Published : 19 Aug 2015 11:41 AM
Last Updated : 19 Aug 2015 11:41 AM

அடடே அறிவியல்: காரமும் கீரையும்

காரம், மசாலா அதிகமுள்ள சாப்பாட்டைச் சாப்பிட்டால் புளிச்ச ஏப்பமும், வயிறு எரிச்சலும் சிலருக்கு ஏற்படுவதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டில் தாத்தா, பாட்டிகூட வயிறு எரிச்சலைச் சரி செய்யப் பச்சைக் கீரையைச் சாப்பிடச் சொல்லி அறிவுரை சொல்வதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். கீரை சாப்பிட்டால் வயிறு எரிச்சல் எப்படிச் சரியாகிறது? அதைத் தெரிந்து கொள்ள ஒரு சோதனை இருக்கிறது.

தேவையான பொருள்கள்

கண்ணாடி பாட்டில், சோடியம் ஹைடிராக்சைடு மாத்திரைகள், சோடா, பினாஃப்தலின், தண்ணீர், சிறிய பிளாஸ்டிக் கரண்டி.

சோதனை

(1) ஒரு கண்ணாடிப் பாட்டிலில் பாதியளவு நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

(2) அதில் இரண்டு அல்லது மூன்று சோடியம் ஹைடிராக்ஸைடு மாத்திரைகளைப் போட்டு நன்றாகக் கலக்கி விடுங்கள். இப்போது பாட்டிலில் சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசல் தயார்.

(3) பாட்டிலில் உள்ள சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசலில் இரண்டு சொட்டு பினாஃப்தலின் என்ற நிறங்காட்டியைப் போட்டு நன்றாகக் கலக்குங்கள். சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசல் ஊதா நிறத்தில் மாறியிருப்பதைப் பார்க்கலாம்.

(4) ஊதா நிறத்தில் உள்ள சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசலில் கொஞ்சம் கொஞ்சமாக சோடாவை ஊற்றிக் கலக்கி விடுங்கள். இப்போது என்ன நிகழ்கிறது என்பதைப் பாருங்கள்.

(5) சோடாவை ஊற்ற ஊற்ற ஊதா நிறம் சிறிது சிறிதாக மாறி சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசல் நிறமற்றதாக மாறிவிடுவதைப் பார்க்கலாம். ஊதா நிறத்தில் இருந்த கரைசல், எப்படி நிறம் மாறியது? அதற்குக் காரணம் என்ன?

நடப்பது என்ன?

நீல லிட்மஸ் தாளைச் சிவப்பு நிறமாக மாற்றும் புளிப்பு சுவை கொண்ட நீர் கலந்த கரைசலே அமிலமாகும். அமிலம் காரத்தோடு வினைபுரியும் தன்மை கொண்டது, அது ஹைடிரஜன் அயனிகளைத் தரவல்லது என்று படித்திருப்பீர்கள் அல்லவா?

சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும் கசப்பு சுவை கொண்ட நீர்க் கரைசலே காரம் எனப்படுகிறது. காரம் அமிலத்தோடு வினைபுரியும் தன்மை கொண்டது. நீரில் கரையும் போது காரம் ஹைடிராக்ஸைடு அயனிகளைக் கொடுக்கும். காரம் என்பது வழவழப்பான திரவம்.

ஒரு திரவம் காரமா அமிலமா என்பதைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருளே நிறங்காட்டி ஆகும். சோடியம் ஹைடிராக்ஸைடு மாத்திரைகளை நீரில் கரைத்தால் சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசல் கிடைக்கும். இதுதான் நமது சோதனைக்குத் தேவையான காரம்.

சோடா பாட்டிலைத் திறந்தவுடன் ‘குபுகுபு’வென்று கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிவரும். நீரில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அதிக அழுத்தத்தில் கலந்தால் அதுவே சோடா ஆகும். கார்பன் டை ஆக்ஸைடு கலந்த நீர் கார்பானி அமிலம் எனச் சொல்வார்கள். சோடா நீர் என்பது வீரியம் குறைந்த அமிலம் ஆகும்.

சோடா நீரை பாட்டிலில் உள்ள சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கும் போது கார்பானி அமிலமும் சோடியம் ஹைடிராக்ஸைடு என்ற காரமும் வேதி வினையில் ஈடுபடுகின்றன. அமிலமும் காரமும் சேர்ந்து நிகழும் வேதியியல் வினை நடுநிலையாக்கல் வினை எனப்படுகிறது. நடுநிலையாக்கல் வினையில் உப்பும் நீரும் கிடைக்கும். இவ்வினையில் அமிலமும் காரமும் சேரும்போது தத்தம் தன்மையை இழந்து நடுநிலைத்தன்மையைப் பெறுகின்றன.

சோதனையில் கார்பானி அமிலமும் சோடியம் ஹைடிராக்ஸைடும் வினைபுரிந்து சோடியம் கார்பனேட் என்ற உப்பையும் நீரையும் கொடுக்கும். உப்பு நீரில் கரைந்திருப்பதால் நம் கண்ணுக்குத் தெரியாது. கார்பானி அமிலத்தைப் பினா: ப்தலின் கலந்த சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசலில் சேர்க்கும் போது சோடியம் ஹைடிராக்ஸைடு தன் காரத்தன்மையை இழந்து, இறுதியில் முற்றிலும் நிறமற்றதாகி விடுகிறது. அதைச் சோடியம் ஹைடிராக்ஸைடு ஊதா நிறத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி நிறமற்ற நிலைக்கு வருவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பயன்பாடு

புளித்த தயிர், பழங்கள், மசாலா உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிட்டால் வயிற்றில் அதிகமாக அமிலங்கள் சுரந்து உணவு சீரணமாகாமல் வயிற்றில் எரிச்சல் தோன்றும். அதைச் சரிசெய்ய அதிகமாகப் பச்சைக் கீரைகள் சாப்பிட வேண்டும்.

இப்போது கண்ணாடி பாட்டிலை வயிறாகவும், சோடா நீரை வயிற்றில் தோன்றும் புளிப்பு தன்மை கொண்ட அமிலமாகவும், சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசலைக் கீரையாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கார்பானி அமிலமும், சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசலும் சேர்ந்து வினை புரிவதால் நடுநிலையாக்கல் வினையின் மூலம் உப்பும் நீரும் கிடைக்கிறது அல்லவா? அதைப் போலவே நம் வயிற்றில் தோன்றும் அமிலத்தன்மை கொண்ட திரவம் நாம் உட்கொள்ளும் காரத்தன்மை கொண்ட கீரைகளும் சேர்ந்து வினைபுரிவதால் நடுநிலையாக்கல் ஏற்பட்டு வயிற்றில் உள்ள புளிப்புத்தன்மை நீக்கப்படுகிறது.

இதனால் நமக்குச் ஜீரணக்கோளாறால் ஏற்படும் வாந்தியும் தடுக்கப்படுகிறது. பச்சைக் கீரை வகைகளில் காரத்தன்மை அதிகமாக உள்ளது. கீரை நீரில் கரைந்து நமக்குக் காரத்தைக் கொடுக்கிறது. அமில-கார வேதிவினையான நடுநிலையாக்கல் வினை வயிறு எரிச்சலைத் தடுக்கிறது.

ஏன் கீரை அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பது இப்போது புரிகிறதா?

தொடர்புக்கு: aspandian59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x