Published : 18 Mar 2020 08:36 AM
Last Updated : 18 Mar 2020 08:36 AM

புதியதோர் உலகம் 07: நாங்களும் இந்த உலகின் குழந்தைகளே!

ஆதி

என்னைய ரொம்பக் குட்டிப் புழுன்னுதானே நினைக்கிறீங்க. வாங்க இந்தத் தடவ, என்னோட பெரிய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்: லாய் லாய் யானைக் குட்டி, தக்தீர் புலிக் குட்டி, பேபூ கரடிக் குட்டி, இரா ஓங்கில் குட்டி, கிர் சிங்கக் குட்டிகள் எல்லாம் என்னோட தூரத்து நண்பர்கள், தெரியுமா?

இப்ப எதுக்கு இந்தக் குட்டிகளை அறிமுகப்படுத்துறேன்னு தோணுதுல்ல? இந்தக் காட்டுயிர்க் குட்டிகளை வைத்து ஒளிப்படக் கதைப் புத்தகங்களைச் சென்னை தூலிகா பதிப்பகம் வெளியிட்டிருக்கு. நாம அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தியக் காட்டுயிர்களைப் பற்றிய நிஜக் கதைகளை, இந்த நூல் வரிசை சொல்லுது. இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, இந்த உயிரினங்கள் பத்தி ஆராய்ச்சி நடத்தினவங்களே புத்தகங்களை எழுதியிருக்கிறதுதான். நம்மிடையே வாழும் குட்டி உயிரினங்களைப் பற்றிய இந்தக் கதைகள் எளிமையாவும் சுவாரசியமாவும் இருக்கு.

குட்டி டால்பின் இரா

சேகர் தத்தாத்ரி

ஓங்கில் (டால்பின்) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலூட்டியான ஓங்கில் கடலில் வாழும். நீருக்கு மேலே தாவி, காண்பவரை வியக்க வைக்கும். அதேநேரம் நன்னீரில் வாழும் ஓங்கில்களும் உண்டு, தெரியுமா? அவற்றில் ஒன்றுதான் ஐராவதி வகை ஓங்கில்.

இந்தியாவின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி, ஒடிசாவில் உள்ள சிலிகா. இந்த ஏரியில் ஐராவதி ஓங்கில்கள் வாழ்கின்றன. மீன் பிடிக்க, சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல எனப் பல்வேறு காரணங்களுக்காக, சிலிகா ஏரியில் நிறைய படகுகளும் செல்கின்றன. இந்தப் படகுகள் செலுத்தப்படுவதற்குக் கூர்மையான தகடுகளைக் கொண்ட உந்தி (Propeller) பயன்படுகிறது.

உந்தியின் விசிறிக்கு அருகே ஓங்கில்கள் தெரியாமல் சென்றுவிட்டால், அது ஓங்கில்களின் உடலை வெட்டிவிடும். அதேபோல் தெரியாமல் மீன் வலைகளில் சிக்கிக்கொண்டாலும், சுவாசிக்க முடியாமல் ஓங்கில்கள் இறக்க வேண்டியதுதான். சிலிகாவில் 150 ஐராவதி ஓங்கில்கள் மட்டுமே உள்ளன என்பது கவலைக்குரிய செய்தி. இந்தப் புத்தகத்தை எழுதிய சேகர் தத்தாத்ரி, சென்னையைச் சேர்ந்த பிரபல காட்டுயிர் ஆவணப் பட இயக்குநர்.

குட்டி பேபூ கரடி

தீபா பல்சாவர்

ஒரு காட்டில் பேபூ என்ற குட்டிக் கரடி தன் சகோதரனுடன் வாழ்ந்துவந்தது. உயிரினங்கள் சிறு வயதில் விளையாடுவதைப் போலவே, இரண்டும் மோதிக்கொள்வது வழக்கம். உணவு தேடுதல் உட்பட பல விஷயங்களைக் குட்டிகளுக்கு அம்மா கரடி கற்றுத்தருகிறது.

ஆனால், மனிதர்களோ இரவில் காட்டுக்குள் நுழைந்து குட்டிக் கரடிகளை கடத்திச் சென்றுவிடுகிறார்கள். காட்டிலிருந்தும் குடும்பத்தினரிடம் இருந்தும் அவை பிரிக்கப்படுகின்றன. கரடி வித்தைகாட்டுபவரிடம் அந்தக் கரடிகள் விற்கப்படுகின்றன. அவர்கள் அந்தக் கரடிகளின் மூக்கில் துளையிட்டு, கயிறை நுழைத்துக் கட்டுகிறார்கள். குட்டிகளின் பற்களும் நகங்களும் பிடுங்கப்படுகின்றன.

