Published : 15 Jan 2020 11:22 am

Updated : 15 Jan 2020 11:22 am

 

Published : 15 Jan 2020 11:22 AM
Last Updated : 15 Jan 2020 11:22 AM

கதை: குப்பை உண்ணும் திமிங்கிலம்

kids-tamil-story

கொ.மா.கோ.இளங்கோ

விடிந்ததும் வானம் பளிச்செனத் தெரிந்தது. அமுதனுடன் சேர்ந்து காயல் கரையிலிருந்த படகை அவிழ்த்துக் கடலுக்குள் இழுத்துச் சென்றான், அதிரன். இருவரும் வீச்சுவலையைப் படகில் ஏற்றிக்கொண்டு கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள்.

இதமான காற்று வீசியது. கடல் சீற்றம் குறைவான பகுதியாதலால் தண்ணீரில் எளிதாகத் துடுப்புப் போட முடிந்தது. அதிரன் படகின் முன்பக்கம் நின்று வலை வீசினான்.

“அமுதா, எந்தக் காரணம் கொண்டும் ஆழமான பகுதிக்குப் போயிடாதே. ஆபத்துன்னு அப்பா சொல்லித்தான் அனுப்பியிருக்கார். ஏதாவது பிரச்சினைன்னா நாளைக்குப் பரீட்சை எழுத முடியாது” என்றான் அதிரன்.

“எல்லாம் நினைவில் இருக்கு அதிரன். ரெண்டு பேரும் படிச்சாச்சு. கொஞ்ச நேரம் மீனைப் பிடிச்சிட்டுக் கிளம்பிடலாம். பயப்படாதே” என்றான் அமுதன்.

“நாம ரெண்டு பேரும் பல தடவை மீன் பிடிக்க வந்திருக்கோம். மீன்கள், நண்டு, சிப்பி, ஆமை எல்லாம் பார்த்திருக்கோம். ஆனால், திமிங்கிலத்தை இதுவரை பார்த்ததே இல்லையே… ஒரு தடவையாவது அந்தப் பெரிய உருவத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு அமுதன்” என்றான் அதிரன்.

“இந்தப் பகுதியில் திமிங்கிலம் அவ்வளவா இருக்காதுன்னு அப்பா சொல்லிருக்கார். சின்ன வயசுல அப்பாவும் சித்தப்பாவும் கடலுக்குள் போனபோது, திமிங்கிலத்தைப் பார்த்தாங்களாம். இவங்களோட படகைக் கவிழ்க்க வந்துச்சாம். எப்படியோ தப்பிச்சு கரை சேர்ந்ததாக அப்பாவும் சித்தப்பாவும் அடிக்கடி சொல்வாங்களே, நினைவில்லையா?”

“இருக்கு. நம்ம சின்ன வயசுல அப்பாவோட கடலுக்கு வர்றப்ப கடல் எவ்வளவு சுத்தமா இருக்கும்! இப்பப் பாரு, ஒரே பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் துணிகளுமாக மிதக்குது.”

“ஆமாம், அதிரன். மனிதர்கள் நிலத்தைப் பாழாக்கிவிட்டு, இப்ப கடலையும் பாழாக்க ஆரம்பிச்சிட்டாங்க. கடலில் வாழற உயிரினங்கள் எல்லாம் இந்தக் குப்பைகளால் ரொம்பவே பாதிக்கப்படுவதாக நம்ம வளவன் மாமா சொல்லிட்டிருந்தார். அதை நினைச்சா எனக்கும் கவலையா இருக்கு” என்றபடி வலையை இழுத்தான் அமுதன்.

“வளவன் மாமா கடல்வாழ் உயிரினங்கள் பற்றிதான் ஆராய்ச்சி செய்யறார். இந்தக் குப்பைப் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கண்டுபிடிப்பார்னு தோணுது” என்ற அதிரன், வலையில் இருந்த மீன்களை எடுத்து, வாளியில் போட்டான்.

வேறு இடத்துக்குப் படகைச் செலுத்தினான் அமுதன். மீண்டும் வலையை வீசிவிட்டுக் காத்திருந்த அதிரன், “திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் உட்காரலாமாம்!”

“இதெல்லாம் கதை. திமிங்கிலத்தின் இதயம் ஒரு கார் அளவுக்கு இருக்கும் என்று வளவன் மாமா சொன்னார்.”

“நீலத்திமிங்கலம் பாட்டுப் பாடும்னு கூட சொன்னார். பிறந்ததிலிருந்து கடலுக்குப் பக்கத்திலேயே வாழறோம். எப்படியாவது ஒரு திமிங்கிலத்தைப் பார்த்துடணும்.”

