Published : 08 Apr 2020 08:48 AM
Last Updated : 08 Apr 2020 08:48 AM

மாய உலகம்! - மார்கோ போலோவின் பயணம்

மருதன்

பேரரசர்களே, பொதுமக்களே, சான்றோர்களே, ஆன்றோர்களே, குழந்தைகளே, பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் மார்கோ போலோவாகிய நான் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உலகம் எவ்வளவு பெரியது, அதில் என்னென்ன அதிசயங்கள் எல்லாம் ஒளிந்துகொண்டிருக்கின்றன, எத்தனை வகையான மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள், அவர்கள் எப்படி எல்லாம் விதவிதமாக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால் என் பயணங்களை வாசியுங்கள்.

நான் கண்ட காட்சிகள் அனைத்தும் உங்கள் கண்முன் விரியும். நான் கேட்ட கதைகளை நீங்களும் கேட்பீர்கள். நான் சந்தித்த ஆபத்துகளை எல்லாம் பாதுகாப்பான இருக்கையில் அமர்ந்துகொண்டு நீங்களும் சந்திப்பீர்கள். கடலிலும் பாலைவனத்திலும் காட்டிலும் மேட்டிலும் அலையாமலேயே அங்கெல்லாம் அலைந்து திரிந்த அசதியை, மகிழ்ச்சியை, மனநிறைவை நீங்களும் பெறுவீர்கள்.

அது சரி, நீ ஏன் இப்படி எல்லாம் அலைய வேண்டும், திரிய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆரம்பத்தில் தொட்டிக்குள் போட்ட மீன் போல் அடக்க ஒடுக்கமாகத்தான் இருந்தேன். வெனிஸ்தான் என் கண்ணாடித் தொட்டி. அங்குதான் பிறந்தேன். அங்குதான் நீந்தக் கற்றுக்கொண்டேன். வெனிஸின் ஒவ்வொரு வீதியையும் நூறு முறை சுற்றி வந்தேன். வெனிஸின் காற்று மட்டுமே என் நுரையீரலை நிரப்பியது. வெனிஸின் சூரியனை, வெனிஸின் கடலை, வெனிஸின் கதைகளை என் உலகமாக நினைத்திருந்தேன்.

எல்லாத் தொட்டிகளுக்கும் உள்ள அதே பிரச்சினைதான் வெனிஸிடமும் இருந்தது. மீன் வளர்வதற்கு ஏற்பத் தொட்டி வளர்வதில்லை. எனக்குப் புதிய காட்சிகள் வேண்டும் என்றேன். இல்லை என்று உதட்டைப் பிதுக்கியது வெனிஸ். புதிய காற்றைச் சுவாசித்தால் எப்படி இருக்கும்? தெரியாது என்றது வெனிஸ். உன் கதைகள் அலுத்துவிட்டன. வேறு கதைகளைச் சொல் என்று கேட்டேன். வேறில்லை: என்னிடமிருந்த எல்லாக் கதைகளையும் சொல்லித் தீர்த்துவிட்டேன் என்றது வெனிஸ். தொட்டியிலிருந்து கடலுக்குள் துள்ளிக் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன்.

குதித்தேன். சீனாவிலிருந்து திரும்பிவந்த அப்பாவும் சித்தப்பாவும் மீண்டும் சீனாவுக்குப் புறப்பட்டபோது என்னையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்றேன். நாங்கள் வணிகத்துக்குப் போகிறோம் நீ என்ன செய்வாய் மார்கோ போலோ என்றார்கள்.

நிறைய செய்வேன் என்றேன். சீனாவின் வானம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறேன். சீனாவின் வீதிகளைச் சுற்றித் திரியப் போகிறேன். சீன மனிதர்களோடு கை கோத்துக்கொள்ளப் போகிறேன். சீனாவின் கதைகளையும் பாடல்களையும் ஒவ்வொன்றாகக் கேட்கப் போகிறேன். சீனாவின் காடுகளில் சுற்றித் திரியப் போகிறேன். ஒரு விவசாயியின் வீடு தொடங்கி மன்னர் வசிக்கும் அரண்மனை வரை எல்லா இடங்களுக்கும் செல்லப் போகிறேன். சீனாவின் உணவை உண்டு, சீனாவின் நீரைப் பருகி, சீனாவின் ஆடையை உடுத்தி, ஒரு சீனனாக இருப்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளப் போகிறேன்.

