மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!

மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
Updated on
1 min read

அ. முன்னடியான்

பெயருக்கு ஏற்றாற்போல் கற்பனையை விரல்கள் மூலம் அழகிய ஓவியங்களாக மாற்றி, காண்போரை அசத்திவிடுகிறார் செந்தூரிகை. 8-ம் வகுப்பு படிக்கும் இவர், புதுச்சேரியில் நடைபெறும் அத்தனை ஓவியப் போட்டிகளிலும் கலந்துகொள்கிறார்.

இளம் வயதிலேயே ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்த செந்தூரிகை, 9 வயதிலேயே ஓவியக் கண்காட்சியை வைத்து விட்டார்! இதுவரை தனியாக 7 ஓவியக் கண்காட்சிகளை நடத்தி இருக்கிறார். 15-க்கும் மேற்பட்ட குழு ஓவியக் கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இயற்கை, கிராமத்தின் எழில், நீரோடை, மலைப் பிரதேசம், சூரிய உதயம், மாடர்ன் ஆர்ட் என்று செந்தூரிகையின் ஓவியங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்!

இந்தியா தவிர, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார். அங்குள்ள மாணவர்களுக்கு ஓவியம் குறித்து வகுப்பு எடுத்திருக்கிறார்.

மலேரியா ஒழிப்பு, நீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு, போக்குவரத்து விதிமுறைகள் போன்ற விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

“மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே, ஓவியம் வரைய ஆரம்பித்துவிட்டேன். எங்க அம்மாதான் எனக்கு குரு. அம்மா, அப்பா இருவரும் என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் உற்சாகத்தோடு ஊக்கப்படுத்துவார்கள். பல்வேறு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். தனியாக ஓவியக் கண்காட்சி வைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்கள். வாட்டர் கலர், ஆயில் பேஸ்ட், அக்ரலிக், பென்சில் டிராயிங் என்று பல்வேறு விதமான ஓவியங்களைத் தீட்டிவருகிறேன்.

என் மனதில் தோன்றுவதை அப்படியே வரைந்துவிடுவேன். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஓவியம் இருந்தால் அதுவே சிறந்த ஓவியம் என்பேன். உலக மகளிர் தினத்தையொட்டி நான் வரைந்த ஓவியங்களைத் தனிநபர் கண்காட்சியாக வைத்தது எனக்கு நிறைவாக இருந்தது. புதிய புதிய விஷங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னை வித்தியாசமான ஓவியராக வைத்திருக்கிறது. ஓவியராகிப் பெரிய அளவில் சாதிப்பதே என் லட்சியம்’’ என்கிறார் செந்தூரிகை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in