வடஇந்தியாவிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாம்பு வித்தைக்காரர்கள்போல், கரடி வித்தைக்காரர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் வழியாகக் கரடிகள் இன்னும் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன, விற்கப்படுகின்றன.

தக்தீர் எனும் புலிக்குட்டி

லத்திகா நாத் ராணா

தக்தீர் என்றொரு புலிக்குட்டி. மூங்கில் தொகுதிக்கு அருகேயிருந்த ஒரு குகையில் தன் இரண்டு சகோதரி, தாயுடன் வாழ்ந்துவந்தது. தாய் இரை தேடப் போகும்போது குட்டிகள் ஒன்றுடன் மற்றொன்று மோதி விளையாடும். ஆனால், தக்தீரோ காட்டுக்குள் ஒருநாள் தனியாகச் சென்றுவிட்டது. இப்படிச் செல்வதால் என்ன நடக்கிறது என்பதே கதை.

புள்ளிமான், மயில், மந்தி, கரடி போன்றவற்றை தக்தீர் பார்த்தாலும் ஒரு சிறுத்தை வரும்போது என்ன செய்வது என்று அதற்குத் தெரியவில்லை. தன் குகைக்கான வழியைத் தவறவிட்டுவிட்டு, தக்தீர் உதவி தேடிக் குரல் கொடுக்கிறது. அது தன் தாயைக் கண்டறிந்ததா என்பதை இந்தக் கதையின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.

லாய் லாய் யானைக் குட்டி

சேகர் தத்தாத்ரி

தன்னுடைய தாய், சித்திகளின் நெருக்கத்தில் லாய் லாய் குட்டி யானை பாதுகாப்புடன் இருக்கிறது. யானைக் குடும்பங்களுக்கு முதிர்ந்த பெண் யானைகளே தலைமை வகிக்கின்றன. ஆண் யானைகள் கூட்டத்துடன் சேருவதில்லை.

யானைக்குட்டிகள் தண்ணீரில் விளையாட விரும்பும். யானைகள் நீந்தும்போது தும்பிக்கை நுனி மட்டும் தண்ணீருக்கு வெளியே சுவாசிப்பதற்கு வசதியாக நீட்டியிருக்கும். குளித்த பிறகு தலை, முதுகுப் பகுதி மீது யானைகள் மண்ணை வாரி இட்டுக்கொள்ளும். யானை இப்படி மண்ணை வாரி இட்டுக்கொள்வது தவறு என்று நினைக்கிறோம். ஆனால், யானையின் தோல் இடுக்குகளில் குட்டிப்பூச்சிகள் தொல்லை கொடுக்கும். அதைத் தடுக்கவே இந்த மண் குளியல்.

தாகத்தையும் பெரும் பசியையும் தீர்த்துக்கொள்ள காடு முழுவதும் யானை செல்லும். இப்படி அவை செல்வதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் பாதைகளே, யானை வழித்தடம். இன்றைக்குப் பெருமளவு காடுகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால், உணவு கிடைக்காமல் யானைகள் அவதிப்படுகின்றன, அழிக்கப்பட்ட காட்டுக்கு வெளியே வரவும் செய்கின்றன.

தீனா பென்னும் கிர் சிங்கங்களும்

மீரா ஸ்ரீராம்-பிரபா ராம்

ஒரு காலத்தில் ஆசியா முழுவதும் வாழ்ந்துவந்த ஆசிய சிங்கங்கள், இன்றைக்கு மற்ற பகுதிகளில் அற்றுப்போய்விட்டன. இந்தியாவின் மேற்கில் குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் மட்டும் ஆசிய சிங்கங்கள் எஞ்சியுள்ளன. சுமார் 350 ஆசிய சிங்கங்கள் மட்டுமே இன்றைக்கு வாழ்கின்றன. இந்தக் காட்டுப்பகுதிகளில் மாடு, எருமைகளை மேய்க்கும் மால்தாரி இன மக்களும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். இரு தரப்பினரும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரே பகுதியில் வாழ்கிறார்கள்.

ஆப்பிரிக்காவிலும் சிங்கங்கள் உள்ளன, ஆனால், அவை வேறு வகை. ஆசிய சிங்கங்களைவிட அவை அளவில் பெரியவை. ஆப்பிரிக்க ஆண் சிங்கங்களின் பிடரி முடி ஆசிய சிங்கங்களைவிடப் பெரிதாக இருக்கும். சிங்கங்கள் மட்டுமே கூட்டமாக வாழும் பெரியபூனைக் குடும்ப உயிரினங்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

இந்தப் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், இந்திய மொழிகளில் கிடைக்கின்றன:

தூலிகா பதிப்பகம் தொடர்புக்கு: 044 - 24991639

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x