அன்பை அள்ளித் தரும் சுனாமிகா

அன்பை அள்ளித் தரும் சுனாமிகா
Updated on
2 min read

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில்லில் ஒரு குட்டி பொம்மை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பொம்மையின் பெயர் சுனாமிகா. இதுவரை இந்தக் குட்டிப் பொம்மை உலகம் முழுவதும் 60 லட்சம் பேரிடம் போய்ச் சேர்ந்துள்ளது. உறவுகளை இழந்தவர்களுக்கு மனரீதியான ஆறுதலைத் தருவதே இக்குட்டி பொம்மையின் சிறப்பு. இந்தக் குட்டிப் பொம்மை எப்படி வந்தது?

அமைதியாக இருந்த வங்கக் கடல் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மக்களை அழிக்கும் வில்லனாக மாறியது. ஆமாம், அன்றுதான் சுனாமி பேரழிவைக் கடலோர மக்கள் சந்தித்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமியில் உயிரிழந்தார்கள். நிறைய குழந்தைகள் அம்மா, அப்பாவை இழந்தார்கள். இன்னும் நிறைய அம்மா, அப்பாக்கள் குழந்தைகளை இழந்தார்கள்.

இப்படி சுனாமியால் உறவுகளை இழந்த மீனவப் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் உருவானவள்தான் இந்தச் சுனாமிகா. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறு துணிகளைக் கொண்டு செய்த மிகச்சிறிய பொம்மையே சுனாமிகா. இந்தச் சுனாமிகா ஆனந்தம், நம்பிக்கையின் அடையாளம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இவள் நல்ல தோழி. உறவுகளை இழந்தோருக்கு மனரீதியாக ஆறுதலைத் தருகிறாள் சுனாமிகா.

இந்தச் சுனாமிகா கதை ஐ.நா. சபையின் துணை நிறுவனமான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்கதைச் சுருக்கத்தைப் பார்ப்போமா...

குட்டிப்பெண் சுனாமிகா கடலின் அடியில் வாழ்ந்துவந்தாள். அவள் சூரியனைப் பார்த்ததே இல்லை. கடலுக்கு அடியில் சூரிய வெளிச்சம் வராது. அதனால் தனியாகக் கடலுக்கடியில் வாழ்ந்துவந்தாள். ஒருநாள் நட்சத்திர மீன் அவளிடம் வந்து, “சூரியனைப் பார்த்திருக்கிறாயா?” எனக் கேட்டது.

அதற்கு அவள், “ நான் பார்த்ததே இல்லை” என்று பதில் சொன்னாள்.

உடனே ஒரு முனிவரைப் பார்த்து “சூரியனைப் பார்க்க என்ன வழி?” என யோசனை கேட்டாள் சுனாமிகா.

அதற்கு, “ 21 நாட்களுக்குச் சூரியனை நினைத்துக் கொண்டிருந் தால் நிச்சயம் பார்ப்பாய்” என்றார் முனிவர்.

சுனாமிகா நாள்தோறும் சூரியனை நினைத்தபடியே இருந்தாள். 21-ம் நாள் முடிவில் அவள் சூரியனைப் பார்த்தாள்.

அப்போது சூரியன் சுனாமிகாவிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டது. அதற்கு, “ நான் தனியாகவே இருப்பதால் எனக்கு நிறைய நண்பர்கள், உறவுகள் தேவை” என்றாள். உடனே சூரியன் “இது கண்டிப்பாக நடக்கும்” என்று சொன்னது.

ஒரு நாள் கடற்கரையோரம் அவள் நடந்து போனபோது ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தாள். அந்தப் பெண்ணிடம் சென்று “ஏன் அழுகிறீர்கள்?” என்று சுனாமிகா கேட்டாள்.

அதற்கு அந்தப் பெண், “கடல் அலையால் எனது மகளை இழந்து விட்டேன்” என்றார். அதற்குச் சுனாமிகா, “ உங்கள் மகள் போல எனது அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

உடனடியாக அந்தப் பெண், “ எனது மகளாக நீ இருக்கிறாயா” என்று கேட்டதும், “நிச்சயமாக இருக்கிறேன்” என்று சுனாமிகா கூறினாள்.

அதேபோல் குட்டிப்பையன் ஒருவன் அவளிடம் வந்து, “நீ எனது தோழியாக இருக்கிறாயா?” என்று கேட்டான். அதையும் உடனே ஏற்றுக்கொண்டாள். ஏராளமான குழந்தைகள் அவளிடம் நட்பு பாராட்டத் தொடங்கினார்கள். இதன் பின் பல வீடுகளிலும் சுனாமிகா அன்பை வீசத் தொடங்கினாள்.

இதுதான் சுனாமிகா வந்த கதை. இந்தக் கதை பற்றியும், சுனாமிகா பொம்மை பற்றியும் சுனாமி திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக் கூறும்போது, “சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் பயனற்ற துணிகளைக் கொண்டு சுனாமிகா பொம்மையை உருவாக்கப் பெண்களுக்குப் பயிற்சி தந்தது. இத்திட்டத்தின் கீழ் பிள்ளைச்சாவடி, பொம்மையார் பாளையம், சின்ன முதலியார் சாவடி, தந்திராயன் குப்பம், நடுக்குப்பம், சோதனை குப்பம் என 6 மீனவக் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. இங்குள்ள மீனவப் பெண்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் சுனாமிகா பொம்மையைச் செய்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

சுனாமிகா பொம்மை இந்தியா, ஜப்பான் உட்படப் பல ஊர்களில் 60 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. சுனாமிகா கதையானது தமிழ், ஜெர்மன், ரஷ்யன், டேனிஷ், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in