சற்றுத் தூரத்தில், கடல் அலைகளைத் தன் துடுப்பால் தள்ளியபடி ஒரு பெரிய உருவம் வருவதை இருவரும் பார்த்தார்கள்.

“அதிரன், அங்கே பாரு. திமிங்கலத்தோட வால். அந்தப் பக்கம் போவோம்” என்று ஆச்சரியத்தில் கத்தினான் அமுதன்.

“அடடா! ரொம்ப சந்தோஷமா இருக்கு அமுதன். கிட்ட போய்ப் பார்க்கலாமா?”

“கொஞ்சம் பயமா இருக்குடா. நம்ம படகைக் கவிழ்த்துவிட்டு விட்டால் என்ன செய்றது?”

“அதுக்காக இந்த வாய்ப்பை விட்டுவிடலாமா? அது ரொம்ப சாதுவான திமிங்கிலமாகத்தான் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் தூரத்தில் இருந்தே கவனிப்போம்” என்றான் அமுதன்.

திமிங்கிலம் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு சென்றது. அது பயணம் செய்த பாதை சுத்தமாக இருந்தது. இருவருக்கும் ஆச்சரியம்.

“என்ன அதிரன், திமிங்கிலத்துக்குப் பின்னாலிருந்த குப்பைகள் எங்க போச்சுன்னு தெரியல. தண்ணி சுத்தமா இருக்கு” என்றான் அமுதன்.

“எனக்கும் தெரியலை. கிட்ட போய்ப் பார்க்கலாம்” என்று துடுப்பைப் போட்டான் அதிரன்.

திமிங்கிலத்தின் வாலுக்கு அருகில் சென்றார்கள். அது இவர்களைக் கவனித்ததாகத் தெரியவில்லை. பெரிய வாயைத் திறப்பதும் குப்பைகளை விழுங்குவதுமாக இருந்தது.

”என்னடா இந்தத் திமிங்கிலம் குப்பைகளையா சாப்பிடுது? எனக்கு ஒண்ணும் புரியலை” என்றான் அமுதன்.

இருவரும் திமிங்கிலத்தைப் பின்தொடர்ந்து பயணித்தார்கள். கெண்டைக்குப்பம் அருகே திமிங்கிலம் கரை ஒதுங்கியது.

வளவன் மாமா வேறு சிலருடன் ஓடி வந்தார். எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய ரப்பர் குழாயைத் திமிங்கிலத்தின் வாயில் திணித்தார்கள்.

அமுதனும் அதிரனும் உடல் நலம் சரியில்லாத திமிங்கிலத்துக்குச் சிகிச்சை அளிக்கிறார்கள் என்று நினைத்தார்கள். அதன் வயிற்றிலிருந்த குப்பைகள் ரப்பர் குழாயின் மூலம் வெளியேற்றப்பட்டன. திமிங்கிலம் பிழைக்க வேண்டும் என்று அமுதனும் அதிரனும் நினைத்துக்கொண்டனர்.

குப்பைகள் எல்லாம் வெளியே எடுக்கப்பட்டவுடன் திமிங்கிலம் மீண்டும் கடலுக்குள் நீந்திச் சென்றது.

“மாமா, இப்ப என்ன செஞ்சீங்க? திமிங்கிலம் குப்பையைச் சாப்பிடுது. நீங்க அதை வெளியில் எடுக்கறீங்க?” என்று கேட்டான் அமுதன்.

“வாங்கப்பா வாங்க. இது நிஜமான திமிங்கிலம்னு நினைச்சிட்டீங்களா? இது திமிங்கில ரோபோ” என்று சிரித்தார் வளவன் மாமா.

“என்னது, ரோபோவா?” என்று இருவரும் அதிர்ந்தனர்.

“ஆமாம். கடலைச் சுத்தம் செய்யும் ரோபோ. பிளாஸ்டிக் பொருட்களால் கடல் மாசு அடையுது. அதைத் தடுப்பதற்காக இந்தத் திமிங்கில ரோபோவை விட்டிருக்கோம். குப்பைகளைக் கொண்டுவந்து கரையில் சேர்த்துடும்” என்று சிரித்தார் வளவன் மாமா.

“நிஜமான திமிங்கிலமோன்னு நினைச்சிட்டோம். நல்ல காரியம் செய்யறீங்க மாமா. நாங்களும் படிச்சிட்டு உங்களை மாதிரி சூழலைப் பாதுகாக்குற ஆராய்ச்சியில் இறங்குவோம்” என்றார்கள் அமுதனும் அதிரனும்.


Kids tamil storyKids storyசிறுவர் கதைகள்தமிழ்க் கதைகள்திமிங்கலம்மாயா பஜார்இந்து தமிழ்திசைஇணைப்பிதழ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author