டிங்குவிடம் கேளுங்கள்: பிஎஸ் 6 ரக வாகனங்கள் என்றால் என்ன?

டிங்குவிடம் கேளுங்கள்: பிஎஸ் 6 ரக வாகனங்கள் என்றால் என்ன?
Updated on
2 min read

இதிகாசங்கள் உண்மைச் சம்பவங்களா, கட்டுக்கதைகளா, டிங்கு?

- ம. வனிதா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

இதிகாசம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. கடவுள், அவதாரம், வீரர்களின் சாகசங்கள் போன்றவற்றைச் சொல்லி, நீதிநெறிகளையும் விவரிக்கிறது.

ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள். இவற்றிலிருக்கும் அபாரமான கற்பனைத் திறனைக் கண்டு ரசிக்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம். இவை உண்மைச் சம்பவங்கள் அல்ல. புராணக்கதைகளே. உண்மைச் சம்பவங்கள் என்றால் அது இதிகாசமாக இருக்காது, வரலாறாக இருக்கும், வனிதா.

ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள் மட்டும்தான் வாங்க வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் என்ன, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேது லட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

காற்றில் மாசு ஏற்படும் அளவைக் குறைக்கும் விதத்தில் பிஎஸ் 6 தரத்தில் இப்போது வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுவரை இருந்த பிஎஸ் 4 ரக வாகனங்களைவிட பிஎஸ் 6 ரக வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையின் அளவு பெருமளவில் குறைவாக இருக்கிறது. இதனால் காற்று மாசு குறைவாக இருக்கும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் தொழில்நுட்பங்கள் பிஎஸ் 6 ரக எஞ்சினுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன, பிரியதர்ஷினி.

நமது இடது பக்க மூளை மட்டும்தான் செயல்படுகிறது. வலப் பக்க மூளை, பின் பக்க மூளை எல்லாம் செயல்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். இவற்றைச் செயல்பட வைக்க என்ன செய்ய வேண்டும், டிங்கு?

- எஸ். ஆனந்தாதித்யன், 7-ம் வகுப்பு, நல்லிகுப்புசாமி விவேகானந்தா வித்யாலயா இளநிலைக் கல்லூரி, சென்னை.

மூளைதான் நமது உடலின் தலைமைச் செயலகம். மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி வேலைகள் இருக்கின்றன. அவற்றை ஒழுங்காகச் செய்வதால்தான் நம்மால் முழுமையாக இயங்க முடிகிறது, ஆனந்தாதித்யன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in