Published : 18 Mar 2020 08:49 AM
Last Updated : 18 Mar 2020 08:49 AM

மாய உலகம்! - உங்களுக்கான சாந்தி நிகேதன் எங்கே?

மருதன்

நான் சிறுவனாக இருந்தபோது எனக்குப் பிடிக்காத ஓரிடம் இருந்தது. ஆனால், அங்கேதான் தினம் தினம் சென்றேன். அங்கேதான் நாள் முழுக்க அடைந்து கிடந்தேன். அங்கிருந்துதான் என் வாழ்க்கை ஆரம்பமானது என்று ஏக்கமும் வருத்தமும் கலந்த குரலில் விவரிக்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.

பெரிய கதவொன்று இருக்கும். இரும்புக் கதவு. நாங்கள் உள்ளே சென்றதும் சாத்திவிடுவார்கள். என்னிடமிருந்து என் உலகம் துண்டிக்கப்பட்டுவிடும். சில அடிகள் நடந்தால் இரும்புத் தண்டவாளத் துண்டு ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். எத்தனை வலுவாகக் காற்று வீசினாலும் அது சற்றும் அசைந்து கொடுக்காது. இரும்பு கோலொன்றை எடுத்து ‘டண் டண் டண்’ என்று அடிப்பார்கள்.

எங்களுக்கென்று ஓர் அறை இருந்தது. அங்கே எனக்கென்று ஓரிடம். ஆசிரியர் வருவார். என்னைச் சுற்றிக் காற்றில் சொற்களை மிதக்கவிடுவார். அவற்றை நான் என் கைகளால் பாய்ந்து பிடிக்க முயல்வேன். ஆனால், என் விரல்களின் இடுக்குகள் வழியே அவை நழுவிச் சென்றுவிடும். அவர் வெளியேறிச் சென்றதும் இன்னொருவர் வருவார். மேலும் சொற்கள். ஒவ்வொன்றும் என்னைவிட்டு விலகி நிற்கும். ஒவ்வொன்றும் என்னை அச்சுறுத்துவது போல் பார்க்கும்.

இரும்புத் தண்டவாளம். இரும்பு இசை. இரும்புக் கதவு. இரும்புச் சொற்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் இப்படியோர் உலகம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா? ஒரு குழந்தை பிறந்ததும் தூக்கி எடுத்துவந்து அங்கே அமர்த்திவிடுவார்களா? அங்கிருந்துதான் அந்தக் குழந்தை தன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா? அங்கிருந்துதான் அந்தக் குழந்தை உலகைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஒரே ஆறுதல் என் வகுப்பறையில் அமைந்திருந்த ஒரு சிறிய ஜன்னல். அதன் வழியே மரக்கிளையின் ஒரு பகுதி மட்டும் தெரியும். அந்தக் கிளையில் சில இலைகள் ஓயாமல் சலசலத்துக்கொண்டிருக்கும். ஒவ்வோர் இலையின் நடனத்தையும் தனித் தனியே மணிக்கணக்கில் கவனிப்பேன். மணிக் கணக்கில் கனவுகளில் மூழ்கிக் கிடப்பேன். அதில் ஒரு கனவு எனக்குப் பிடித்த பள்ளி பற்றியது.

என் பள்ளி கல்கத்தா பள்ளிபோல் இருக்காது. கல்கத்தாவிலிருந்து, அதன் ஆரவாரத்திலிருந்து, அதன் கூச்சல்களிலிருந்து, அதன் பரபரப்புகளிலிருந்து குறைந்தது 100 கி.மீ. தள்ளி என் பள்ளியை அமைப்பேன். அந்தப் பள்ளியை நீங்கள் நெருங்கும்போது ஒரு பெரிய இரும்புக் கதவைப் பார்க்க மாட்டீர்கள். உயர்ந்த, பெரிய மரங்களையே காண்பீர்கள்.

என் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஓர் அறைக்குள் அடைந்து கிடக்க மாட்டார்கள். பல நூறு கிளைகளோடு விரிந்திருக்கும் மரங்களுக்கு மத்தியில் அவர்கள் வாழ்வார்கள். மரங்களின் நிழலில் அவர்கள் வாழ்க்கை தொடங்கும். ஒவ்வொரு கிளையிலும் ஆயிரம் இலைகள் கொத்துக் கொத்தாக நடனமாடுவதைப் பார்ப்பார்கள். அந்த மரமே அவர்கள் வகுப்பறையாக இருக்கும்.

