

ஒருவர் பேசும் தமிழைக் கூர்ந்து கவனித்தால், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடித்துவிடலாம். அந்தக் காலத்தில் இதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவருடைய ஊரைக் கணித்துவிடுவார்கள். அதற்குக் காரணம் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும் பேசும் மாறுபட்ட முறை.
‘இங்கே’ என்ற சொல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘இஞ்ச’, தஞ்சாவூர் பகுதியில் ‘இங்க’, திருநெல்வேலி பகுதியில் ‘இங்கனெ’, ராமநாதபுரம் பகுதியில்’இங்கிட்டு’ என்று வழங்கப்படுவது ஓர் எடுத்துக்காட்டு.
ஓர் உயிரினத்தையோ, தாவரத்தையோ, பொருளையோ குறிப்பதற்கான பெயர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுவது உண்டு. அதேநேரம் எழுத்து வழக்கு அனைத்துப் பகுதியினரும் புரிந்துகொள்வது போன்ற பொதுவான மொழியில் எழுதப்படுகிறது. பேச்சு மொழியைப் பொறுத்தவரை வட்டாரத்துக்கு வட்டாரம் தமிழ் பேசப்படும் முறை வேறுபடுகிறது. இப்படிக் குறிப்பிட்ட வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு, வட்டார வழக்கு என அழைக்கப்படுகிறது.
அண்டை மொழித் தாக்கம்
ஆந்திர எல்லைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்பவர்களுடைய பேச்சு மொழியில் தெலுங்குச் சொற்களும், கர்நாடக எல்லைக்கு அருகில் தர்மபுரி மாவட்டத்தில் வாழ்பவர்களுடைய பேச்சு மொழியில் கன்னடச் சொற்களும், கேரள எல்லைக்கு அருகில் குமரி மாவட்டத்தில் வாழ்பவர்களுடைய பேச்சு மொழியில் மலையாளச் சொற்களும் கலந்திருப்பதைப் பார்க்கலாம்.
அவர்களுடைய பேசும் முறையும்கூட சற்று மாறுபட்டே இருக்கும். எந்த மொழிக் கூட்டத்தினருடன் அதிகமாகப் பேசிப் புழங்குகிறார்களோ, அந்த மக்களுடைய மொழியால் ஒருவர் செல்வாக்கு பெறுவது இயல்பானதுதான்.
தமிழகத்தில் ஆட்சி புரிந்த தெலுங்கு பேசும் மதுரை நாயக்க மன்னர்கள், மராத்தி பேசிய தஞ்சை மராட்டிய மன்னர்கள், குடியேறிய குஜராத்திகள் போன்றோரின் வரவால் தெலுங்கு, மராத்தி, சௌராஷ்டிரம் போன்ற மொழிகளும் தமிழகத்தில் பேசப்படுகின்றன. அந்த மொழிச் சொற்களின் தாக்கமும் தமிழில் உண்டு.
தலைநகரத் தமிழ்
தமிழ்நாடு, தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. இதன் காரணமாக இயல்பாகவே தென்னிந்திய மொழி பேசுபவர்கள், வடஇந்தியர்கள், ஆங்கிலேயர்கள் சென்னையில் அதிகமாகக் குடியேறி வாழ்ந்தார்கள்.
நீண்டகாலமாக வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடியேறி வாழ்ந்த இடம் என்பதால், சென்னைத் தமிழுக்குப் பல மொழிச் சொற்கள் பங்களித்துள்ளன. சென்னை வழக்கில் தெலுங்கு, இந்தி, உருது, ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன. அதேநேரம் தமிழுக்கே உரிய தனித்தன்மையையும் சென்னை வழக்கு இழக்கவில்லை. உழைக்கும் வர்க்கத்தினர் பேசும் தமிழே சென்னை தமிழாகக் கருதப்படுகிறது. குடிசைப் பகுதிகளில் அதிகம் பேசப்படும் இந்த வழக்கு திரைப்படங்கள், நாடகங்களில் அதிகம் கிண்டலடிக்கப்பட்டதும் உண்டு.
தமிழகத்தின் முக்கிய வட்டார வழக்குகள்
மதுரை
கிராமங்களில் பேசப்படும் தமிழைப் பெருமளவு பிரதிபலிப்பது மதுரை வழக்கு. அவிங்க, இவிங்க, வந்தாய்ங்க, போனாய்ங்க போன்ற சொற்களுடன் மண்வாசனை கொண்டது மதுரைத் தமிழ்.
கொங்கு
கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட கொங்குப் பகுதி மக்கள் சற்றே இழுத்து இழுத்துப் பேசும் வழக்கைக் கொண்டவர்கள். ஏனுங்க, ஒட்டுக்கா போன்ற சொற்கள் கொங்குத் தமிழுக்கு உரியவை.
நெல்லை
தமிழ் மொழிக்கும் திருநெல்வேலிக்குமான தொடர்பு நீண்டது. அதேநேரம், நெல்லைத் தமிழ் என்றாலே எலே, மக்கா போன்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
தஞ்சை
தமிழகத்தில் பேசப்படும் வட்டார வழக்குகளில் கலப்பு மிகவும் குறைந்ததாகவும், தூய்மையான வழக்காகவும் கருதப்படுகிறது.
நாஞ்சில்
திருநெல்வேலிக்கு மிக அருகில் இருந்தாலும் நெல்லையில் பேசப்படும் தமிழில் இருந்து, குமரி மாவட்டத்தில் பேசப்படும் நாஞ்சில் நாட்டுத் தமிழ் வேறுபட்டே இருக்கிறது.
வட்டார இலக்கியம்
தமிழில் வேறுபட்ட பேச்சு வழக்குகள் உள்ளதுபோலவே, வட்டார மொழியில் அமைந்த இலக்கியங்களும் உண்டு. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இதுபோன்ற இலக்கிய வகை பிரபலமடைந்து வருகிறது. வெவ்வேறு வட்டார வழக்கில் எழுதப்பட்ட சிறுகதைகள், நாவல்கள் பிரபலமாகியுள்ளன. கரிசல் வட்டாரத்தைச் சேர்ந்த கி. ராஜநாராயணன் என்றழைக்கப்படும் கி.ரா. இந்த வகையைப் பிரலப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
அதேபோல கரிசல் வட்டார வழக்கு அகராதி, செட்டிநாட்டு வழக்கு அகராதி, நாஞ்சில் நாட்டு சொல்லகராதி, நடுநாட்டு வழக்கு அகராதி, நெல்லை வட்டார வழக்கு அகராதி கொங்கு வழக்கு அகராதி, தஞ்சை வட்டார வழக்கு அகராதி போன்றவையும் வெளியாகியுள்ளன.
| இந்த வாரம் ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘அமுதத் தமிழ்’ என்ற இயலின்கீழ் ‘பேச்சுமொழியும் எழுத்துமொழியும்’ என்ற உரைநடை உலகம் பகுதி. |
- ஆதி, தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in