Published : 27 Nov 2019 09:33 AM
Last Updated : 27 Nov 2019 09:33 AM

கதை: உதவி

மழை நீரால் அந்தச் சிறிய குட்டை நிரம்பியிருந்தது. தண்ணீரைக் கண்ட தவளைகள் மகிழ்ச்சியாக ’க்ர்ர்ரக்… க்ர்ர்ரக்…’ என்று சத்தமிட்டபடி விளையாடிக்கொண்டிருந்தன.

குட்டையை ஒட்டி வளர்ந்திருந்த ஆலமரத்தில் காகம் குடும்பம் ஒன்று கூடு கட்டி வசித்துவந்தது. இடைவிடாமல் தவளைகள் எழுப்பும் ஒலியால் காகத்தின் குஞ்சுகள் பயந்தன.

“இப்படித் தவளைகள் கத்தினால் குஞ்சுகள் என்ன செய்யும்? சத்தத்தைக் குறைக்கச் சொல்லலாமே?” என்று கேட்டது அம்மா காகம்.

அப்பா காகம் தவளைகளின் தலைவனைத் தேடிச் சென்றது. “எங்க குஞ்சுகள் பிறந்து சில நாட்களே ஆகின்றன. உங்களது அதீத சத்தத்தால் பயந்து அலறுகின்றன. சத்தத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டது.

“தண்ணீரைக் கண்டால் எங்களுக்கு இயல்பாகவே மகிழ்ச்சி பொங்கிவிடும். இது எங்களின் இயல்பு. அதை யாருக்காகவும் நாங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள மாட்டோம். உனக்குத் தொந்தரவாக இருந்தால், வேறு இடத்துக்குச் சென்றுவிடலாம்” என்று சொல்லிவிட்டது தலைவன் தவளை.

கூடு திரும்பிய அப்பா காகம், “தவளைகளால் சத்தத்தைக் குறைக்க முடியாதாம்” என்றது.

இதைக் கேட்ட அம்மா காகத்துக்குக் கோபம் வந்துவிட்டது. “தவளைகளின் எதிரியான பாம்பை அழைத்து, இவற்றை விரட்டிவிடுகிறேன்” என்று கூறிவிட்டுப் பறந்தது.

புற்றின் அருகே சென்று, “கொஞ்சம் வெளியில் வர்றீயா?” என்று குரல் கொடுத்தது அம்மா காகம்.

வெளியே எட்டிப் பார்த்தது பாம்பு.

“நல்ல தூக்கமா? எங்கள் மரத்துக்கு அருகில் ஏராளமான தவளைகள் இருக்கின்றன. அவற்றின் ஆட்டம் தாங்க முடியவில்லை. என் குஞ்சுகள் பயத்தில் அலறுகின்றன. கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும்” என்றது அம்மா காகம்.

மகிழ்ச்சியோடு பாம்பு, “இதெல்லாம் ஒரு விஷயமா? நீ கிளம்பு. இப்போதே வருகிறேன்” என்றது.

குட்டைக்கு வந்த பாம்பு, அங்கே தவளைகள் பெருகியிருந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தது. வேகமாகத் தவளைகளை விழுங்கிவிட்டு, நகர முடியாமல் புற்றுக்குத் திரும்பிச் சென்றது.

தலைவன் தவளைக்கு விஷயம் தெரிந்தது. மிகவும் வருந்தியது. காகங்களிடம் வந்தது. “எதிரிக்கு வழிகாட்டி, பாம்புக்கு உணவாக்கிவிட்டாய். இப்போதே இந்த இடத்தைவிட்டுச் செல்கிறோம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். பாம்பு உனக்கும் எதிரிதான். கவனமாக இரு” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

“அன்றே சத்தத்தைக் குறைத்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது” என்ற காகங்களுக்கு நிம்மதியாக இருந்தது.

மறுநாள் தவளைகளைத் தேடிவந்த பாம்பு, ஏமாற்றம் அடைந்தது. அப்போது இரண்டு காகங்களும் இரை தேடிப் பறந்து செல்வதைக் கவனித்தது. வேகமாக மரத்தில் ஏறி, குஞ்சுகளை விழுங்கியது. காகங்கள் கூட்டுக்கு திரும்பி வந்தன.

“என்னை மன்னித்துவிடுங்கள். நல்ல பசி. தவளைகளுக்காக இங்கே வந்தேன். அவை இல்லை என்றவுடன் பசியில் என்ன செய்கிறேன் என்பதை அறியாமல் குஞ்சுகளைச் சாப்பிட்டுவிட்டேன்” என்ற பாம்பு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டது.

“யாராவது பாம்பிடம் உதவி கேட்பார்களா? நீ செய்த காரியம் நமக்கே கெடுதலாக முடிந்துவிட்டது” என்றது அப்பா காகம்.

“இந்தப் பாம்பை நான் சும்மா விடப் போவதில்லை. பாடம் புகட்டப் போகிறேன்” என்று கோபமாகக் கூறியது அம்மா காகம்.

“பிரச்சினையை வளர்க்காதே” என்றது ஆண் காகம்.

“குழந்தைகளை இழந்த எனக்குதான் அந்த வலி தெரியும்” என்ற பெண் காகம், கீரியைச் சந்தித்தது. நடந்ததைக் கூறியது.

”அழாதே, உன் வலி எனக்குப் புரிகிறது. நான் அந்தப் பாம்பைக் கவனித்துக்கொள்கிறேன். பிறருக்குத் தீங்கு செய்ய நினைத்தால் அது நமக்கே தீங்காக முடியும் என்பது இப்போதாவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீ கிளம்பு” என்றது கீரி.

“தவறை உணர்ந்துவிட்டேன். இனிமேல் எவருக்கும் தீங்கு இழைக்க மாட்டேன். பாம்பைக்கூட துன்புறுத்த வேண்டாம். கொஞ்சம் மிரட்டினால் போதும்” என்றது காகம்.

“சரி, நீ போய் பாம்பை வெளியே வரச் சொல். மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றது கீரி.

காகம் பாம்புப் புற்றுக்கு அருகில் சென்று குரல் கொடுத்தது.

“என்ன, மீண்டும் தவளைகள் வந்து உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா?” என்று கேட்டபடியே வெளியே வந்தது பாம்பு.

”ஆமாம். இந்தத் தவளைகளின் தொல்லைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டது காகம்.

“உனக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப் போகிறேன். இதோ வருகிறேன்” என்று மகிழ்ச்சியோடு கிளம்பியது பாம்பு.

மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த கீரி வேகமாக ஓடிவந்தது. இதை எதிர்பார்க்காத பாம்பு திகைத்து நின்றது. இரண்டும் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டுக்கொண்டன. ஒருகட்டத்தில் பாம்பு எதிர்க்கத் தெம்பில்லாமல் சுருண்டு விழுந்தது.

“உன்னிடம் உதவி கேட்டவர்களிடம் இப்படித்தான் நடந்துகொள்வாயா? இனி இந்தப் பக்கமே இருக்கக் கூடாது. ஓடிப் போய்விடு” என்று எச்சரித்தது கீரி. உயிர் தப்பினால் போதும் என்று ஓடியது பாம்பு.

கீரிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றது காகம்.

- எஸ். அபிநயா, 11-ம் வகுப்பு, நாளந்தாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x