Published : 11 Mar 2020 11:52 AM
Last Updated : 11 Mar 2020 11:52 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மைல்கற்கள் பல வண்ணங்களில் இருப்பது ஏன்?

மைல்கற்கள் பல வண்ணங்களில் இருப்பது ஏன், டிங்கு?
- கா. மிதிலேஷ், 1-ம் வகுப்பு, பள்ளிக்கரணை, சென்னை.

ஒரு சாலை தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா, மாவட்ட சாலையா என்பதை எளிதில் அறிந்துகொள்ளும் விதத்தில் மைல்கற்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. மஞ்சளும் வெள்ளையும் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை என்று அர்த்தம். இந்தச் சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. பச்சையும் வெள்ளையுமாக இருந்தால் அது மாநில நெடுஞ்சாலை. இதை மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது. நீலமும் வெள்ளையுமாக இருந்தால் அது மாவட்டச் சாலை. இதையும் மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது. இளஞ்சிவப்பு அல்லது கறுப்புடன் வெள்ளை இருந்தால் அது ஊரகச் சாலை. இதை ஊராட்சி ஒன்றியங்கள் பராமரிக்கின்றன, மிதிலேஷ்.

புளியில் ஏன் உப்புப் போட்டு வைக்கிறார், அம்மா?
- பா. நிபஸ்ரீ, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

உப்பு அதிகமாக இருக்கும் பொருள் நீண்ட காலத்துக்குக் கெட்டுப் போகாது. அதனால்தான் ஊறுகாயில் கூட உப்பு அதிகம் இருக்கும். புளியை மொத்தமாக வாங்கி, ஆண்டு கணக்கில் வைத்துப் பயன்படுத்துவார்கள். அப்படி வைக்கும்போது புளியில் புழு வந்துவிடக் கூடாது என்பதற்காக, உப்பைப் போட்டு வைத்துவிடுவார்கள். இப்படிச் செய்வதால் நீண்ட நாட்களுக்குப் புளி நன்றாக இருக்கும், நிபஸ்ரீ.


குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன, டிங்கு?
- ஏ. சசி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

இந்தியாவில் பிறந்திருந்தாலும் இந்தியாவில் பிறக்காமல் குறிப்பிட்ட ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருந்தாலும் இந்தியரைத் திருமணம் செய்திருந்தாலும் ஒருவர் சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். 2019-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினர் (இந்து, சீக்கியம், சமணம், பவுத்தம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள்) இந்தியாவில் குடியேற விரும்பினால், அவர்கள் இந்தியக் குடியுரிமைக்குத் தகுதியானவர்கள் என்கிறது. இதில் இஸ்லாம் மதம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

புலிகளும் வரிக்குதிரைகளும் தங்கள் உடலில் உள்ள வரிகளின் மூலம் எதிரிகளிடமிருந்து தப்பிவிடுகின்றன என்பதைப் படித்தேன். அது எப்படி, டிங்கு?
- ஜெ. மாரிச் செல்வம், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

பெரும்பாலான விலங்குகளுக்குக் கறுப்பு வெள்ளையாகத்தான் காட்சிப் புலப்படும். நம்மைப் போல் நிறங்கள் புலப்படாது. புலிகளின் கோடுகள் மூலம் அவற்றின் உருவம் முழுமையாகத் (வெளிப்புறக் கோடாக) தென்படாது. அதனால் புலியைச் சட்டென்று கவனித்துவிட முடியாது. புலிகள் புல்வெளியில் நடந்து செல்லும்போது, நிலா வெளிச்சத்தில் இரை விலங்குகளுக்கோ எதிரி விலங்குகளுக்கோ புற்களின் நிழல் போன்ற தோற்றத்தைத் தந்துவிடும். இதனால் புலி எதிரியிடமிருந்து தப்பிவிடுகிறது. இரையைப் பிடித்துவிடுகிறது.

வரிக்குதிரை புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும் போது எதிரிகளின் கண்களுக்குச் சட்டென்று புலப்படாது. கூட்டமாக வரிக்குதிரைகள் இருக்கும்போது எதிரிகளின் கண்களுக்கு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன இந்தக் கோடுகள். இதனால் எதிரிகளிடமிருந்து தப்பிவிட முடிகிறது. சமீப ஆய்வுகளின்படி வரிகள் மூலம் ஒட்டுண்ணி ஈக்களின் தொல்லைகளில் இருந்தும் வரிக்குதிரைகள் தப்பிவிடுவதாகச் சொல்கிறார்கள், மாரிச் செல்வம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x