Published : 11 Dec 2019 01:09 PM
Last Updated : 11 Dec 2019 01:09 PM

மாய உலகம்! - உலகின் சிறந்த கல்வி எது?

மருதன்

நீங்கள் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து, எவ்வளவோ தேர்வுகளை எழுதி, கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, நினைவில் தேக்கி வைத்திருக்கும் அனைத்தையும் எது மறக்கடிக்கிறதோ அதுவே சிறந்த கல்வி என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.

இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா? வள்ளுவர், ஷேக்ஸ்பியர், மார்க்ஸ், சாக்ரடீஸ், கன்ஃபூஷியஸ், கபீர், தாகூர் என்று நான் விரும்பிப் படிக்கும் அனைவரையும் மறக்க வேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் அவர்கள் சொல்லிருப்பவை தவறு என்கிறீர்களா?
இப்படிக் கேட்டால் நம் கையைப் பிடித்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பூந்தொட்டி ஒன்றைக் காட்டுகிறார் ஜேகே. நீங்கள் நிறைய படிப்பவர் போலிருக்கிறது.

இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஓ, இது கூடவா தெரியாது எனக்கு? இந்த ரோஜாவை மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ வகை ரோஜாக்களை எல்லாம் கண்டிருக்கிறேனாக்கும். அயல் நாடுகளில் மட்டுமே பூக்கும் அரிய ரோஜாவைக்கூடப் பார்த்திருக்கிறேன். சட்டென்று ஷேக்ஸ்பியர் நினைவுக்கு வருகிறார்.

அது சரி, நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இருக்கிறது என்கிறார் ஜேகே. இந்த எளிய ரோஜாவைப் பார்த்து ரசிக்கக்கூட உங்கள் கல்வி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த ரோஜா இன்று காலைதான் மலர்ந்திருக்கிறது. முதல் முறையாக இந்த மலர் நம் உலகுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

முதல் முறையாகக் காற்றை எதிர்கொண்டு மெல்ல மெல்ல அசைந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இந்த ரோஜாவை எப்படி இதற்கு முன்பு கண்டிருக்க முடியும்? எப்படி இதைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரிந்திருக்க முடியும்? எப்படி இதை ஷேக்ஸ்பியரோ வேறு ஒருவரோ கண்டு எழுதியிருக்க முடியும்?
ஒரு மலரைப் பார்க்கும்போது இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம், ஏற்கனெவே படித்திருக்கிறோம், ஏற்கெனவே ரசித்து முடித்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்றால் அதை உங்கள் கல்வியின் குறை என்பேன்.

உங்களுக்கான வழிகாட்டுதலை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்ஃபூஷியஸால் எப்படித் துல்லியமாக அளித்திருக்க முடியும்? என் மனிதர்கள் மதத்தின் பெயரால் ஏன் பிரிந்திருக்க வேண்டும் என்னும் கபீரின் கேள்விதான் அவர் பாடலாக மாறியது. என் மனிதர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும் என்னும் மார்க்சின் சிந்தனைதான் அவர் எழுத்தாக விரிந்தது.

உங்கள் கல்வி என்ன சொல்கிறது தெரியுமா? மாபெரும் சிந்தனையாளர்கள் உங்களுக்கும் சேர்த்து சிந்தித்து முடித்துவிட்டார்கள். உன்னதமான கவிதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. அழகிய பாடல்கள் ஏற்கெனவே பாடப்பட்டுவிட்டன. முக்கியமான கண்டுபிடிப்புகள் முன்பே நிகழ்ந்துவிட்டன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதைத் தவிர்த்து வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறது.

உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, ‘இதுவே உயர்வானது‘ என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.

மாறாக, தனது மெல்லிய கரங்களால் உங்கள் விழிகளை அது முழுமையாகத் திறக்கும். உங்கள் கண்களுக்குள் விழுந்துகிடக்கும் தூசியை அகற்றி உங்கள் பார்வையை அகலப்படுத்தும். உங்கள் புலன்களை வருடிக்கொடுத்து, கூர்மைப்படுத்தும். உங்கள் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு தோழமையோடு உரையாடும். உங்கள் சமூகம் உங்கள் சாயலில் இருப்பதையும் உங்கள் பிரச்சினைகளே உங்கள் உலகின் பிரச்சினைகளாக நீண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டும். இதைப் பற்றி எல்லாம் நீ என்ன நினைக்கிறாய் என்று உங்களைக் கிளறிவிட்டு, நீங்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும்.

உங்கள் தவறுகளை, உங்கள் தடுமாற்றங்களை, உங்கள் சறுக்கல்களை, உங்கள் குறைபாடுகளை அது ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளாது. நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளையும் நீங்கள் பெறும் மதிப்பெண்களையும் உங்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, ‘நீ மெய்யாக என்ன கற்றுக்கொண்டாய்? உன் வார்த்தைகளால் சொல், கேட்போம்’ என்று புன்னகை செய்யும்.

முதுகில் மட்டுமல்லாமல், மூளையிலும் அதிகம் சுமக்காதே என்று அக்கறையோடு உங்கள் சுமையைக் கீழே இறக்கி வைக்கும். உங்கள் உடலும் உள்ளமும் பஞ்சுபோல் லகுவானதை உறுதிசெய்துகொண்ட பிறகு, புதிய சிறகுகளை எடுத்துவந்து உங்கள் முதுகில் செருகிவிடும். ‘உன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கடந்துசெல்’ என்று உங்களை மேலே, மேலே உந்தித் தள்ளும்.

முதல் முறையாக ஒரு பறவையைப் போல் சிறகடித்து நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கான புத்தம் புதிய திசைகளை நீல வானம் காண்பிக்கும். புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது புதிய வெளிச்சம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டு மெய்யான அறிவை நீங்கள் கண்டடைவீர்கள். அந்த அறிவு ஏற்கெனவே கண்டறியப்பட்டதாக இல்லாமல் இந்த ரோஜாவைப்போல் புதிதானதாக இருக்கும்.

ஒரு மலரை மலராகக் காண்பது எப்படி என்பதை உணரும்போது, ஒரு மனிதனை மனிதனாக மட்டும் காணும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த அதிசயத்தை எது நிகழ்த்துகிறதோ அதுவே உலகின் சிறந்த கல்வி. உன் பாடலை நீதான் பாடவேண்டும் என்கிறார் கபீர். உன் தேடல் உன்னிடமிருந்து புறப்பட்டு வரட்டும் என்கிறார் புத்தர்.

நான் எழுப்பியவை என் கேள்விகள்; உன்னுடையவை எங்கே என்கிறார் சாக்ரடீஸ். உன்னதமான வரிகள் உன்னிடமிருந்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கின்றன என்கிறார் தாகூர். நான் சொல்லாமல் விட்ட ஆயிரம் கதைகளில் ஒன்றையேனும் சொல்லேன் கேட்போம் என்கிறார் டால்ஸ்டாய். நானும் அவர்களோடு சேர்ந்து காத்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார் ஜேகே.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x