

‘கராத்தே கிட்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, கிடைத்த உத்வேகத்தால் கராத்தே கற்கத் தொடங்கியுள்ளார் டி. பொன் ஏகாம்பரம். பன்னிரண்டு வயதில் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்த இவர், மூன்றே ஆண்டுகளில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதால், இவரைப் பாராட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சிறந்த விளையாட்டு வீரருக்கான சான்றிதழை அளித்துள்ளார்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ‘கராத்தே கிட்’ படம் பார்த்தேன். உடனே கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. பெற்றோரிடம் சொன்னவுடன், படிப்புக்கும் கராத்தேவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, என்னைக் கராத்தே வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். கராத்தேவில் எனக்கு இருந்த ஆர்வத்தைத் தொடர்வதற்கான பொறுப்பை என்னிடமே ஒப்படைத்தது எனக்குப் பிடித்திருந்தது.
அந்தப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டதால்தான் என்னால் கராத்தேவில் சாதிக்க முடிந்தது” என்கிறார் பாளையங்கோட்டை சின்மயா வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் பொன் ஏகாம்பரம். படிப்பு, கராத்தே என இரண்டையும் சமநிலையுடன் அணுகுவதற்காகத் தினமும் அதிகாலை எழுந்துகொள்வதாகச் சொல்லும் இவர், “இப்போது பத்தாம் வகுப்பு என்பதால், தினமும் காலை 4 மணி முதல் 5 மணி வரை படிப்பதற்காக ஒதுக்கிவிடுவேன். அதற்குப் பிறகு, கராத்தே பயிற்சியை ஒரு மணி நேரம் முடித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்வேன்.
கராத்தே கற்கத் தொடங்கிவிட்டாலே, இயல்பாகவே அன்றாடச் செயல்களை நாம் கூடுதல் கவனத்துடன் செய்யத் தொடங்கிவிடுவோம். அத்துடன், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள, கராத்தே எப்போதும் கைகொடுக்கும். ஒருமுறை, பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும்போது எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்துவிட்டது.
உடனே பல்டி அடித்து ஆட்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். கராத்தே தெரிந்தால் இந்த மாதிரி ஆபத்தான நேரத்தில் நம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்; மற்றவர்களையும் காப்பாற்ற முடியும். கராத்தே அற்புதமான தற்காப்புக் கலை. கராத்தேவில் முனைவர் பட்டம் வாங்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார், பொன் ஏகாம்பரம்.