Published : 22 Jan 2020 12:32 PM
Last Updated : 22 Jan 2020 12:32 PM

கணிதப் புதிர்கள் 19: யாருக்கு எவ்வளவு சாக்லெட்?

என். சொக்கன்

மதிய உணவு நேரம். அலுவலகத்தில் எல்லோரும் சாப்பிடப் புறப்பட்டுக் கொண்டி ருந்தார்கள்.

‘‘மலர்விழி, சாப்பிடப் போலாமா?” என்று கேட்டபடி அவருடைய மேசையை நெருங்கினார் வந்தனா.

‘‘இன்னும் ஒரு சின்ன வேலை இருக்கு, முடிச்சுட்டு வந்துடறேனே.”

அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார் வந்தனா.

‘‘வந்தனா, நீங்க போய்க் கார்த்தியைக் கூட்டிகிட்டு வந்துடுங்களேன்” என்றார் மலர்விழி.

‘‘உங்களுக்கு அந்தக் கஷ்டமே வேணாம். நானே வந்துட்டேன். இன்னுமா சாப்பிடக் கிளம்பலை?” என்றபடியே வந்தார் கார்த்திகேயன்.

மலர்விழி, வந்தனா, கார்த்திகேயன் மூவரும் சில வாரங்களுக்கு முன்புதான் இந்த அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்கள். மூவரும் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தாலும், மதிய உணவு நேரத்தில் கண்டிப்பாகச் சந்தித்துவிடுவார்கள்.

சிறிது நேரத்தில், மலர்விழி தன்னுடைய வேலையை முடித்தார். பையைத் திறந்தார். ‘‘இன்னிக்குச் சாப்பாடு கொண்டுவர மறந்துட்டேன். காலையில அவசரமா கிளம்பினேன்.”

‘‘அதனால என்ன, நாங்க ரெண்டு பேரும் சாப்பாடு கொண்டுவந்திருக்கோம். அதைப் பகிர்ந்துக்குவோம்” என்றார் கார்த்திகேயன்.

‘‘வேணாம் கார்த்தி, உங்களுக்கு எதுக்குச் சிரமம்? நான் கடையில ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக்கறேன்.”

‘‘இதுல என்ன சிரமம்? வாங்க, பார்த்துக்கலாம்.”

அவர்கள் காலியாக இருந்த ஒரு மேசையில் அமர்ந்தார்கள். கார்த்திகேயனும் வந்தனாவும் உணவு டப்பாவைத் திறந்தனர்.

இருவரும் இட்லிகளைக் கொண்டுவந்திருந்தார்கள். கார்த்திகேயனுடைய டப்பாவில் 5 இட்லிகளும், வந்தனாவுடைய டப்பாவில் 4 இட்லிகளும் இருந்தன. அவற்றை மூன்றாகப் பிரித்து ஆளுக்கு 3 இட்லியைக் கொடுத்தார் வந்தனா.

‘‘நான் போய்ச் சப்பாத்தியோ சாம்பார் சாதமோ வாங்கிட்டு வந்துடறேன். ரெண்டு பேர் சாப்பாட்டை மூணுபேர் சாப்பிடறது சரியா இருக்காது.”

‘‘மலர்விழி, உங்களுக்குச் சங்கடமா இருந்தா ஒண்ணு செய்வோம். சாப்பிட்டு முடிச்சதும் எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சாக்லெட் வாங்கிக் கொடுத்துடுங்க. இட்லிக்கும் சாக்லெட்டுக்கும் சரியாப் போயிடும்!”

இப்போது, மலர்விழி முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. இட்லிகளை வாங்கிக்கொண்டார்.

சாப்பிட்ட பிறகு கடைக்குச் சென்றார்கள். ‘‘உங்களுக்கு எந்தச் சாக்லெட் வேணும்?” என்று கேட்டார் மலர்விழி.

‘‘இதை மட்டும் வாங்குங்க, இதிலுள்ள சாக்லெட்களை நானும் கார்த்தியும் பிரிச்சுக்கறோம்.”

‘‘எப்படிப் பிரிச்சுக்குவீங்க?”

பொட்டலத்தின் மேலுறையைக் கூர்ந்து கவனித்தார் வந்தனா. அதில் ‘18 சாக்லெட்கள்’ என்று எழுதியிருந்தது. ‘‘மொத்தம் 9 இட்லி, அதுல நான் கொண்டுவந்தது 4 இட்லி, கார்த்தி கொண்டுவந்தது 5 இட்லி. அதாவது, நான் 4/9, கார்த்தி 5/9. இந்தப் பொட்டலத்துல 18 சாக்லெட்கள் இருக்கு, அதுல 4/9 பங்கு, அதாவது 8 சாக்லெட் எனக்கு; 10 சாக்லெட் கார்த்திக்கு. சரியா?”

‘‘சரியாகக் கணக்குப் போட்டுப் பாருங்க வந்தனா, உங்களுக்கு 6 சாக்லெட், எனக்கு 12 சாக்லெட் வரும்.”

கார்த்திகேயன் சொல்வது சரிதானா? வந்தனாவின் கணக்கில் என்ன தவறு? கண்டுபிடியுங்கள்.

(அடுத்த வாரம், இன்னொரு புதிர்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x