Published : 18 Mar 2020 08:55 AM
Last Updated : 18 Mar 2020 08:55 AM

கதை: அம்மா எங்கே?

உதயசங்கர்

வயநாட்டிலுள்ள அம்புக்குத்தி மலையடிவாரக் காட்டின் நடுவில் ஒரு வேங்கை மரத்தின் கீழ் அப்பு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.­ அப்பு பிறந்ததிலிருந்தே சுட்டிதான். ஓர் இடத்தில் நிற்காது. அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். அம்மாவின் கால்களில் போய் முட்டும். செடியிடம் சண்டை போடும். தும்பிக்கையால் பூவைப் பறிக்கும். கோரம்புல்லை வாய்க்குள் திணிக்கும். அவை நாக்கை அறுத்தவுடன் துப்பும். பறக்கும் காகத்தைப் பார்த்துப் பிளிறும்.

குயில் கூவினால் அதற்குப் போட்டியாக அப்புவும் கத்தும். அப்பு செய்கிற குறும்புகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கும் அதன் அம்மா. கூட்டத்தைவிட்டு அப்பு தூரமாகப் போனால், பெருங்குரலில் பிளிறும். உடனே அப்பு ஓடிவந்து கூட்டத்துடன் சேர்ந்துவிடும்.

கூட்டத்திலிருந்த மற்ற யானைகளும் அப்புவைப் பார்த்துப் பெருமைப்படும். எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது ‘ஹங்’ என்று சிறு குரல் கொடுத்து அப்பு இருப்பதை உறுதி செய்துகொள்வதுண்டு.

ஆபத்தான காரியங்களைச் செய்யும்போது மட்டும் அம்மாவின் கோபத்துக்கு உள்ளாகும் அப்பு. உடனே தவறை உணர்ந்து, அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுவிடும். அம்மா தன் தும்ப்பிக்கையால் அப்புவை வருடிக் கொடுக்கும். அம்மா நடக்கும்போது அதன் கால்களை உரசிக்கொண்டே நடப்பதில் அப்புவுக்கு அவ்வளவு ஆனந்தம்! திடீரென்று அப்படியே நின்று அம்மாவைப் பார்க்கும். அம்மா எவ்வளவு அழகு என்று தனக்குள் சொல்லிக்கொள்ளும்.

அப்புவால் பசி பொறுக்க முடியாது. ஓடி வந்து அம்மாவின் மடியில் முட்டி பால் குடிக்கும். வயிறு நிறைந்தவுடன் கடைவாயில் பால் ஒழுக அம்மாவைப் பார்த்து மகிழ்ச்சியாகக் குரல் கொடுக்கும். மற்ற நேரத்தில் அம்மா சாப்பிடுகிற இலை தழைகளை வாயில் சவைத்துத் துப்பிக்கொண்டிருக்கும். ஒரு வெட்டுக்கிளியையோ வண்ணத்துப்பூச்சியையோ அணிலையோ விரட்டிக்கொண்டு திரியும்.

இன்று இரவு அவர்களுடைய கூட்டம் வலசை போக வேண்டும். வயநாட்டிலிருந்து சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு போய்ச் சேர வேண்டும். இப்போது கிளம்பினால் ஒரு மாதத்துக்குள் அந்தக் காட்டை அடைந்துவிடலாம். அப்புவை அம்மா கவனித்துக்கொண்டேயிருந்தது. பாதை எல்லாம் பழக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களின் முன்னோர்கள் போய் வந்த பாதை. எல்லோரின் ஞாபகத்திலும் அந்தப் பாதை அப்படியே பதிந்திருந்தது. அன்று இரவு நட்சத்திரங்களின் ஒளியில் புறப்பட்டன.

ஒரு வாரம் நடந்திருப்பார்கள். திடீரென்று வழி முட்டி நின்றது. அங்கே ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று முளைத்திருந்தது. அதை விட்டு விலகி வெகுதூரம் சுற்றி நடந்தார்கள். மறுபடியும் ஓர் இடத்தில் வழி முட்டியது. அந்த இடத்தில் வேலி போட்டு அடைத்திருந்தார்கள். கரும்பு, வாழை பயிரிட்டிருந்தார்கள். கரும்பின் வாசனையால் வேலியின் அருகில் போன ஒரு யானை, தும்பிக்கையால் தொட்டதும் மின் அதிர்ச்சி ஏற்பட்டது. பயந்து ஓடி வந்துவிட்டது. மற்ற யானைகளையும் எச்சரித்தது. அப்பு எல்லாவற்றையும் பார்த்து மிரண்டு போயிருந்தது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

மறுபடியும் பழைய பாதையைத் தேடி யானைக்கூட்டம் நடந்தது. அப்போது தூரத்தில் நெருப்பு வெளிச்சம் தெரிந்தது. பெரிய நெருப்பும் அதிலிருந்து டம்டமார் என்று ஓசைகளும் கேட்டன. நெருப்பைச் சுற்றிலும் மனிதர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. பாதை மாறி வந்துவிட்டோமோ என்று ஒன்றுக் கொன்று முணுமுணுத்தன. அப்பு இதுவரை நெருப்பைப் பார்த்த தில்லை. முதல்முறையாக அதைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. அம்மாவின் பின்னாலேயே அண்டிக்கொண்டு நடந்தது.

‘டமார்’ என்று வேட்டுச்சத்தம் கேட்டது. அத்துடன் வானத்தில் நெருப்பின் வெளிச்சம் தெரிந்தது. அப்புவின் மூளை குழம்பிவிட்டது. என்ன நினைத்ததோ திரும்பிக் காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது. இருட்டில் முட்டி மோதி ஓடியது. அம்மாவின் பிளிறல் சத்தம் கேட்டது. ஆனால், அப்பு நிற்கவில்லை. ஓட ஓட அம்மாவின் சத்தம் குறைந்துகொண்டே சென்றது. ஒரு பெரிய பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோதுதான் அதன் ஓட்டம் நின்றது.

கும்மிருட்டு. பூச்சிகளின் ரீங்காரம். ஆந்தைகளின் குரல் விட்டுவிட்டுக் கேட்டது. புலியின் உறுமலும் நரிகளின் ஊளைச்சத்தமும் மான்களின் செருமலும் காட்டெருமைகளின் பொருமலும் கேட்டன. அப்பு மெல்ல பள்ளத்திலிருந்து எழுந்தது. வழி தெரியவில்லை. அம்மாவைத் தேடிப் பிளிறியது.

“அம்மா எனக்குப் பயமாருக்கும்மா...”

அம்மாவைக் காணவில்லை. அம்மாவின் செல்லமான அதட்டலும் கேட்கவில்லை. பசித்தது. எப்படிப் பாதை மாறியது? அம்மா தேடிக்கொண்டிருப்பாரே! எங்கெல்லாம் அலைகிறாரோ! அப்பா அண்ணன், அக்கா எல்லோரும் தேடுவார்களே... என்ன நடந்தாலும் அம்மா கூடவே இருந்திருக்க வேண்டும். வலசை போகாமல் அலைவார்களே என்று வருந்தியது அப்பு.

“அம்மா... அம்மா... நீ எங்கே இருக்கே?” என்று அழுதுகொண்டே தட்டுத்தடுமாறி திசை தெரியாமல் நடந்துகொண்டிருந்தது.

அன்று இரவு முழுவதும் அலைந்தது அப்பு. இப்போதும் அம்மாவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. அப்புவின் குரல் உங்களுக்குக் கேட்கிறதா? அப்புவை அதன் அம்மாவிடம் சேர்த்துவிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x