Published : 04 Dec 2019 11:44 AM
Last Updated : 04 Dec 2019 11:44 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பூமியின் மையப் பகுதியில் என்ன இருக்கும்?

தண்டவாளத்தில் சரளைக் கற்களை நிரப்புவது ஏன், டிங்கு?

– வெ.வெ. தேவசேனா, 4-ம் வகுப்பு,
எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

அதிக எடை மிகுந்த ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அந்தத் தண்டவாளங்களை, தண்டவாள அடிக்கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது கான்கிரீட் அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தின் மேல் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான வழவழப்பான கற்கள் என்றால், வேகமாக ரயில் செல்லும்போது, அதிர்வில் உருண்டு ஓடிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பிட்ட உருவம் இல்லாமல் கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது உருண்டைக் கற்களைப்போல் சரளைக் கற்கள் உருண்டு ஓடுவதில்லை.

சரளைக்கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பு இல்லை. மழை நேரத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. தாவரங்கள் முளைப்பதில்லை, தேவசேனா.

என் ஞாபக சக்தியை அதிகரிக்க யோசனை சொல்ல முடியுமா, டிங்கு?

– இ. அனுஷியா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

முதலில் ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். எதையும் என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு விஷயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்தே அது நினைவில் நிற்கும் அல்லது மறந்து போகும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து, நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். பாடம் சம்பந்தமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு முறை எழுதிப் பார்த்துவிடுங்கள்.

மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய புதிர்களைப் போட்டுப் பாருங்கள்; விளையாட்டுகளை விளையாடுங்கள். இனிப்புகளை அதிகம் சாப்பிடாதீர்கள். மூளைக்குப் பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும், அனுஷியா.

தென்னை மரத்தின் உயரத்துக்கு என்ன காரணம், டிங்கு?

– எஸ். ரம்யா, 8-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

தென்னை, பனை போன்ற மரங்களுக்கு மற்ற மரங்களைப்போல் கிளைகளோ இலைகளோ கிடையாது. உயரத்தில் விசிறி போன்று கீற்றுகள் மட்டுமே காணப்படுகின்றன. கீற்றுகள், காய்கள், பழங்கள், விதைகள் போன்றவற்றை விலங்குகள் சாப்பிடாத வண்ணம் பாதுகாத்துக்கொள்வதற்காகப் பரிணாம வளர்ச்சியில் உயரமான தகவமைப்பைப் பெற்றிருக்கின்றன. தென்னையில் குட்டையான மர வகைகளும் இருக்கின்றன, ரம்யா.

பூமியைத் துளையிட்டால் நடுவில் என்ன இருக்கும், டிங்கு?

– ஏ. திருமால், 8-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

ஒரு காலத்தில் பூமி வெப்பக் குழம்பாகத்தான் இருந்தது. பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மேற்பகுதியில் வெப்பம் குறைந்து, குளிர்ந்து, நிலப்பரப்பாக (திடமாக) மாறியது. இன்றும் பூமியின் மையப் பகுதியில் வெப்பக்குழம்பு அதிக வெப்பத்தில் (சுமார் 5000 டிகிரி செல்சியஸ்) தான் இருக்கிறது. பூமியின் நடுப்பகுதிக்குத் துளையிட முடியாது. துளையிடுவதாக வைத்துக்கொண்டால், வெப்பக்குழம்பு பீறிட்டு வெளியே வரும். அனைத்து உயிரினங்களும் மடிந்து போகும், திருமால்.டிங்குவிடம் கேளுங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x