Published : 25 Mar 2020 08:26 AM
Last Updated : 25 Mar 2020 08:26 AM

விடுமுறையில் என்ன செய்யலாம்?

விடுமுறை எப்போதும் எல்லோருக்கும் கொண்டாட்டமானதே! ஆனால், இந்த எதிர்பாராத கரோனா விடுமுறையை வழக்கமான விடுமுறையைப் போல் நாம் பயன்படுத்த இயலாது. வெளியில் எங்கும் செல்ல முடியாது. தெருவில் விளையாட முடியாது. வீட்டுக்குள்ளேகூட நண்பர்களுடன் விளையாட இயலாது. அவரவர் வீட்டுக்குள் விடுமுறையைக் கடப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

சரி, இந்த விடுமுறையில் வீட்டுக்குள் இருந்துகொண்டே என்ன செய்யலாம்?

நம் கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்க வைக்கலாம்! தொலைக்காட்சி முன்பாகவோ ஸ்மார்ட்போனைக் கையில் வைத்துக்கொண்டோ உட்கார்ந்துவிட வேண்டாம். காட்சிகளாகப் பார்க்கும்போது நம் கற்பனைக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. அதையே புத்தகமாகப் படிக்கும்போது நம் கற்பனை எல்லை இல்லாமல் விரிவடைகிறது. சிந்தனைக்கு விருந்தாகவும் அமைகிறது. அதனால் இந்த விடுமுறையைப் பாடங்கள் அல்லாத புத்தகங்களைப் படிப்பது என்று திட்டமிட்டுக்கொள்ளலாம்.

உங்களைச் சந்திப்பதற்காக பலே பாலு, ஹெய்டி, ஆலிஸ், ஆலிவர், கலிவர், கால்வின், ஹோப்ஸ், டோரதி, ஷெர்லாக் ஹோம்ஸ், பக், சிந்துபாத், நீலவ்னா, பாவெல், மெளக்ளி, சார்லி, பிளாக் பியூட்டி, ராபின்சன் க்ரூசோ போன்ற ஏராளமான கதாபாத்திரங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். சந்திக்க நீங்கள் தயாரா?

வாண்டு மாமா, அழ.வள்ளியப்பா, ரேவதி, ஆர்.கே. நாராயண், டால்ஸ்டாய், மக்சிம் கார்கி, சார்லஸ் டிக்கன்ஸ், அன்னா சிவெல், ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன், லூயி கரோல், அலெக்சாண்டர் டுமாஸ், ஜூல்ஸ் வெர்ன், எச்.ஜி. வெல்ஸ், ஜொனாதன் ஸ்விஃப்ட், டேனியல் டெஃபோ, ஷேக்ஸ்பியர், ஐசக் அசிமோவ், ஃப்ராங் பாம், ஜேக் லண்டன், ஆர்தர் கானன் டாயல் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் அவர்களது அற்புதமான படைப்புகளையும் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பாக இந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்வோம்.

புத்தகங்களாகவோ டிஜிட்டலாகவோ கிடைக்கும் கதைகளைப் படித்து உங்கள் அனுபவத்தை எழுதி அனுப்புங்கள். இவற்றைப் படித்ததால் உங்கள் கற்பனை வளம் பெருகி, நீங்களே ஓர் எழுத்தாளர் ஆகி கதையை எழுதிவிட்டால், அனுப்பி வையுங்கள். சிறந்த படைப்புகள் மாயாபஜாரில் பிரசுரமாகும்.

படிப்பது தவிர்த்து வேறு என்ன செய்யலாம் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் திடீர் விடுமுறையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய உங்களது கருத்துகளையும் எழுதி அனுப்பலாம். சிறந்த கருத்துகள் பிரசுரமாகும்.

அடுத்த வாரம் சந்திப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x