Published : 18 Mar 2020 09:01 AM
Last Updated : 18 Mar 2020 09:01 AM

அறிவியல் மேஜிக்: ஐஸ் கட்டியைத் தூக்கும் உப்பு!

மிது கார்த்தி

தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டியை உங்கள் கை படாமல் வெளியே எடுக்க முடியுமா? ஒரு சோதனை செய்வோமா?

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர்

ஐஸ் கட்டி

நூல்

உப்பு

தண்ணீர்

எப்படிச் செய்வது?

# ஐஸ் கட்டிகளை டம்ளரில் போடுங்கள்.

# மிதக்கும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றுங்கள்.

# மிதக்கும் ஐஸ் கட்டிகளை விரல் படாமல் எடுக்க முயற்சி செய்யுங்கள். முடியாது.

# நூலை எடுத்து ஐஸ் கட்டி மீது போடுங்கள்.

# தூள் உப்பை ஐஸ் கட்டி மீது உள்ள நூலின் மேல் தூவுங்கள்.

# ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, நூலைப் பிடித்து மேலே தூக்குங்கள்.

# நூலுடன் சேர்ந்து ஐஸ் கட்டி ஒட்டிக்கொண்டு வருவதைக் காணலாம். இது எப்படி சாத்தியமானது?

காரணம்

சாதாரண நீரானது 32 டிகிரி ஃபாரன்ஹீட்டில் உறையத் தொடங்கும். தண்ணீரில் உப்பைச் சேர்க்கும்போது, உப்பானது தண்ணீரின் உறைபனி வெப்பநிலையைக் குறைத்துவிடும். எவ்வளவு உப்பைச் சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்து உறைபனி வெப்பநிலை மாறும்.

ஐஸ் கட்டியில் உப்பைத் தூவும்போது, உப்பு அதன் உறைபனி வெப்பநிலையை குறைக்கிறது. இதனால், ஐஸ் கட்டி ஏற்கெனவே இருந்த குளிர்ச்சியைப் பெற முடியாமல் உருகத் தொடங்குகிறது. ஐஸ்கட்டி உருகும்போது, அதன் மீது பள்ளம் போன்று உருவாகிறது.

சிறிதளவே உப்பைச் சேர்த்ததால், உறைபனி அதிகரித்து அடுத்த சில நிமிடங்களில் ஐஸ்கட்டி பழைய நிலைக்கு திரும்பத் தொடங்குகிறது. அப்போது நூல் மீது பனிக்கட்டி பரவுகிறது. மூடிய பனிக்கட்டிக்குள் நூல் இருப்பதால், அதை எளிதாகத் தூக்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x