Published : 15 Jan 2020 11:31 am

Updated : 15 Jan 2020 11:31 am

 

Published : 15 Jan 2020 11:31 AM
Last Updated : 15 Jan 2020 11:31 AM

புத்தகத் திருவிழா 2020: பொங்கலுக்குப் புத்தகங்களையும் சுவைக்கலாம்!

books-for-childrens

ஆதி

பொங்கல் திருவிழா களைகட்டும் அதேநேரம், சென்னைவாசிகள் புத்தகப் பொங்கலில் திளைப்பது வழக்கம். சென்னை புத்தகத் திருவிழாவையொட்டி குழந்தைகள் கொண்டாடக்கூடிய பல புதிய நூல்கள் வெளியாகும். அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி கவனம் ஈர்க்கும் சிறார் நூல்கள் எவை? ஒரு சிற்றுலா:

‘குட்டி ஆகாயம்’ பதிப்பகம் எப்போதுமே மாறுபட்ட கதைகள், நூல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதில் கவனம் செலுத்திவருகிறது. குறைந்த வார்த்தைகளில் ஓவியங்களின் வழியாகவே கதை சொல்கிறது ஜுனுகா தேஷ்பாண்டே எழுதிய ‘இரவு‘ என்ற கதை. பிரபல சிறார் மொழிபெயர்ப்பாளர் சாலை செல்வம் தமிழில் தந்துள்ள இந்தக் கதையை குட்டி ஆகாயம் வெளியிட்டுள்ளது.

மாணவ எழுத்தாளர்களின் படைப்புகள்
குழந்தைகளுக்கு மாறுபட்ட படைப்புகளைத் தொடர்ந்து வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் வானம் பதிப்பகத்தின் நூல்கள் இந்த முறையும் மாறுபட்டவையாக உள்ளன. அவற்றில் 12-ம் வகுப்பு மாணவி அபிநயா எழுதிய ‘குரங்கும் கரடிகளும்’ கதை நூலும் ஒன்று. இவருடைய கதைகள் ‘இந்து தமிழ் மாயாபஜா’ரிலும் வெளியாகியுள்ளன. அத்துடன் 6-ம் வகுப்பு மாணவி ரமணியின் ‘யாருக்குத் தைக்கத் தெரியும்’ நூல் வண்ணத்தில் வெளியாகிறது.
எழுத்தாளர் உதயசங்கரின் ‘சூரியனின் கோபம்’, பஞ்சுமிட்டாய் பிரபு எழுதிய ‘எனக்குப் பிடிச்ச கலரு’, பிரான்சிஸ் ஹட்சன் பர்னாட்டின் ‘குட்டி இளவரசி’ (தமிழில் சுகுமாரன்) ஆகிய நூல்களும் வானம் வெளியீடாக வெளியாகியுள்ளன.

அறிவியலாளர் வரிசை
ஆயிஷா இரா. நடராசனின் எழுத்தில் ‘உலகை மாற்றிய விஞ்ஞானிகள்’ என்ற வரிசை நூல்கள் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடுகளில் கவனம் ஈர்க்கின்றன ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சார்லஸ் பாபேஜ், அரிஸ்டாட்டில், எட்வர்டு ஜென்னர், கலிலியோ கலிலீ, ஏர்னஸ்ட் ரூதர்போர்டு, கிரிகோர் மெண்டல், ஐசக் நியூட்டன், ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல், ஜான் டால்டன், ஜோசப் லிஸ்டர், லியனார்டோ டாவின்சி, தாமஸ் ஆல்வா எடிசன், வெர்னர் ஹெய்சன்பர்க், வில்ஹெம் ராண்ட்ஜன், வில்லியம் ஹார்வி என 16 அறிவியலாளர்களை இந்த நூல் வரிசை அறிமுகப்படுத்துகிறது. அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பது சிறப்பு.

யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் உலக நாடோடிக் கதைகள் தொகுப்பான ‘பறக்கும் திமிங்கிலம்’, விளாதீமிர் மிஹனோவ்ஸ்கியின் ஊதாப்பூ (மொழிபெயர்ப்பு நா. முகமது ஷெரீபு), மோ. கணேசனின் குழந்தைப் பாடல் தொகுப்பான ‘டும் டும் டும் தண்டோரா’, பேராசிரியர் சோ. மோகனாவின் ‘பண்டைக்கால வானவியலாளர்கள்’ ஆகிய நூல்களும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவையாகக் கூறலாம்.
ஒவ்வொரு நூலும் புதுப்புது உலகைத் திறந்து காட்டுபவை, உங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கி வாசித்துப் பாருங்களேன்!


Books for childrensChildrens booksBook fair 2020புத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழா 2020சிறுவர் புத்தகங்கள்சிறுவல் நூல்கள்பாரதியின் பூனைகள்இந்தியா என்றால் என்ன?

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author