

பெண் கரடிக்கு உடல் நலம் சரியில்லை. “ஓய்வெடு, மூலிகையும் உணவும் எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பியது ஆண் கரடி.
மூலிகைகளைப் பறித்துக்கொண்டது. தேனுக்காகப் பல இடங்களுக்குச் சென்றது. ஒரு தேனடைகூடத் தென்படாததால் ஏமாற்றம் அடைந்தது.
சற்று நேரத்தில் இருட்டிவிடும். ஏதாவது சாப்பிடக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பதற்றம் கரடிக்கு வந்துவிட்டது. வழியில் ஒரு குரங்கு வாழைப்பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டது.
“குரங்கே வணக்கம். என் மனைவிக்கு உடம்பு சரியில்லை. மருந்து கொடுக்கப் போறேன். ஆனால் உணவு இல்லை. கொஞ்சம் பழங்களைக் கொடுத்தால், நானும் மனைவியும் நன்றியுடையவர்களாக இருப்போம்” என்றது கரடி.
“வருத்தப்பட வேண்டாம். இந்தக் குலையில் இருக்கும் பழங்களில் எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்தப் பழங்களை எனக்குப் பத்து நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இப்போது வாழைப்பழங்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் திருப்பிக் கேட்கிறேன்” என்றது குரங்கு.
“இரண்டு நாட்களில் திருப்பித் தந்துவிடுகிறேன். இப்போதைக்குப் பத்து பழங்களை எடுத்துக்கொள்கிறேன். நன்றி தம்பி” என்று நிம்மதியாகக் குகைக்குச் சென்றது கரடி.
இரண்டு நாட்கள் கழித்தும் கரடி பழங்களைத் திருப்பித் தரவில்லை. நான்காவது நாள் கரடியின் குகைக்குச் சென்றது குரங்கு.
”கரடி அண்ணா...”
“என்ன தம்பி? எதுக்குத் தேடி வந்திருக்கே?”
“அண்ணா, பழங்களைத் திருப்பித் தருவதாகச் சொன்னீங்களே, அதான் வந்தேன்.”
“ஐயோ... மறந்துட்டேன் தம்பி. மனைவிக்கு இன்னும் உடம்பு சரியாகலை. இன்னும் ரெண்டு நாட்களில் கொடுத்துடறேன்” என்றது கரடி.
“சரி அண்ணா. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது குரங்கு.
நாட்கள் சென்றன. கரடி பழங்களைத் திருப்பிக் கொடுக்கவில்லை. குரங்குக்குக் கோபம் வந்தது. மீண்டும் கரடியிடம் சென்றது.
“அண்ணா, கொடுத்த வாக்கை மீறலாமா? இன்னுமா உங்கள் மனைவியின் உடல் குணமாகவில்லை? நீங்கள் கேட்டதும் பழங்களைக் கொடுத்தேன். ஆனால், என்னை இவ்வளவு தூரம் அலைய விடுகிறீர்களே, இது நியாயமா?” என்று கேட்டது குரங்கு.
”உன்னோடு ஒரே தொந்தரவாக இருக்கிறது. வாழைப்பழங்களைத் தேடிக்கிட்டுதான் இருக்கேன். கிடைத்தவுடன் உன் முகத்தில் வீசி எறிந்துவிடுவேன். உடம்பு சரியில்லாதவங்களுக்குக் கொடுத்ததை இப்படிக் கறாராகக் கேட்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை” என்று கோபத்துடன் கூறிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டது கரடி.
திகைத்து நின்றது குரங்கு. ‘கரடி அண்ணா இப்படிப் பேசி நான் பார்த்ததே இல்லை. ரொம்பவும் கஷ்டப்படுகிறார் போல. நான் அவரிடம் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.
சில நாட்கள் சென்றன. தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய கரடி, கால் இடறி கீழே விழுந்தது. பலத்த காயம். படுக்கையில் இருப்பதாகக் குரங்குக்குத் தகவல் வந்தது.
உடனே தன்னிடம் இருந்த பழங்களை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, கரடியின் குகைக்குச் சென்றது குரங்கு.
பழங்களுடன் தன்னை நலம் விசாரிக்க வந்த குரங்கைக் கண்டதும் கரடியின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. “நான் உன்னிடம் கடனாக வாங்கிய பழங்களை இன்னும் திருப்பித் தரவில்லை. ஆனாலும் பெருந்தன்மையுடன் என்னைப் பார்க்க வந்திருக்கிறாய். நான் உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை. இன்னும் என் மனைவிக்கு உடல் நலமாகவில்லை. ஆனாலும் எனக்காக உணவு தேடிச் சென்றிருக்கிறார். என்னைத் தவறாக நினைக்காதே” என்றது கரடி.
“நீங்கதான் என்னை மன்னிக்க வேண்டும். இனி அந்தப் பழங்களைத் திருப்பித் தர வேண்டியதில்லை. உங்கள் இருவருக்கும் உடல் நலமாகும் வரை என்னால் முடிந்த பழங்களைக் கொண்டுவந்து தருகிறேன்” என்ற குரங்கை, அணைத்துக்கொண்டது கரடி.
- எஸ். அபிநயா, 11-ம் வகுப்பு,
நாளந்தாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி, நாமக்கல்.