Published : 27 Nov 2019 09:33 AM
Last Updated : 27 Nov 2019 09:33 AM

மாய உலகம்: எந்த மொழி உயர்ந்தது?

பெரிய அட்டைப் பெட்டியோடு ஓர் அந்நிய மனிதர் நடந்து வருவதைப் பார்த்ததும் பழங்குடி மக்கள் ஒதுங்கி நின்றனர். அவர்கள் கண்களில் திகைப்பும் பயமும் சம அளவில் கலந்திருந்தன. தடுப்பூசி போடுபவர்களிடம் இவ்வளவு பெரிய பெட்டி இருக்காதே? ஒருவேளை பெரிய ஊசியோ? அவர்கள் மனதைப் படித்ததைப் போல் அந்த மனிதர் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, புன்னகையோடு அனைவரையும் அருகில் அழைத்தார்.

‘‘யாரும் பயப்படாதீர்கள். என் பெயர் கணேஷ் தேவி. இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்து அங்குள்ள மக்கள் பேசும் மொழிகளை ஆய்வு செய்து வருகிறேன். நகரங்களிலும் கிராமங்களிலும் மட்டுமா மக்கள் வசிக்கிறார்கள்? மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் அடர்ந்த காடுகளிலும் ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களும் பல விதமான மொழிகளைப் பேசுகிறார்கள். அந்த மொழிகளை எல்லாம் ஆய்வு செய்து பதிவுசெய்ய விரும்புகிறேன். அதற்காகத்தான் குஜராத் மலைப்பகுதிகளுக்கு இன்று வந்திருக்கிறேன். அதுவும் சிறிய பரிசோடு.”

அட, இவர் நம் மொழியில் சரளமாகப் பேசுகிறாரே என்று திகைப்போடு மக்கள் அவரை நெருங்கினார்கள்.

‘‘நான் ஒரு பத்திரிகையை நடத்தி வருகிறேன். வழக்கம் போல் மராத்தி, இந்தி, தமிழ் போன்ற பெரிய, பெரிய மொழிகளைப் பேசுபவர்களுக்கான பத்திரிகை அல்ல. முழுக்க முழுக்கப் பழங்குடி மக்களுக்கான இதழ். மொத்தம் பத்து மொழிகளில் இது வெளிவருகிறது. முதல் முறையாக நீங்கள் பேசும் சௌத்ரி மொழியிலும் அதைக் கொண்டு வந்திருக்கிறேன். உங்களிடம் சேர்ப்பதற்காக 700 பிரதிகள் இதில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பத்து ரூபாய். இந்தப் பெட்டி இன்று முழுக்க இங்கேதான் இருக்கும். நான் உங்கள் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, என் ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு இன்று இரவு புறப்படுகிறேன். தேவைப்பட்டவர்கள் பணத்தை இதில் போட்டுவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.”

ஒதுங்கி நின்ற ஒவ்வொருவரும் கண்கள் விரிய பெட்டியை நெருங்குவதைப் பார்த்தபடி கணேஷ் தேவி நடக்கத் தொடங்கினார். சில நூறு குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஒரு பகுதிக்கு இவ்வளவு பிரதிகள் அவசியம் இல்லைதான். மேலும் பத்து ரூபாய் என்பது குறைவான தொகையும் அல்ல. காட்டிலும் மேட்டிலும் நாள் முழுவதும் வேலை செய்தாலும் கொஞ்சம் சில்லறைகள்தான் கிடைக்கும். அது போக, இவர்களில் எவ்வளவு பேருக்குத் தங்கள் மொழியில் படிக்கத் தெரியும் என்பதும் கேள்விக்குறிதான். இத்தனை சிக்கல்களைக் கடந்து எத்தனை பேர் இதை வாங்குவார்கள்? எத்தனை பேருக்கு இதை உட்கார்ந்து படிப்பதற்கான விருப்பமும் ஓய்வும் இருக்கும்?

என்னிடம் மட்டும் நிறைய பணம் இருந்திருந்தால் இங்குள்ள குழந்தைகளுக்கு உலகின் அறிவை எல்லாம் இயன்றவரை திரட்டிக்கொண்டுவந்து அளிக்க முடியும். நகர மக்களுக்கு இணையான வாய்ப்புகளையும் வாழ்வையும் அளித்து, அவர்களுடைய அறியாமையை முற்றிலுமாக அகற்ற முடியும். அது மட்டும் நடந்துவிட்டால், நாங்கள் எந்த வகையிலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த மலை மக்கள் அழுத்தமாக இந்தியாவுக்கும் உலகுக்கும் உணர்த்துவார்கள்.

