Published : 05 Feb 2020 11:48 AM
Last Updated : 05 Feb 2020 11:48 AM

மாய உலகம்: இந்தியக் குழந்தைகளாகிய நாம்...

மருதன்

இந்தியக் குழந்தைகளாகிய நாம் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். ஒரு தேசத்தைக் கட்டமைப்பது என்பது மிக மிகப் பெரிய பணி. நம் கைகளோ மிகவும் சிறியவை.

அதனால் என்ன? பெரிய கனவு ஒன்றைக் காண்பதற்கும் அதை ஓடி ஓடித் துரத்திச் செல்வதற்கும் உற்சாகமும் நம்பிக்கையும் இருந்தால் போதும். நம் உள்ளம் முழுக்க முழுக்க இந்த இரண்டும் நிரம்பிக் கிடக்கும்போது நமக்கு என்ன தயக்கம்?

அதெல்லாம் சரிதான். ஆனால், இந்தியா என்ற ஒன்றுதான் ஏற்கெனவே இருக்கிறதே! பிறகு ஏன் மெனக்கெட்டு இன்னொன்றை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். உண்மை. இந்தியா ஏற்கெனவே இருக்கிறது.

ஆனால், அது உங்கள் இந்தியா. எங்கள் கனவுகளுக்கும் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றாற்போல் உங்கள் இந்தியா இல்லை என்பதால் எங்களுக்கே எங்களுக்காக ஒரு புதிய இந்தியாவை உருவாக்கிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம். குழந்தைகளிடமிருந்து, குழந்தைகளுக்காக, குழந்தைகளால் உருவாகும் இந்தியாவாக அது இருக்கும்.

இந்தியா என்பது ஒரே ஒரு முறை உருவாக்கப்பட்ட தேசம் அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இதுவரை இந்தியா குறைந்தபட்சம் ஆயிரம் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் முறை கலைக்கப்பட்டிருக்கிறது. கடற்கரை மண் கோட்டை போல.

அசோகர் ஓர் இந்தியாவைக் கட்டினார். அதைக் கலைத்துவிட்டு வேறு ஒன்றைக் கட்டும் கனவோடு அலெக்சாண்டர் படைகளோடு வந்தார். குஷானர்களும் சாதவாகனர்களும் வேறு ஒரு கோட்டையைக் கட்ட விரும்பினர். குப்தர்கள் ஓர் இந்தியாவை உருவாக்கினார்கள். பல்லவர்கள் இன்னொன்றை.

சோழர்கள் இந்தியாவை ஒரு கோபுரமாக மாற்றினார்கள். வேண்டாம், நான் வேறு ஓர் இந்தியாவை உருவாக்குகிறேன் என்றார் கிருஷ்ணதேவராயர். இல்லை, வேறு ஒன்று என்றனர் முகலாயர்கள். நான் உருவாக்குவதுதான் நவீன இந்தியா, பார் இதனை என்றனர் ஆங்கிலேயர்கள்.

கோட்டையாக, கோபுரமாக, மாளிகையாக இந்தியாவைப் பலரும் பலவிதங்களில் கற்பனை செய்து உருவாக்கிப் பார்த்துவிட்டார்கள். ஈட்டி, வாள், துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டு என்று விதவிதமான ஆயுதங்களால் தங்கள் இந்தியாவைப் பலப்படுத்தியும் பார்த்துவிட்டார்கள்.

இருந்தும் இந்தியாவிலிருந்து வறுமையை ஒழிக்க முடியவில்லை. அறியாமையை அகற்ற முடியவில்லை. மோதல்களைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்றத்தாழ்வைச் சரி செய்ய முடியவில்லை. அமைதியை, மகிழ்ச்சியை, நிம்மதியை அனைவருக்கும் ஏற்படுத்த முடியவில்லை.

இதுவரை உருவாகாத இந்தியா ஒன்றுதான். குழந்தைகளின் இந்தியா. அதைத்தான் இந்தியக் குழந்தைகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் இந்தியா கோட்டையோ மாளிகையோ கோபுரமோ அல்ல. அது ஒரு பெரிய மரம். ஆயிரம் கிளைகள் கொண்ட பெரிய மரம். அந்த மரம் அனைவருக்கும் நிழல் தரும். அனைவருக்கும் இதமான காற்று தரும். அனைவரோடும் தன் கனிகளை அது பகிர்ந்துகொள்ளும். தூர தேசங்களிலிருக்கும் பறவைகள் எல்லாம் உரிமையோடு எங்கள் மரத்தை நாடி வந்து அமரும். நாடி வரும் அனைவருக்கும் அதே நிழல், அதே கனி, அதே காற்று கிடைக்கும்.

பசி என்று ஒருவர் நினைப்பதற்குள் பத்துப் பேர் விரித்த கரங்களில் உணவோடு பாய்ந்து வருவார்கள். உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு தரையில் விழுவதற்கு முன்பு அணைத்து ஆறுதல் தர யாரேனும் உங்களோடு இருப்பர். உங்கள் கரம் நடுங்கினால் பற்றிக்கொள்ள இன்னொருவரின் கரம் நீண்டுவரும்.

எந்தக் குழந்தையும் பணக்காரக் குழந்தையாகவோ ஏழைக் குழந்தையாகவோ பிறக்காது. எந்தக் குழந்தையும் பணக்காரராகவோ ஏழையாகவோ வளராது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அமையும். யார் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி கதவுகள் திறக்கும். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் படிக்கலாம். உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தொடங்கலாம். உங்களுக்குப் பிடித்த கனவுகளை வளர்த்துக்கொள்ளலாம்.

எங்கள் இந்தியாவில் உங்களுக்கு விருப்பமான அடையாளத்தை நீங்கள் சூட்டிக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த கடவுளை வணங்கிக்கொள்ளலாம். எங்கள் இந்தியாவில் யாரும் யாரையும் எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. யாரும் யாருக்கும் பணிந்துபோக வேண்டியிருக்காது. யாரும் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டியிருக்காது.

எங்கள் இந்தியாவில் ராணுவத்தினர் இருக்க மாட்டார்கள். அப்படியானால், எதிரி நாட்டிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள் என்று பயப்பட வேண்டாம். எதிரி நாடு என்ற ஒன்றை நாங்கள் ஒருபோதும் உருவாக்கிக்கொள்ள மாட்டோம். குற்றங்களுக்கான தேவைகள் இருக்காது என்பதால் சிறைச்சாலைகள் தேவைப்படாது.

வன்முறை இல்லாத, வெறுப்பு இல்லாத, பகை இல்லாத, பாகுபாடுகள் இல்லாத ஓர் இந்தியாவாக எங்கள் தேசம் இருக்கும். அதை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம். தொடர்ந்து புத்துணர்வை ஊட்டிக்கொண்டே இருப்போம். எங்கள் கனவுகள் வளர வளர எங்கள் இந்தியாவும் வளரும். எங்கள் கரங்கள் சேரச் சேர எங்கள் இந்தியா வலுப்பெறும்.

எங்கள் இந்தியாவின் அடித்தளமாக அன்பு இருக்கும். எங்கள் இந்தியாவின் அடித்தளமாக மனிதத் தன்மை இருக்கும். எங்கள் இந்தியாவின் அடித்தளமாக அமைதி இருக்கும். எங்கள் கனவே எங்கள் இந்தியாவாக இருக்கும். அப்படி ஓர் இந்தியாவைக் கட்டியமைப்போம் என்று நாங்கள் உறுதி ஏற்கிறோம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x