அறிவியல் மேஜிக்: கர்ஜிக்கும் பலூன்!

அறிவியல் மேஜிக்: கர்ஜிக்கும் பலூன்!
Updated on
1 min read

மிது கார்த்தி

பலூனை ஊதிக் கையால் தேய்த்தால், ஒருவிதமான ஒலி உண்டாவதைக் கேட்டிருப்பீர்கள். அதே பலூனை வைத்து அபாயச் சங்கு ஊதுவதைப் போன்ற ஒலியை உங்களால் உருவாக்க முடியுமா? ஒரு சோதனை செய்வோமா?

என்னென்ன தேவை?

பலூன்

இரண்டு ரூபாய் நாணயம்

அறுங்கோண (போல்ட்) நட்டு

எப்படிச் செய்வது?

* பலூனின் வாயில் இரண்டு ரூபாய் நாணயத்தை உள்ளே வைத்து பலூனுக்குள் தள்ளிவிடுங்கள்.

* அந்தப் பலூனைப் பெரிதாக ஊதுங்கள். பின்னர் முடிச்சுப் போட்டு கட்டிவிடுங்கள்.

* முடிச்சு போட்ட பகுதியை விரல்களால் பற்றிக்கொண்டு பலூனை மெதுவாகச் சுழற்றுங்கள்.

* இப்போது பலூன் உள்ளே நடப்பதைக் கவனியுங்கள்.

* பலூனை நீங்கள் சுழற்றும்போது கிடைமட்டமாக நகரும் நாணயம், எந்தச் சத்தமும் இன்றி சுழல்வதைப் பார்க்கலாம்.

* இப்போது பலூனிலிலிருந்து நாணயத்தை எடுத்துவிட்டு, அறுங்கோண நட்டை உள்ளே தள்ளுங்கள்.

* முன்பைப் போலவே பலூனை ஊதி, முடிச்சுப் போட்டுக் கட்டிவிட்டுச் சுழற்றுங்கள்.

* இப்போது பலூனைச் சுழற்றும்போது, சங்கு ஊதுவது போல ஒலி எழுவதைக் கேட்கலாம். சில நேரம் சிங்கம் கர்ஜிப்பதைப் போலவும் அந்த ஒலி இருக்கும். இதற்கு என்ன காரணம்?

நடப்பது என்ன?

இந்தச் சோதனையில் முதலில் நாணயத்தை பலூனுக்குள் இட்டுச் சுழற்றும்போது ஒலி எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், நாணயத்தின் வெளிப்புறம் வட்டமாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதே காரணம். நாணயம் சுழலும்போது உராய்வின்றி சுழல்வதால், அது எந்த அதிர்வையும் ஏற்படுத்துவதில்லை. அதனால் ஒலியும் உருவாகவில்லை.

ஆனால், பலூனுக்குள் நாணயத்துக்குப் பதில் அறுங்கோண வடிவ நட்டைச் செலுத்தி சுழற்றியபோது ஒலி உருவானது எப்படித் தெரியுமா? அறுங்கோண வடிவ நட்டு மடிப்புகளாக உள்ளது.

அதை பலூனுக்குள் இட்டுச் சுழற்றும்போது பலூனின் உட்புறத்தில் உராய்ந்து கொண்டே விட்டுவிட்டு வட்டப் பாதையில் சுழலும். இதன் காரணமாக பலூனும் பலூனுக்குள் இருக்கும் காற்றும் அதிர்வடைகின்றன. இதனால் சங்கு ஊதுவதுபோல ஒலி உண்டாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in