம் மலையின் வயிற்றைத் தொட்டு

ஐந்தும் ஆறும் நலமே கடந்து

ஏழாம் மலைக்கு அப்பால் உள்ள

நாட்டின் நடுவே விரைந்து வந்தது.

அங்கே ஓர் அரண்மனையின் வாசலை அடைந்தபோதுதான் மூக்கு தன் நீட்சியை நிறுத்திக்கொண்டது.

அந்த அரண்மனையில் பேரழகு கொண்ட ஓர் இளவரசி இருந்தார். அவர் பெயர் என்ன தெரியுமா?

வெள்ளைப் பூ

வெள்ளைப் பூ

துளிர் முல்லையின்

வெள்ளைப் பூ.

அந்த இளவரசி பூந்தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தார். அவரது பட்டு உடைகளைத் தோழிகள் உலர வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்தப் பட்டாடைகளில், ரோஜாப்பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட வாசனைத் திரவியத்தைத் தெளித்து உலர்த்திக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தோட்டத்தில் தடி போன்ற ஒரு பொருளைப் பார்த்தார்கள்.

அது,

நீல நிற அள்ளுப் பிசாசின்

நீண்டு வரும் மூக்கு!

ஆயினும் இளவரசியின் தோழிகள், அது மூக்கா அல்லது ஒரு நாக்கா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கவில்லை. அது ஒரு தடிதான் என்று நினைத்தார்கள். அவர்கள், வெள்ளைப் பூ எனும் இளவரசியின் – ரோஜா வாசனைத் துணிகளை எல்லாம் ஜோராக மூக்கில் உலர்த்தினார்கள்.

இந்த நேரத்தில் அள்ளுப் பிசாசு, ஏழு மலைகள் தாண்டி உள்ள தன் மலையிலிருந்து ரோஜா வாசனையை முகர்ந்து மகிழ்ந்துகொண்டிருந்தது. இளவரசியின் தோழிகள் எல்லா உடைகளையும் பிசாசின் மூக்கில் உலரப் போட்டார்கள். அப்போது பிசாசு தன் மூக்கைச் சுருக்கிச் சுருக்கி, தான் இருக்கும் இடத்துக்கு இழுத்துக்கொண்டது. அந்த நல்ல உடைகளை எல்லாம் வாரி அள்ளித் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டது.

வண்ணத் துணிகளை இழந்த வெள்ளைப் பூ

வேதனைக் கண்ணீர் வடித்து நின்றார்.

இப்படிப்பட்ட நல்ல துணிகள் நிறையக் கிடைத்ததால் அள்ளுப் பிசாசு மகிழ்ந்து குதித்தது. சிவப்பு நிற முள்ளுப் பிசாசை அருகே அழைத்தது. விலை உயர்ந்த வாசனைத் துணிகளைக் காட்டிச் சொன்னது:

“இந்த நறுமணமிக்க அருமைத் துணிகளைப் பார்த்தாயா? இவை ஏழாம் மலைக்கு அப்புறம் இருந்தன. என் மூக்கை நீட்டி எல்லாவற்றையும் எடுத்து வந்துவிட்டேன்!”

இதைப் பார்த்தவுடன் முள்ளுப் பிசாசுக்கும் ஆசை ஏற்பட்டது. அதுவும் உடனே ஏழு மலைகளுக்கு அப்பால் தன் மூக்கை நீட்டியது. அப்போது, குறும்புக்காரக் குழந்தைகள் நிறையப் பேர் ஓடிவந்து அந்த மூக்கைப் பிடித்துத் தொங்கினார்கள். எல்லோரும் அந்த மூக்கை ஒவ்வொரு துண்டாக உடைத்து எடுத்துக்கொண்டார்கள். முள்ளுப் பிசாசு வலி தாங்காமல் துடித்தது. கடைசியில்,

முக்குடைந்த முள்ளுப் பிசாசு

மூசுமூசென்று அழுதது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x