உங்கள் இதயத்தின் ஒவ்வொரு கதவையும் ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து வையுங்கள் என்று என் மாணவர்களிடம் சொல்வேன். நீங்கள் வாழும் உலகின் நன்மைகளும் தீமைகளும்; உயர்வும் தாழ்வும்; மகிழ்ச்சியும் துயரமும்; வலியும் ரணமும்; வறுமையும் செழிப்பும் உங்களை வந்து தீண்டட்டும். ஒவ்வொன்றையும் நெருங்கிச் சென்று பாருங்கள். ஒவ்வொன்றையும் அள்ளிப் பருகுங்கள். ஒவ்வொன்றும் உங்களின் ஒரு பகுதி. ஒவ்வொன்றும் உங்கள் உலகம். ஒவ்வொன்றும் ஓர் அனுபவம். ஒவ்வொன்றும் நீங்கள்.

செம்மண்ணும் மழை நீரும் போல் எண்ணும் எழுத்தும் கலையும் அறிவியலும் வரலாறும் கணிதமும் பொருளியலும் தத்துவமும் உங்கள் இதயத்தில் ஒன்று கலக்கட்டும். உங்கள் அறிவின் வாசமும் புத்துணர்ச்சியும் உலகையே தொற்றிக்கொள்ளட்டும். மனிதனைக் கொண்டாடுங்கள். உழைப்பைக் கொண்டாடுங்கள். உயிர்களைக் கொண்டாடுங்கள். உயிரற்ற அனைத்துக்கும் உயிரூட்டுங்கள்.

உன் நாடு எது என்று கேட்டால் உலகம் என்று சொல்லுங்கள். உனக்குப் பிடித்த இடம் எது என்று கேட்டால், என் பள்ளி என்று சொல்லுங்கள். உன் மொழி எது என்று கேட்டால் அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; நகரவாசி முதல் கிராமவாசி வரை; ஆதி மனிதன் முதல் பழங்குடி மனிதன் வரை ஒவ்வொரு மனிதனின் நாவிலும் தவழும் மொழி என்று சொல்லுங்கள். உன் மதம் எது என்று கேட்டால் இலையின் மதம், காற்றின் மதம், இயற்கையின் மதம் என்று சொல்லுங்கள்.

நீ என்ன கற்றுக்கொண்டாய் என்று கேட்டால் இரும்புத் தண்டவாளம் போல் கட்டுண்டு கிடக்காமல், இலை போல் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, என் சூழலோடு ஒன்றுகலந்து வாழ்வதற்குக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள்.

உன் கால்கள் உன்னை உலகெல்லாம் அழைத்துச் செல்லட்டும். சக மனிதர்களை வேறுபாடின்றி உன் கைகள் தழுவிக்கொள்ளட்டும். உன் கண்களின் கனிவு அனைவரையும் நிறைக்கட்டும். இந்தியாவின் விடுதலைக்காக மட்டுமல்ல, அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்காவும் உன் இதயம் ஏங்கட்டும். இந்தியர்களின் உயர்வுக்காக அல்ல, ஒவ்வொரு மனிதனின் உயர்வுக்காகவும் உன் மூளை சிந்திக்கட்டும்.

ஒவ்வொரு மனிதனின் பாடலையும் கேள். உனக்கான பாடல் உருவாகி வரும். ஒவ்வொரு கவிதையையும் படி. உனக்கான வரி தோன்றும். ஒவ்வொரு பாதையையும் நடந்து பார். உனக்கான வழி பிறக்கும். ஒவ்வொரு பறவையையும் கவனி. நீ பறக்க ஆரம்பிப்பாய்.

எல்லா மரபுகளையும் எல்லாப் பண்பாடுகளையும் எல்லா வரலாறு களையும் எல்லா மதங்களையும் அள்ளி உள்வாங்கிக்கொள். ஒவ்வோர் ஓடையின் நீரையும் பருகு. ஒவ்வொரு மலையையும் வியந்து பார். ஒவ்வொரு பறவையையும் பின்தொடர்ந்து ஓடு. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒவ்வொரு மழைத் துளியையும் ஒவ்வொரு மலரையும் பாடு. மலரின் ஒவ்வொரு இதழையும் பாடு.

அறிவும் அழகும் அன்பும் தவழும் ஓர் இடமாக என் பள்ளி இருக்கும். அங்கே என்றென்றும் அமைதி நிறைந்திருக்கும் என்பதால் சாந்தி நிகேதன் என்று என் பள்ளியை அழைப்பேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x