Published : 15 Jan 2020 10:50 am

Updated : 15 Jan 2020 10:50 am

 

Published : 15 Jan 2020 10:50 AM
Last Updated : 15 Jan 2020 10:50 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மனிதப் பற்களில் விஷம் உண்டா?

ask-to-dingu

நல்லபாம்பு தண்ணீரில் நீந்துமா, டிங்கு?
- ஸ்ரீராம், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தோவாளை, குமரி.

நல்லபாம்பு மட்டுமல்ல, பெரும்பாலான பாம்புகள் நன்றாக நீந்தக்கூடியவை. உருவத்தில் பெரிய மலைப்பாம்புகளும் அனகோண்டாக்களும்கூட நன்றாக நீந்தும் திறனைப் பெற்றிருப்பதால், நீருக்கடியில் சென்று இரையைப் பிடித்துவிடுகின்றன. நீருக்கடியில் நீண்ட நேரம் மூச்சை அடக்கி வைத்து, வெளியே வந்த பிறகு சுவாசிக்கும் வகையில் திறனைப் பெற்றிருக்கின்றன, ஸ்ரீராம்.

பொருட்களின் விலையை 99, 999 ரூபாய் என்று வைக்கிறார்களே ஏன், டிங்கு?
- டி. மதன், 8-ம் வகுப்பு, யுனைடெட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஒட்டமடம், உடுமலை.

ஒரு பொருளை 100 ரூபாய், 1000 ரூபாய் என்று சொன்னால், ‘அவ்வளவா’ என்று அதிர்ச்சியடையும் மனித மனம். அதுவே 99, 999 என்று ஒற்றைப்படையில் விலையைச் சொல்லும்போது, விலை குறைவு என்ற தோற்றத்தைத் தருவதால் அதிர்ச்சியின் அளவு சற்றுக் குறைந்துவிடுகிறது. அதனால்தான் 99, 199, 999 என்று விலையை வைக்கிறார்கள், மதன். ஒரு ரூபாயைக் குறைத்து எப்படி எல்லாம் நம்மைச் சமாதானப்படுத்துகிறது இந்தச் சந்தை!

பல்பில் உள்ள டங்ஸ்டன் உருகாமல் எப்படி இருக்கிறது, டிங்கு?
- மா. சாய்குமரன், 7-ம் வகுப்பு, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வெண்ணந்தூர். நாமக்கல்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களிலேயே டங்ஸ்டன் மிக அதிகமான உருகு நிலையையும் கொதிநிலையையும் கொண்டது. 3422 டிகிரி செல்சியஸில்தான் டங்ஸ்டன் உருகும். தூய்மையான டங்ஸ்டன் நீளும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதனால்தான் பல்புகளில் எளிதில் உருகாத, நீளும் தன்மை கொண்ட டங்ஸ்டன் இழைகள் பயன்படுத்தப்படுகின்றன, சாய்குமரன்.

தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது சில நேரம் பிடித்த பாடல் மனத்தில் ஓடிக்கொண்டிருப்பது ஏன், டிங்கு?
- ம. தர்ஷினி, 8-ம் வகுப்பு, நேஷனல் பப்ளிக் பள்ளி, நாமக்கல்.

மனித மூளை விசித்திரமானது. இன்னும்கூடப் பல விஷயங்களுக்குப் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. தேர்வு அறையில் மனத்துக்குள் பாட்டு வருவதுக்கான காரணமும் அதில் ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள். வினாத்தாள் எளிதாக இருந்தால் அந்த சந்தோஷத்தில் பாட்டு வரலாம். வினாத்தாள் கடினமாக இருந்தாலும் என்ன எழுதுவது என்று தெரியாமல், பொழுதுபோகாமல் பாட்டு வரலாம். சாதாரணமாகவே சந்தோஷத்திலும் பாட்டு வருகிறது, துக்கத்திலும் பாட்டு வருகிறது, தர்ஷினி.

மனிதர்கள் கடித்தால் விஷம் என்கிறார்களே உண்மையா, டிங்கு?
- ச. நந்தினி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

மனிதப் பற்களில் விஷமில்லை. ஆனால், மனிதர்களின் பற்களில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இன்னொரு மனிதரைக் கடிக்கும்போது, எளிதாகத் தொற்றுக் கிருமிகள் பரவிவிடுகின்றன. இதனால் வலி, வீக்கம், புண் போன்றவை ஏற்படுகின்றன. மருத்துவரிடம் சென்று தொற்றுப் பரவாமல் இருக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இப்படிப் பின்விளைவுகள் இருப்பதால் மனிதப் பல்லை விஷம் என்று சொல்கிறார்கள், நந்தினி.

பொருளாதார மந்தநிலை என்றால் என்ன, டிங்கு?
- சே. தில்லை கணேஷ், 11-ம் வகுப்பு, மெளண்ட் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross Domestic Product) என்பது முதலீடு, வேலை வாய்ப்பு, வர்த்தக வரவு, பணவீக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவைச் சந்திக்கும்போது ஏற்படும் சூழ்நிலையைப் ‘பொருளாதார மந்தநிலை’ என்கிறார்கள். ஒரு நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வைத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கணக்கிடுகிறார்கள். உதாரணத்துக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அதைப் பொருளாதாரச் சரிவு என்கிறார்கள். இரு காலாண்டுகள் இந்த நிலை நீடிக்குமானால், அதைப் ‘பொருளாதார மந்தநிலை’ என்கிறார்கள், தில்லை கணேஷ்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


DinguAsk to dinguடிங்குடிங்குவிடம் கேளுங்கள்நல்ல பாம்புமனிதப்பல்பல்புதேர்வு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author