

ஹிரோஷிமா, நாகசாகி நாள்: ஆகஸ்ட் 6, 9
‘புதியதோர் உலகம் செய்வோம்… கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்…' என்று பாடிக்கொண்டே அரவிந்த் வீட்டுக்குள் நுழைந்தான். அரவிந்தின் அம்மா, “என்ன அரவிந்த், பாட்டெல்லாம் பலமா இருக்கு” என்றார்.
“அம்மா, இன்னிக்கு ஸ்கூல்ல ஹிரோஷிமா- நாகசாகி தினத்தை முன்னிட்டுப் படம் போட்டாங்கம்மா. 1945 ஆகஸ்ட் 6-ம் தேதியன்னைக்கு ஜப்பான்ல உள்ள ஹிரோஷிமாவுல லிட்டில் பாய் (குட்டிப் பையன்) என்ற அணுகுண்டையும், ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகியில் ஃபேட் மேன் (குண்டு ஆள்) என்ற அணுகுண்டையும் அமெரிக்கா போட்ட விளைவைப் பத்தி, அந்த படம் மூலமா ஒரு அங்கிள் விளக்கி சொன்னார்” என்றான் அரவிந்த்.
“ஆமாம்பா. நான்கூட இதபத்தி படிச்சிருக்கேன். ரொம்ப கொடூரமான விஷயம். அந்த படத்துல என்னென்ன விஷயங்கள் எல்லாம் வந்துச்சு அரவிந்த்”, என்று கேட்டார் அம்மா.
“அதாவதும்மா, இரண்டாம் உலகப் போர் முடியுற சமயம். போர்ல, தன் நாட்டுக்கு அதிக சேதாரம் வரக் கூடாதுன்னும், ஜப்பான் சரணாகதி அடையணும்னும் அமெரிக்கா நினைச்சுது. தவிர, போருக்கு அப்புறம் , சோவியத் யூனியனைவிட தங்களோட ஆதிக்கமே உலகம் பூரா இருக்கணும்னு அமெரிக்கா நினைச்சுது. அதனால, ஜப்பான்ல அணுகுண்டை பயன்படுத்தத் திட்டமிட்டது. அதனால உலகத்துலேயே முதல் தடவையா அணுகுண்டு வெடிச்சு, நேரடியா அதோட விளைவுகளை ஆய்வு செய்ய அமெரிக்கா முடிவு செஞ்சுது. ஹிரோஷிமாவுல அமெரிக்கா போட்ட அணுகுண்டுக்கு அந்த நகரத்துல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் செத்து போனாங்க. ஆனா அமெரிக்கா அதோட நிக்கலை. இரண்டு நாள் கழிச்சு, நாகசாகியில் இன்னொரு அணுகுண்டை வீசி பலத்த உயிர்சேதத்தை ஏற்படுத்துச்சு.”
“ஆமாம் அரவிந்த். இந்த ரெண்டு சம்பவங்கள் நடந்த நாட்களும் உலக வரலாற்றுல ரெண்டு கருப்பு தினங்கள். சரி, அணுகுண்டு வீசினதால ஏற்பட்ட உயிர் சேதம் தவிர, வேறு சில மோசமான விளைவுகளும் ஏற்பட்டுச்சு. அதப் பத்தி நீ பாத்த படத்துல வந்ததா?” என்று கேட்டார் அம்மா.
“ம். கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம், வெப்பக் கதிர்வீச்சு ஏற்படுத்திய தாக்கம், தீ விபத்துகள் நடந்ததால் ஏற்பட்ட சேதாரம், கதிரியக்கத்தோட பயங்கரமான விளைவுகள், இப்படி இன்னும் பல மோசமான தாக்கங்கள் ஏற்பட்டதா அந்த அங்கிள் சொன்னார். இன்னும்கூட அந்த நகர மக்கள், அந்த தாக்கங்களிலிருந்து முழுமையா மீளாம இருக்காங்கன்னும் சொன்னார்”
“அரவிந்த், இந்த அணு ஆயுதங்கள் இன்னைக்கும்கூட எந்த நாட்டுக்குமே தேவை யில்லாத ஒண்ணுதான். ஆனா அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் நாடுகளெல்லாம் அணுஆயுதங்கள வச்சிருக்காங்க. எதுக்காக வெச்சுருக்கீங்கனு கேட்டா, பாதுகாப்புக்குனு சொல்றாங்க.”
அரவிந்த் உடனே இடைமறித்தான். “ யாரோட பாதுகாப்புக்கும்மா? அணு குண்டு பயன்படுத்தினா, அந்த இடத்துல ஒரு புல்பூண்டுகூட மிஞ்சாதுன்னு அங்கிள் சொன்னாரு. மக்கள் எல்லோரையும் அழிச்சிட்டு, யாருக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்?”
அணுஆயுதம் பயமுறுத்தத் தான். ‘பயன்படுத்த அல்ல' அப்படின்னு அத வெச்சுருக்கிற நாடுகள் சொல்லுதாம். ஸ்லைடு லெக்சர் கொடுத்த அந்த அங்கிள் இதுக்கு ஒரு விளக்கம் தந்தார் - ‘உங்கள் தலையில் ஒருவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு , “பயப் படாதீர்கள். உங்களை நான் சுட மாட்டேன். பயமுறுத்தத்தான் துப்பாக்கியை வைச்சிருக்கேன்” என்று சொல்றது போலதான் இதுவும்”.
“வெரிகுட் அரவிந்த். நீ பார்த்த படம் உன்னை நல்லா யோசிக்க வெச்சிருக்கு. ஒரு நாட்டோட வளர்ச்சி என்பது, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை உத்திரவாதப் படுத்துவதுதான். அணுகுண்டு தயாரிப்பது இல்லை”.
"அம்மா, படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அந்த மாமா ஒரு பாட்டு பாடினார். நீ சொன்ன விஷயத்தைப் போலவே அந்த பாட்டுல ஒரு வரி வருது - “அரிசியும் பருப்பும் வாங்கிடும் காசினில் அணுகுண்டு செய்வது எதனாலே?”
“அரவிந்த், உன் ஸ்கூலுக்கு வந்து பேசின அந்த அங்கிள நம்ம ஃபிளாட்ஸுக்கும் வந்து பேசச் சொல்லலாம். அணு ஆயுதங்களோட அபாயத்த எல்லோரும் தெரிஞ்சுகிட்டு, அது தேவையே இல்லைன்னு உணரணும். சரி வா, இப்போ சாப்பிடப் போவோம்” என்று அரவிந்தை சாப்பாட்டு மேஜைக்கு கூட்டிப் போனார் அம்மா.