Published : 04 Mar 2020 10:28 AM
Last Updated : 04 Mar 2020 10:28 AM

மாய உலகம்: என் இசைக்குக் காதுகள் தேவையில்லை

மருதன்

திடீரென்று காதுக்குள் சத்தம் கேட்க ஆரம்பித்தபோது பீத்தோவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், அவர் வானத்தில் மிதந்துகொண்டிருந்த காலம் அது. எங்கு போனாலும் ‘மொசார்ட்டுக்கு அடுத்து நீங்கள்தான்’ என்று தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் சொல்லிச் சொல்லி மாய்ந்துகொண்டிருந்தார்கள். இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள் என்று எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்துகொண்டிருந்தன.

“என்ன பீத்தோவன், 27 வயதிலேயே இப்படி நட்சத்திரம்போல் மினுமினுத்துக்கொண்டிருக்கிறாயே, உன் கனவு நிறைவேறிவிட்டதா” என்று நண்பர்கள் பொறமை கலந்த மகிழ்ச்சியுடன் கேட்டபோது, பீத்தோவன் ’இல்லை’ என்று தலையாட்டினார். நட்சத்திரம் அழகானது, சந்தேகமில்லை. ஆனால், என் கனவு நட்சத்திரமாக கண் சிமிட்டுவதல்ல. முழு நிலவாக மலர்வது. முழு நிலவாகவே நிலைத்திருப்பது. வானம் முழுக்க நிறைந்திருந்து பூமி முழுக்க குளிர்ச்சியைப் பொழிவது.

கண்கள் முழுக்க கனவுகளுடன் இருந்ததால் காதுகளின் கூச்சலை, பீத்தோவன் கண்டுகொள்ளாமலேயே இருந்துவிட்டார். ஒரு நாள் வயலினின் ஒலி அவருக்கு மிகவும் சன்னமாகக் கேட்டது. “இதென்ன, இவ்வளவு மெலிதாக வாசிக்கிறாய், இப்படி இசைக்கக்கூடாதே நண்பரே” என்று தன்னுடைய ஆர்கெஸ்ட்ரா கலைஞரிடம் அவர் கோபித்துக்கொண்டபோது, அந்தக் கலைஞர் விழித்தார். “நான் எப்போதும் போல்தான் வாசிக்கிறேன், பீத்தோவன். உங்களோடு பணியாற்றும்போது நான் தவறு செய்வேனா? என்ன ஆகிவிட்டது உங்களுக்கு??

இன்னொரு நாள் பேச்சு சத்தமும் சரியாகக் கேட்காமல் போனது. என்ன சொன்னீர்கள்? இன்னொரு முறை சொல்லுங்கள் என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுத் தெரிந்துகொண்டு பதிலளிக்க ஆரம்பித்தார் பீத்தோவன். பயிற்சிக்கு இடையில் யாரேனும் ஏதேனும் விளக்கம் கேட்டால், இருங்கள், நானே வந்து விளக்குகிறேன் என்று ஓடிப் போனார். எங்கே கொஞ்சம் சத்தமாக வாசி, கேட்போம் என்று வயலினுக்கு மிக அருகில் சென்று நெருங்கிக்கொண்டார்.

‘‘என்னவோ தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக காதில் ஏதேதோ சத்தம் வருகிறது. எங்கிருந்து வருகிறது, எதனால் என்று தெரியவில்லை. புதிராக இருக்கிறது’’ என்று நண்பரொருவருக்கு வியப்போடு எழுதினார் பீத்தோவன். ‘‘மற்றபடி வழக்கம்போல், ஒன்பதாவது சிம்பொனிக்காகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். அது நல்லபடியாக முடிந்துவிட்டால் போதும்.’’

காதுகள் கேட்பதாக இல்லை. எப்போதெல்லாம் அவர் ஒரு பெரிய நிகழ்ச்சியொன்றைத் திட்டமிடுகிறாரோ, எப்போதெல்லாம் முக்கியமான பயிற்சிகளை ஆரம்பிக்கிறாரோ அப்போதெல்லாம் இரண்டு காதுகளும் கோபம் கொண்டு கதவுகளைத் தாழ்போட்டு அடைத்துக்கொண்டன. ஆண்டுகள் செல்லச் செல்ல நிலைமை மேலும் மோசமடைந்தது.

