பள்ளி உலா

பள்ளி உலா
Updated on
2 min read

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, காவேரிப்பாக்கம் மேற்கு, வேலூர்.

மின்விசிறியுடன் கூடிய காற்றோட்டமான வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தூய்மையான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்குத் தலைமையாசிரியரின் சொந்தச் செலவில் வாகன வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கல்வியோடு மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், கேரம், செஸ், அறிவியல் கண்காட்சி போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி, பரிசுகளை வழங்கிவருகிறது.

2017-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றிருக்கிறது, இந்தப் பள்ளி. அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியாளர் மூலம் கராத்தே பயிற்சியளிக்கப் படுகிறது.

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடினமான உழைப்பால் இந்தப் பள்ளி மேலும் மேலும் முன்னேறி வருகிறது. மாணவர் சேர்க்கையிலும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காவனூர் புதுச்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம்

1947-ல் ஆரம்பிக்கப்பட்டு, 72 ஆண்டுகளாகச் செம்மையாகச் செயல்பட்டு வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்திலேயே, அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொடுதிரை வகுப்பறை கொண்ட அரசுப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சித்திரங்கள் வரையப்பட்ட, வட்ட மேஜை, நாற்காலிகளுடன் கூடிய செயல்வழிக் கற்றல் வகுப்பறை, சுத்தமான குடிநீர், தூய்மையான கழிவறை வசதிகள் செய்யப் பட்டிருக்கின்றன. கணித மன்றம், அறிவியல் மன்றம், செஞ்சிலுவைச் சங்கம், மொழி இலக்கிய மன்றங்கள், கலைத் திருவிழா போன்றவை முறையாகச் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட, மாநில அளவிலான அறிவியல் நிகழ்வுகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்று வருகிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் (NMMS) வருடந்தோறும் அதிக அளவிலும் சிறப்பான முறையிலும் வெற்றி பெற்று வருகின்றனர். Techno club போட்டிகளில் தொடர்ந்து வட்ட, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுவருகின்றனர்.

இந்தப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவி பெற்று பள்ளிக்குத் தேவையான ஆய்வகப் பொருட்கள், இணையதள வசதியுடன் கூடிய தொடுதிரை வகுப்பறை, வட்ட மேசை நாற்காலிகள், அறிவியல் களப் பயணம், போர்ட்டபிள் புரொஜக்டர் போன்ற வசதிகளை செய்துள்ளனர்.

இதனால் மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாகக் கீரைத் தோட்டம் மற்றும் 30 மூலிகைச் செடிகள் மாணவர் களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in