

ஆசிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கோவையைச் சேர்ந்த எஸ்.கே. தனுஜா. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சர்வதேச இளையோர் யோகா சம்மேளனமும் யோகா கலாச்சாரமையமும் இணைந்து ஆசிய யோகாசனப் போட்டியை நடத்தின. இதில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி தனுஜா, “எலிசபெத் ஆசிரியர் மூலம்தான் யோகா அறிமுகமானது. நான்காம் வகுப்பு முதல் யோகாசனம் கற்று வருகிறேன். தற்போது ஹரி யோகாலயா மையத்தில் மாஸ்டர் ஜெயக்குமாரிடம் யோகாசனம் கற்று வருகிறேன். ஆசிய யோகாசனப் போட்டியில் 'பேக்வார்டு பெண்டிங்' பிரிவில் கலந்து கொண்டு, 150-க்கு 148 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தேன்.
இந்தியாவுக்கு வெளியே நான் பங்கேற்ற முதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கான உந்து சக்தியாகவும் இது அமைந்துள்ளது” என்கிறார்.
மாவட்ட, மாநில போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் குவித்திருக்கும் இவர், “உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளை எதிர்கொள்வது சற்று எளிது. ஆனால், ஆசியப் போட்டி சற்று மாறுபட்டது. வீரர்களிடையே போட்டி அதிகம். கடுமையாகப் பயிற்சி செய்து என்னைத் தயார்படுத்தியிருந்தேன். போட்டியின்போது எப்படியாவது ஒரு பதக்கம் வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
விடா முயற்சியுடன் செயல்பட்டேன். அதற்குத் தங்கப் பதக்கமே கிடைத்தது எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. இதுபோன்ற போட்டிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அனுபவத்தையும் தந்துள்ளது” என்று சொல்லும் தனுஜா, எதிர்காலத்தின் இன்னும் பல சாதனைகளைச் செய்வார்.
- த. சத்தியசீலன்