ஒரு நாள் காதுகள் சத்தமிடுவதை நிறுத்திக்கொண்டன. பிறகு சத்தம் அனைத்தும் நின்று போனது. இறுதியில், ஓர் இசைக்கலைஞர் எதைக் கண்டு அஞ்சுவாரோ அது அவருக்குக் கிடைத்தது. ஓசையற்ற உலகம். ஆனால், பீத்தோவன் மற்றோர் இசைக்கலைஞர் அல்ல என்பதால், அவர் அந்த உலகைக் கண்டு அஞ்சவில்லை.

வயலினை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வருடிக்கொடுக்க ஆரம்பித்தார். ’எனக்கும் இசைக்குமான உறவு அறுபட்டுவிட்டது என்று எல்லோரும் சொல்கிறார்கள். உனக்கு இப்படி ஆக வேண்டுமா என்று வருந்துகிறார்கள். உனக்கும் எனக்குமான உறவு காதுகளைக் கொண்டு அல்ல, இதயத்தைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நீயும் நானும் உரையாடிக்கொள்வதற்கு, நீயும் நானும் கைகளைக் கோத்துக்கொண்டு வானம் முழுக்கச் சுற்றித் திரிவதற்குக் கேட்கும் திறன் வேண்டுமா என்ன?

எனக்குக் கேட்கும் திறன் இல்லை என்பதால் உன்னை இனி கையில் எடுக்காமல் இருந்துவிடப் போகிறேனா? என் நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக்கொள்ளாமல் இருக்கப் போகிறேனா? அல்லது நீதான் பாடாமல் இருந்துவிடப் போகிறாயா? நீ பேசுவதை, பாடுவதை, சிரிப்பதை, அழுவதைக் கேட்கக் காதுகள் எதற்கு? என் உடல் முழுவதையும் திரட்டியல்லவா உன் அதிர்வுகளை இதுவரை நான் உள்வாங்கி வந்திருக்கிறேன்? எது என் மையமோ, எது என் உயிரோ, என் உயிரில் எது பீத்தோவனாக திரண்டிருக்கிறதோ அதையல்லவா நீ மீட்டுகிறாய்? அத்துடன் அல்லவா நீ உரையாடுகிறாய்?

அந்த உரையாடலைத்தான் என் இசை வழியே நான் ஒவ்வொருவருக்கும் கடத்திக்கொண்டு போகிறேன். கருவிகளிலிருந்துதான் பாய்கிறது என்றாலும் என் இசை முடிவடையும் இடம் காதுகளல்ல. எங்கும் தேங்காமல் உயிரோட்டத்துடன் ஓடிக்கொண்டே இருக்கும் என் இசை. ஒவ்வொரு மனிதனையும் அடைந்து, ஒவ்வொருவருக்குள்ளும் குருதி போல் நிறைந்திருக்கும் வரை அதன் பயணம் முடிவடையாது.

ஒவ்வொரு மனிதனின் கண்ணீரையும் என் இசை அகற்றும். துவண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என் இசை ஆறுதல் அளிக்கும். உழைத்துக் களைத்த ஒவ்வொருவரையும் என் இசை வருடிக்கொடுத்து உயிர் துடிப்புடன் இருக்க வைக்கும்.

அன்பெனும் மொழியைப் புரிந்துகொள்ள காதுகள் தேவையில்லை. விடுதலை எத்தனை அழகானது என்பதை உணரக் கண்கள் தேவையில்லை. மனிதநேயத்தை உணர்த்தும் வலிமை சொற்களுக்கு இல்லை. என் இசைக்குப் புலன்கள் இல்லை. உருவமில்லை. மொழியில்லை. எல்லைகள் இல்லை. பாகுபாடுகள் இல்லை. காலம் இல்லை.

நான் இருக்கும்வரை என் வயலின் பாடிக்கொண்டே இருக்கும். மனிதன் இருக்கும்வரை அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதை நான் என் இதயத்தால் கேட்பேன்.’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x