Published : 19 Feb 2020 08:39 AM
Last Updated : 19 Feb 2020 08:39 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் நாக்கு இரண்டாகப் பிளந்திருப்பது ஏன்?

பாம்புக்கு மட்டும் நாக்கு இரு துண்டுகளாக் காணப்படுவது ஏன், டிங்கு?

- பூபதி, 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை.

பாம்புகளுக்கு மட்டுமில்லை, ஊர்வன விலங்குகளில் பெரும்பாலானவற்றுக்கு நாக்கு இரண்டாகப் பிளவுபட்டே காணப் படுகிறது. பாம்பு போன்ற ஊர்வனப் பிராணிகளுக்கு மோப்பத்திறன் குறைவாக இருக்கிறது.

அதனால் நாக்கை வெளியே நீட்டி, இரு பக்கங்களில் இருந்தும் வாசனையை உணர்ந்து, அதற்கேற்ப ஊர்ந்து செல்கின்றன. வாசனையை உணரும் திறன் குறைவாக இருந்தாலும் நாக்கின் மூலம் அதை ஈடுகட்டிக்கொண்டு செல்லும் விதத்தில் இயற்கை தகவமைப்பைக் கொடுத்திருக்கிறது, பூபதி.

முடி ஏன் கறுப்பாக இருக்கிறது, டிங்கு?

- எல்.ஆர். ஆசாத் அன்புச்செல்வன், எல்கேஜி, விசா கான்வென்ட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, சென்னை.

முடிக்கும் தோலுக்கும் நிறத்தை அளிப்பது மெலனின் நிறமிதான். முடியின் வண்ணங்களுக்குக் காரணம் இரு வகையான நிறமிப் பொருட்கள். யூமெலனின் நிறமி மூலம் பழுப்பு, கறுப்பு நிறங்களில் முடி அமைகிறது. பியோமெலனின் நிறமி மூலம் சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் கொண்ட முடி உருவாகிறது. நிறமியே இல்லாவிட்டால் முடி வெள்ளையாக மாறிவிடுகிறது, ஆசாத் அன்புச்செல்வன்.

மனிதனைப் போல் விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா, டிங்கு?

- பி. பிரசித்குமார், 6-ம் வகுப்பு, கல்யாண சுந்தரனார் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

உடலில் நோய்த் தொற்றுக்கிருமிகள் நுழையும்போது அதை எதிர்ப்பதற்காக உடலின் வெப்பநிலை உயர்கிறது. இதைத்தான் காய்ச்சல் என்கிறோம். விலங்குகளுக்கும் கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்படும்போது, அதை எதிர்ப்பதற்காக உடலின் வெப்பநிலை உயரும். அதாவது காய்ச்சல் வரும், பிரசித்குமார்.

கரும்பின் தண்டில் இனிப்புக்கான காரணம் என்ன, டிங்கு?

- த. புகழேந்தி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கரும்பு தனது தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆற்றலை தண்டில் சேமித்து வைக்கிறது. இதில் கார்போஹைட்ரேட்களான சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்றவை அதிகமாக இருக்கின்றன. சுக்ரோஸும் குளுக்கோஸும் இனிப்புச் சுவையைத் தருவதால், கரும்பின் தண்டுப்பகுதி இனிக்கிறது, புகழேந்தி.

சக மாணவர்களுடன் பழகும்போது கருத்து வேறுபாடும் சண்டையும் வந்துவிடுகிறதே ஏன், டிங்கு?

- பி. ரோஹித், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். பள்ளி, சமயபுரம்.

நீங்கள் சொல்வது சரிதான் ரோஹித். நண்பர்கள், குடும்பத்தினர், அலுவலக ஊழியர்கள் என்று நாம் சக மனிதர்களோடு சேர்ந்து இருக்கும் நேரத்தில் கருத்து வேற்றுமை வந்துவிடுகிறது. முன்பெல்லாம் நம் நண்பன் தானே என்று கருத்து வேறுபாடு இருந்தாலும் அமைதியாகக் கேட்டுக்கொள்வார்கள்.

அவர்களும் நண்பன் மனது புண்படும் விதத்தில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், இன்று சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. ஒருவர் சொல்லும் கருத்தைத் தவறு என்று ஆணித்தரமாக நிறுவ முயலும்போது, அங்கே சண்டை வருவதைத் தடுக்க முடிவதில்லை.

இதனால் அன்புக்குரியவர்கள் விரோதிகளாக மாறிவிடுகிறார்கள். யாராக இருந்தாலும் கருத்து வேற்றுமை வந்தால், அதை மென்மையாகக் கோபம் இன்றி வெளிப்படுத்தலாம். அப்படியும் நண்பர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த விஷயத்தை விட்டுவிடலாம். அப்போது சண்டை வருவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டுவிடும். நண்பரும் நண்பராகவே இருப்பார்.

ஓவியம்: வை. தினேஷ், 6-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நொச்சிப்பாளையம், கரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x