

கீர்த்தி
செண்பகக் காட்டிலுள்ள மாமரத்தில் காகம் ஒன்று வசித்தது. காகத்துக்கு அணில் நண்பன். அது மாமரத்தின் அருகிலிருந்த ஆலமரத்தில் வசித்தது. அணில் புத்திசாலி. காகத்துக்குப் பிரச்சினை என்றால் அணிலிடம்தான் சொல்லும். அணிலும் நல்ல யோசனை சொல்லி, காகத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்.
கோடைகாலம் முடிந்ததும் காகம் மாமரத்தில் கூடு கட்டி, மூன்று முட்டைகளை இட்டது. சிறிது நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன. குஞ்சுகள் மீது பாசம்கொண்ட காகம் தினமும் உணவு தேடிக் கொண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுத்தது. குஞ்சுகளும் சில வாரங்களில் சற்றுப் பெரிதாக வளர்ந்தன. அவை கூட்டைவிட்டு வெளியே வந்து மரக்கிளையில் அமரத் தொடங்கின.
அம்மா காகம் குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுக்கத் தீர்மானித்தது. குஞ்சுகளை அழைத்து, “பிள்ளைகளே, இப்போது நான் உங்களுக்குப் பறக்கக் கற்றுத் தரப் போகிறேன். நான் உங்களைக் கிளையிலிருந்து கீழே தள்ளிவிடுவேன். அப்போது நீங்கள் சிறகுகளை விரித்துப் பறக்க முயற்சி செய்ய வேண்டும்” என்றது.
குஞ்சுகளும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டன.
அம்மா காகம் முதல் இரண்டு குஞ்சுகளையும் கீழே தள்ளிவிட்டது. பெரிய குஞ்சுகள் இரண்டும் சிறகுகளை அடித்தபடியே சற்று தூரம் பறந்து, தரையில் போய் அமர்ந்தன.
மூன்றாவது குஞ்சைத் தள்ளிவிடப் போனபோது, “ஐயோ, எனக்குப் பயமாக இருக்கிறது. நான் இன்னும் சில நாட்கள் கழித்துப் பறக்கக் கற்றுக்கொள்கிறேன். இப்போது வேண்டாம்” என்று கெஞ்சியது.
மூன்று குஞ்சுகளிலும் அது சிறிய குஞ்சு என்பதால் காகமும், “சரி, நீ அப்புறமாகப் பறக்கக் கற்றுக்கொள்” என்று சொல்லிவிட்டது. இப்படியே நாட்கள் கடந்தன. முதல் இரண்டு குஞ்சுகளும் ஓரளவு பறக்கக் கற்றுக்கொண்டன. அவை அருகிலுள்ள உயரம் குறைந்த மரங்களுக்குப் பறந்து சென்றன. தாமாகவே உணவும் தேடி உண்ணத் தொடங்கின.
மூன்றாவது குஞ்சு மட்டும் தினமும் அம்மாவிடம், “எனக்குப் பயமாக இருக்கிறது” என்று சொல்லி, கிளையிலேயே அமர்ந்துகொண்டது. அம்மா காகத்துக்குச் சிறிய குஞ்சின் மீது அதிகப் பாசம் இருந்ததால் தினமும் தானே உணவு தேடிக் கொண்டுவந்து கொடுத்தது.
ஆனாலும் அம்மா காகத்துக்குக் கவலையாக இருந்தது. ‘இவன் இப்படியே இருந்தால் எப்படிப் பறக்கக் கற்றுக்கொள்வான்? பறவைகள் என்றால் பறக்க வேண்டும் அல்லவா? கூடவே ஓரளவு வளர்ந்ததும் தானாகவே உணவு தேடி உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? எத்தனை நாட்கள்தான் நானே இவனுக்கு உணவு தேடிக்கொண்டு வர முடியும்?’ என்று நினைத்துக்கொண்டது.
ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த மூன்றாவது குஞ்சை மரக்கிளையிலிருந்து தள்ளிவிடச் சென்றால், “என்னைத் தள்ளிவிடாதீங்க” என்று நடுங்கியது. மறுநாள் அம்மா காகம் அணிலைச் சந்தித்தது. தன் மூன்றாவது குஞ்சைப் பற்றிச் சொன்னது.
சிறிது நேரம் யோசித்த அணில், “கவலைப்படாதே. நான் நாளை காலை வருகிறேன். நிச்சயம் உன் சிறிய மகன் பறக்கக் கற்றுக்கொள்வான்” என்றது.
மறுநாள் மாமரத்துக்கு வந்தது அணில். அம்மா காகத்திடம், “உன் மகனை இந்தக் காய்ந்த மெல்லிய மாமரக் கிளையில் உட்காரச் சொல்” என்றது அணில்.
காகமும் குஞ்சை அழைத்து வந்து, “கண்ணா, இப்போது பறக்க முயற்சி செய்” என்றது.
வழக்கம் போலவே குஞ்சு, “எனக்குப் பயமாக இருக்கிறது” என்று சொல்ல வாயைத் திறந்தது. சட்டென்று அணில் அந்த மாமரக் கிளையைத் தன் கூரிய பற்களால் கடித்து ஒடித்துவிட்டது. அவ்வளவுதான் குச்சிக் கிளையில் அமர்ந்திருந்த குஞ்சுக் காகம் கால் நழுவிக் கீழே சென்றது. சட்டென்று தன் சிறகுகளை அடித்துச் சிறிது தூரம் பறந்தபடியே தரையில் போய் அமர்ந்தது.
குஞ்சுக் காகத்துக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. ‘தான் எப்படிப் பறந்தோம்? தனக்குப் பறக்கத் தெரியுமா?’ என்று எல்லாம் நினைத்து ஆச்சரியப்பட்டது.
தன் பிள்ளை பறப்பதைப் பார்த்து மகிழ்ந்த அம்மா காகம், “நண்பா, நேற்றுவரை கிளையைவிட்டு இறங்குவதற்குப் பயந்துகொண்டிருந்த என் மகனை இன்று எப்படிப் பறக்க வைத்தாய்?” என்று அணிலிடம் கேட்டது.
“இதுநாள் வரை உன் பிள்ளை கீழே இறங்க பயந்துகொண்டே இருந்தான். நீயும் பாசத்தால் அவனைக் கீழே தள்ளிவிடவில்லை. இன்று அவன் அறியாமல் கிளையை ஒடித்துவிட்டேன். பிடி நழுவியதும் உன் பிள்ளை இறக்கையை நம்பத் தொடங்கிவிட்டான். அழகாகப் பறந்து காட்டினான். தண்ணீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக்கொள்ள முடியுமா? இனி உன் பிள்ளை நன்றாகப் பறப்பான்” என்றது அணில்.
அம்மா காகம் மட்டுமல்ல, குஞ்சுக் காகமும் உண்மையை உணர்ந்துகொண்டது. மகிழ்ச்சியுடன், “அம்மா, இன்று முதல் நானே இரையைத் தேடிக்கொள்கிறேன்” என்றது.