ஊர் மக்களிடம் பேசுவது, கேள்விகள் கேட்பது, குறிப்புகள் எடுத்துக்கொள்வது என்று முழு தினமும் சுற்றி அலைந்து பணியாற்றிவிட்டு, இரவு நேரம் பெட்டியை நெருங்கினார். ஒரே ஓர் இதழ்கூட உள்ளே இல்லை. கணேஷ் தேவி கையை உள்ளே விட்டுத் துழாவிப் பார்த்தார். கை நிறைய நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் தட்டுப்பட்டன. எடுத்துப் பார்த்தார். நாணயங்கள் பெரும்பாலும் அழுக்காக இருந்தன. ரூபாய் நோட்டுகளோ கசங்கியும் சுருண்டும் கரை படிந்தும் இருந்தன. பெண்களின் அழுக்குச் சேலைக்குள், ஆண்களின் இடுப்புத் துண்டுக்குள், வீட்டின் சந்து பொந்துகளுக்குள் அடைபட்டுக் கிடந்த தாள்கள் அவை என்பது பார்க்கும்போதே தெரிந்தது.

‘‘அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் அதிகம் கொண்டு வருகிறீர்களா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். நான்கைந்து பேர் தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தனர். ‘‘நிச்சயம் கொண்டுவருகிறேன். இவ்வளவு பேருக்கு இங்கே எழுதப் படிக்கத் தெரியும் என்று எனக்குத் தெரியாது.”

‘‘எங்களில் பலருக்குப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். அதனால் என்ன? நாங்கள் காலம் காலமாகப் பேசும், பாடும், தொழும் மொழியை நீங்கள் அச்சிட்டுக் கொண்டுவந்திருக்கிறீர்கள். நீங்கள் கொண்டுவந்த புத்தகத்தைக் கையில் தாங்கி நிற்கும்போது எங்கள் உடலும் உள்ளமும் பூ போல் விரிந்து மலர்கின்றன. எழுத்துகளின் மீது விரல்களைப் படரவிடும்போது எங்கள் அச்சமும் துயரமும் பறந்தோடிச் செல்வது போலிருக்கிறது.

பக்கங்களை மெலிதாகப் புரட்டும்போது எங்கள் மண்ணில் வாழ்ந்து மறைந்த மக்களும், எங்கள் பண்பாடும், எங்கள் வரலாறும், எங்கள் கனவுகளும் ஏக்கங்களும் உயிர்பெற்று எழுந்துவருவதை உணர்கிறோம். ஒரே ஒரு எழுத்தைக்கூட வாசிக்க முடியாவிட்டாலும் நீங்கள் கொண்டுவந்த அனைத்தும் எங்கள் புத்தகங்கள். ஒரே ஒரு எழுத்தைக்கூடப் படிக்க முடியாவிட்டாலும் எங்கள் ஒவ்வொருவராலும் உணர்வுபூர்வமாகப் புத்தகங்களோடு உரையாட முடிகிறது.”

அனைவரும் புறப்பட்டுச் சென்ற பிறகு மெல்ல நடக்கத் தொடங்கினார் கணேஷ் தேவி. இவர்களா கல்லாதவர்கள்? இவர்களையா நான் முன்னேற்றி, நகர மக்களுக்கு இணையாக வளர்த்து எடுக்க வேண்டும்? மாபெரும் அறிஞர்களும் தத்துவ ஆசிரியர்களும் கல்விமான்களும் கற்றுக் கொடுக்காத வாழ்நாளுக்கான ஒரு பெரும் பாடத்தை இன்று இவர்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை செய்து கொண்டிருந்ததை இனி தலைகீழாக மாற்றிச் செய்ய வேண்டும்.

மலைகளிலிருந்தும் பள்ளத்தாக்குகளிலிருந்தும் குக்கிராமங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் வண்ணமயமான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை மாநகரங்களுக்குக் கொண்டு செல்லப் போகிறேன். ஒரே ஒரு சொல்கூடப் படிக்கத் தெரியாத இவர்களிடமிருந்து உன்னதமான பாடங்களைப் படித்துக்கொண்டு, அவற்றைப் பெரிய பெரிய மொழிகளுக்குக் கொண்டுசெல்லப் போகிறேன். வாசிப்பு என்றால் என்ன, கல்வி என்றால் என்ன, மொழி என்றால் என்ன, பண்பாடு என்றால் என்ன, நம்பிக்கை என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன என்பதை உலகம் இவர்களிடம் இருந்து கற்கட்டும்.

காலி பெட்டி ஏனோ அதிகம் கனப்பதுபோல் இருந்தது.

- மருதன், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x