இப்படியாக என் பயணம் தொடங்கியது. கடலில் தொடங்கினேன் பிறகு நிலத்துக்கு மாறினேன். கால் வலிக்க, வலிக்க நடந்தேன். வானத்தின் நிறம் மாறிக்கொண்டே இருந்ததைக் கண்டேன். புதிய மழைத் துளிகள் என்மீது விழுந்தன. புதிய சூரிய ஒளியைக் கண்டேன். அந்த ஒளி புதிய தடங்களை எனக்குக் காட்டியது. அந்தத் தடங்கள் வளர்ந்துகொண்டே சென்றன. ஈரானைக் கடந்து, பாக்தாத்தைக் கடந்து, அரபிக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலுக்கு முன்னேறி, மத்திய ஆசியப் பகுதிகளை எல்லாம் கண்டு தீர்க்க மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

இறுதியில் ஒரு நாள் சீனாவில் என் கால்களைப் பதித்தேன். உடல் எல்லாம் சிலிர்த்துவிட்டது. அந்தச் சிலிர்ப்பில் நான் சந்தித்த எல்லா அபாயங்களும் அனுபவித்த எல்லாத் துயரங்களும் அடைந்த எல்லாக் காயங்களும் உதிர்ந்து போயின. ஒரு புதிய உலகம் என் முன்னால் திறந்துகொண்டது. நான் ஓடோடிச் சென்று சீனாவின் கரங்களுக்குள் அடைக்கலம் புகுந்தேன். சீனப் பெருநிலம் என்னை அன்போடு தழுவிக்கொண்டது. சீனாவின் காற்று, சீனாவின் வானம், சீனாவின் பண்பாடு, சீனாவின் மொழி, சீனாவின் சிந்தனைமுறை அனைத்தும் என்னில் ஒரு பகுதியாக மாறிப் போனது. நானும் சீனாவின் ஒரு பகுதியாக மாறிப் போனேன்.

இருபத்தாறு ஆண்டுகள் கழித்து திரும்பியபோது முற்றிலும் புதிய மனிதனாக நான் மாறிப் போயிருந்தேன். பயணம் என்பது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்ந்து செல்வதல்ல; அதற்கும் மேலானது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். தொட்டிக்குள் இருக்கும் ஒரு மீனை எது கடலை நோக்கி உந்தித் தள்ளுகிறதோ அதுவே மெய்யான பயணம். எது உங்கள் இதயத்தையும் அறிவையும் ஒருசேர அகலப்படுத்துகிறதோ அதுவே மெய்யான பயணம். உங்கள் தலைக்கு மேல் இருப்பது முழுமையான வானமல்ல, வானத்தில் ஒரு துண்டுதான் அது என்பதை எது உங்களுக்கு உணர்த்துகிறதோ அதுவே மெய்யான பயணம்.

இரு உலகங்களை எது இணைக்கிறதோ அதுவே மெய்யான பயணம். நான் சீனா சென்றபோது எனக்குள் இருந்த வெனிஸும் சீனாவுக்கு வந்தது. என்னை வரவேற்றபோது, மார்கோ போலோ என்னும் தனிப்பட்ட மனிதனை அல்ல, எனக்குள் இருந்த வெனிஸைதான் சீனா வரவேற்று ஏற்றுக்கொண்டது. நான் வீடு திரும்பியபோது தனியாக வரவில்லை, என்னோடு சீனாவையும் எடுத்து வந்திருந்தேன்.

தொட்டிக்குள் இருக்கும் ஒவ்வொரு மீனும் கடலைப் பற்றிதான் கனவுகொண்டிருக்கிறது. அந்தக் கனவு நிறைவேற வேண்டுமானால் மீன் துள்ளிக் குதித்து வெளியில் வர வேண்டும். என் புத்தகம் அதற்கான தூண்டுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x