

மிது கார்த்தி
காலி டம்பளரில் தண்ணீரைக் கொண்டுவர முடியுமா? ஒரு சோதனையைச் செய்யலாமா?
என்னென்ன தேவை?
டம்ளர் 3
டிஸ்யூ பேப்பர் 2
தண்ணீர்
ஊதா, சிவப்பு மை
எப்படிச் செய்வது?
# டிஷ்யு பேப்பரை 20 செ.மீ. நீளத்துக்கு மடித்துக் கொள்ளுங்கள்.
# இரண்டு டம்ளர்களை எடுத்து, அவற்றில் பாதியளவுக்கு மேல் சம அளவில் தண்ணீரை ஊற்றுங்கள்.
# ஒரு டம்ளரில் ஊதா மையை ஊற்றிக் கலக்கவும். இன்னொரு டம்ளரில் சிவப்பு மையை ஊற்றிக் கலக்கவும்.
# இரண்டு டம்ளர்களுக்கு இடையே காலி டம்ளரை வையுங்கள்.
# இப்போது டிஷ்யு பேப்பரை ஊதா மை டம்ளரில் பாதி இருக்கும்படியும் மீதி பாதி காலி டம்ளரில் இருக்கும்படி வையுங்கள்.
# இன்னொரு டிஷ்யு பேப்பரை பாதி அளவு காலி டம்ளரில் இருக்கும்படியும் மீதி பாதி சிவப்பு மை டம்ளரில் இருக்கும்படியும் வையுங்கள்.
# இரண்டு மணி நேரம் கழித்து மூன்று டம்ளர்களையும் பாருங்கள்.
# ஊதா மை டம்ளரிலிருந்தும் சிவப்பு மை டம்ளரிலிருந்தும் தண்ணீர் டிஷ்யு பேப்பர் வழியாகச் சென்று காலி டம்ளரில் இறங்கியிருக்கும். மூன்று டம்ளர்களிலும் தண்ணீர் இருப்பதைப் பார்க்க முடியும். காலி டம்ளருக்குத் தண்ணீர் சென்றது எப்படி?
காரணம்
தண்ணீருக்கு ‘ தந்துகிக் கவர்ச்சி’ (capillary action) என்ற திறன் உண்டு. மிக நுண்ணிய துவாரமுடைய ஒரு குழாயில் திரவ மட்டத்தில் ஏற்படும் உயர்வு அல்லது தாழ்வே த்ந்துகிக் கவர்ச்சி. இந்தத் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக, டிஷ்யு பேப்பர் தண்ணீரை உறிஞ்சும் திறனைப் பெறுகிறது. இதனால் தண்ணீர் டிஷ்யு பேப்பர் வழியாகக் காலி டம்ளருக்குப் பயணிக்கிறது.