கற்பனை உயிரினம்: மீனாக மாறிய பெண்

கற்பனை உயிரினம்: மீனாக மாறிய பெண்
Updated on
1 min read

கடல் கன்னி என்றதும் ஒரு பெண்ணும் மீனும் கலந்த உடல் சட்டென ஞாபகத்துக்கு வரும். உடலின் மேல்பகுதி பெண்ணாகவும் அடிப்பகுதி மீனின் வாலாகவும் இருக்கும் கடல்கன்னியின் படங்களை கார்ட்டூன்கள் மற்றும் ஓவியங்களில் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். பள்ளிகளில் நடைபெறும் மாறுவேடப் போட்டியில் கடல்கன்னி வேடமும் நிச்சயம் இடம்பிடிக்கும். வித்தியாசமான உடலமைப்பைப் பெற்ற கற்பனை உயிரினமான கடல்கன்னியைப் பற்றி இந்த வாரம் பார்ப்போமா?

l கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல்கன்னி பற்றிய கதைகள் சிரியாவில் வலம் வரத் தொடங்கிவிட்டன. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலும் கடல்கன்னி பற்றிய கதைகள் ஏராளம் உள்ளன.

l கடல்வாழ் உயிரியான கடல்கன்னியைத் தேவதையாக வர்ணிக்கப்படுகிறது.

l குழந்தைகள் கதையாசிரியரான ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ (சின்னஞ்சிறிய கடல்கன்னி) கதை மிகவும் புகழ்பெற்றது. பூமியில் உள்ள இளவரசன் மீது ஆசைகொண்டு வாழரும் கடல்கன்னியின் கதை அது.

l வெள்ளம், புயல், கப்பல் விபத்துகள் மற்றும் படகுகள் மூழ்கிப்போகும் சம்பவங்களுடன் கடல்கன்னிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இப்போதும்கூட சில நாடுகளில் நம்பப்படுகிறது.

l மனதைக் கவரும் ஆண்களுக்குப் பல பரிசுகளையும் வரங்களையும் கடல்கன்னிகள் வழங்குவார்களாம். கடல்கன்னி அழுது வடிக்கும் கண்ணீர்தான் கடலில் முத்துகளாகக் கிடைக்கின்றன என்ற நம்பிக்கையும் உள்ளது.

l கடல்வாழ் உயிரியான ஆவுலியாவைப் பார்த்து, கடல்கன்னியைப் பார்த்ததாகச் சொல்லிவிடும் வழக்கமும் உண்டு. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் கரீபியன் கடலில் இந்த ஆவுலியாக்களைப் பார்த்துதான் கடல்கன்னிகளைப் பார்த்ததாகக் குறிப்புகளை எழுதிவிட்டார்.

l கிரேக்க மன்னன் மகா அலெக்சாண்டரின் தங்கையான திசலோனி இறந்தபிறகு கடல்கன்னியாக மாறி ஈஜியன் கடலில் வசிப்பதாக ஒரு கதை உள்ளது. அந்தக் கடலைக் கடக்கும் கப்பல்களை நிறுத்தி மாலுமிகளிடம் திசலோனி ஒரு கேள்வியைக் கேட்பாளாம். ‘அரசன் அலெக்சாண்டர் உயிரோடு இருக்கிறாரா?’ என்பதே அந்தக் கேள்வி. அலெக்சாண்டர் உலகத்தையெல்லாம் வென்று ஆரோக்கியமாய் வாழ்கிறார் என்ற பதிலை மாலுமிகள் சொல்ல வேண்டும். அந்தப் பதிலில் திருப்தியடைந்தால் மட்டுமே, கப்பலை அமைதியாகத் திசலோனி அனுமதிப்பாள். தவறாகப் பதில் சொன்னால், கடலில் பெரும்புயலை உருவாக்கிக் கப்பலை அழித்துவிடுவாளாம்.

l கம்போடியா மற்றும் தாய்லாந்தில் கூறப்படும் ராமாயணக் கதையில் சுவன்னமச்சா என்ற தங்கக் கடல்கன்னியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.

l ஒபேரா நாடகங்கள், ஓவியங்கள், தேவாலயச் சிற்பங்களில் காலங்காலமாகக் கடல்கன்னிகள் இடம்பிடித்துவருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in