

குளிர்பானம் பருகப் பயன்படும் உறிஞ்சு குழலை (ஸ்டிரா) தானாகச் சுழல வைக்க உங்களால் முடியுமா? ஒரு சோதனை செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
பிளாஸ்டிக் பாட்டில்
உறிஞ்சு குழல்
எப்படிச் செய்வது?
# மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து மேசையின் மீது வைக்கவும்.
# உறிஞ்சு குழலை எடுத்து கம்பளித் துணியில் 1 நிமிடம் வரை நன்றாக அழுத்தி தேய்க்கவும். கம்பளி இல்லை என்றால் தலை முடியில் உறிஞ்சு குழலைத் தேய்க்கலாம்.
# பின்னர் அந்த உறிஞ்சு குழலை, பாட்டிலின் மூடியில் கிடைமட்டமாக வையுங்கள். மூடியின் இரு புறமும் உறிஞ்சு குழல் ஒரே அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
# இப்போது உறிஞ்சு குழலின் அருகே உங்களுடைய ஆட்காட்டி விரலைக் கொண்டு செல்லுங்கள். உறிஞ்சு குழலைத் தொட்டுவிட வேண்டாம்.
# உங்கள் விரலை நகர்த்த நகர்த்த உறிஞ்சு குழல் உங்கள் விரலைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம்.
உறிஞ்சு குழலைத் தொடாமல் தானாக அது நகர்ந்து வருவது எப்படி?
காரணம்
இந்தச் சோதனையில் ‘ஸ்டாட்டிக் எலெக்ட்ரிக்சிட்டி’ எனப்படும் உராய்வு மின்சாரம் பயன்படுகிறது. உறிஞ்சு குழலைக் கம்பளி அல்லது தலைமுடியில் தேய்க்கும்போது, உராய்வின் காரணமாக உறிஞ்சு குழல் மின் ஆற்றலைப் (சார்ஜ்) பெற்றுவிடுகிறது. அதனால் உறிஞ்சு குழல் அருகே விரலைக் கொண்டு செல்லும்போது, அது விரலை ஈர்க்கிறது. கை விரலை நகர்த்தும் திசையில் உறிஞ்சு குழல் பின்தொடர்ந்து நகர்கிறது.
பயன்பாடு
உராய்வு மின்னியலின் பண்பை அறிய இந்தச் சோதனை உதவுகிறது.