

மிது கார்த்தி
என்னென்ன தேவை?
அகலமான கிண்ணம்
தண்ணீர்
மிளகுத் தூள்
பாத்திரம் துலக்கும் சோப்புக் கரைசல்
எப்படிச் செய்வது?
* கிண்ணத்தில் பாதி அளவுக்குத் தண்ணீரை ஊற்றுங்கள்.
* மிளகுத் தூளை தண்ணீரில் கொஞ்சும் தூவுங்கள்.
* தண்ணீரில் தூவிய மிளகுத்தூள், தண்ணீர் முழுவதும் பரவிவிடும்.
* பாத்திரம் துலக்கப் பயன்படும் சோப்புக் கரைசலை விரலின் நுனியில் தொட்டுக்கொள்ளுங்கள்.
* விரலைக் கிண்ணத்தின் நடுவே தொடுங்கள்.
நீங்கள் விரலால் தண்ணீரைத் தொட்டவுடன், தண்ணீரில் உள்ள மிளகுத் தூள் எல்லாம் விலகிச் செல்லும்; கிண்ணத்தின் ஓரத்துக்குச் செல்வதைக் காணலாம். என்ன காரணம்?
காரணம்
எல்லாத் திரவங்களின் மீதும் மேற்பரப்பு இழுவிசை இருக்கும் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். இந்தப் பரப்பு இழுவிசையானது ஒரு தோலை போன்று திரவத்தின் மேற்பரப்பில் இருக்கும். அதனால்தான் கொசு, ஈ போன்ற பூச்சிகளால் தண்ணீரின் மீது நிற்க முடிகிறது.
இந்தச் சோதனையில், பாத்திரம் துலக்கப் பயன்படும் சோப்புக் கரைசலை விரலால் தொட்டு, மிளகுத்தூள் உள்ள தண்ணீரின் நடுவே வைக்கும்போது, மேற்பரப்பு இழுவிசையானது குறைந்துவிடுகிறது. சோப்புக் கரைசலால் நடுப்பகுதியில் மேற்பரப்பு இழுவிசை குறைந்தாலும், ஓரத்தில் மேற்பரப்பு இழுவிசை அதிகமாகவே இருக்கும்.
இதனால், நடுப்பகுதியில் இருக்கும் மிளகுத் தூள் மேற்பரப்பு இழுவிசை அதிகமாக இருக்கும் கிண்ணத்தின் விளிம்பை நோக்கி இழுக்கப்படுகிறது. இதற்கு மார்க்கோனி விளைவை உதாரணமாகச் சொல்லலாம்.
மார்க்கோனி விளைவு என்பது குறைந்த மேற்பரப்பு இழுவிசை கொண்ட ஒரு திரவத்தை அதிக மேற்பரப்பு இழுவிசை கொண்ட ஒரு திரவம் வலுவாக ஈர்க்கும்.