

மிது கார்த்தி
கண்ணாடி டம்ளரில் விளிம்பு வரை உள்ள தண்ணீரில் நாணயங்களைப் போட்டால், தண்ணீர் வழியுமா, வழியாதா? ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
கண்ணாடி டம்ளர்
10 நாணயங்கள்
மை நிரப்பி
தண்ணீர்
எப்படிச் செய்வது?
* கண்ணாடி டம்ளரின் விளிம்புவரை தண்ணீரை நிரப்புங்கள். மை நிரப்பியின் உதவியால் சொட்டுசொட்டாக விட்டு விளிம்புவரை தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
* இப்போது ஒரு நாணயத்தை எடுத்து செங்குத்தாக டம்ளரில் போடுங்கள்.
* அதேபோல அடுத்தடுத்து நாணயங்களைப் போடுங்கள்.
* நாணயங்களைப் போடும்போது தண்ணீர் என்ன ஆகிறது என்று கவனியுங்கள்.
* நீங்கள் எத்தனை நாணயங்களைப் போட்டாலும் டம்ளரில் தண்ணீர் தளும்பினாலும், அது கீழே சிந்தாமல் இருப்பதைக் காணலாம்.
* டம்ளரில் நாணயங்களைப் போட்ட பிறகும் தண்ணீர் சிந்தாமல் போனது எப்படி?
காரணம்
எல்லாத் திரவங்களுக்கும் ஒரு மேற்பரப்பு உண்டு. அந்த மேற்பரப்பில் ஒரு விசை செயல்படுவதும் உண்டு. அந்த விசைதான் திரவங்களின் பரப்பு இழுவிசை. திரவத்தில் ஓரலகுப் பரப்பில் செயல்படும் விசையே பரப்பு இழுவிசை. நாணயங்களை ஒன்றன் பின் ஒன்றாக டம்ளரில் போட்டாலும், நீர் வெளியே வராமல் போனதற்குக் காரணம் இந்தப் பரப்பு இழுவிசைதான்.
பரப்பு இழுவிசையின் காரணமாகத் தண்ணீரின் மேற்பரப்பில் திரை போட்டது போல இருக்கும். இது நன்கு இழுபடும் தன்மையில் இருப்பதால், நாணயங்களை உள்ளே போடப் போட தண்ணீரின் மேற்பரப்பு உப்பி காட்சி அளிக்கிறது. இது டம்ளரிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் பார்த்துக்கொள்கிறது. எனவேதான் எத்தனை நாணயங்களை டம்ளரில் போட்டாலும், அதன் அழுத்தம் நீரில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
பயன்பாடு
தண்ணீரின் மீது நிற்கும் பூச்சிகள் மூழ்காமல் இருப்பதற்கும் சோப்பு நீரில் உருவாகும் குமிழி நீண்ட நேரம் நிலைத்து நிற்பதற்கும் பரப்பு இழுவிசைதான் காரணம்.