Published : 06 Nov 2019 12:39 pm

Updated : 06 Nov 2019 12:39 pm

 

Published : 06 Nov 2019 12:39 PM
Last Updated : 06 Nov 2019 12:39 PM

மாய உலகம்: ஆப்பிளும் ஆங்கிலமும்

magic-world

மருதன்

கரும்பலகையில் ‘ஏ’ என்று பெரியதாக எழுதி, ‘ஏ ஃபார் ஆப்பிள் பை' என்று ராகம் இழுத்தார் ஆசிரியர். ஒட்டுமொத்த மாணவர்களும் ஒரே குரலில் ராகம் தப்பாது அவர் சொன்னதைத் திருப்பிச் சொன்னார்கள். ஆர்.கே. நாராயண் மட்டும் கையை உயர்த்தினார். ‘‘ஏ என்றால் என்ன? ஃபார் என்றால் என்ன? ஆப்பிள் பை என்றால் என்ன?”
‘‘ஆரம்பிக்கும்போதே சந்தேகமா? சரி, ‘ஏ’ என்பது ஆங்கில மொழியின் முதல் எழுத்து. அ.. அம்மா, ஆ... ஆடு என்று தமிழில் படிக்கிறாயல்லவா? அதேபோல்தான் ஆங்கிலத்திலும் ஏ பி சி டி என்று படிக்க வேண்டும்.”

‘‘தமிழில் எனக்கு அம்மா, ஆடு இரண்டும் தெரியும். ஆனால், ஆங்கிலத்தில் ஏவும் தெரியாது ஆப்பிள் பையும் தெரியாதே?”
‘‘புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் படிக்க வேண்டும், உட்கார்” என்று ஓர் அதட்டல் போட்டுவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார் ஆசிரியர். மொத்தம் 26 எழுத்துகளை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த 26 எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்ள 26 சொற்களை அவர் ராகம் இழுத்து இழுத்துப் பாடினார். ஒருவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. நாராயணோ இன்னும் ஆப்பிள் பையையே கடந்து வந்தபாடில்லை.

ஒரு நாள் தனியாக ஆசிரியரைச் சந்தித்து மிகுந்த பணிவோடு மன்றாடிப் பார்த்தார் நாராயண். ‘‘உண்மையில் எனக்கும் தெரியவில்லை நாராயண். நம் ஊர் இட்லிபோல் இங்கிலாந்தில் ஆப்பிள் பழத்தை வேக வைத்து என்னவோ ஒரு தின்பண்டம் செய்வார்கள் போலிருக்கிறது. ஏ ஃபார் ஆப்பிள் பை என்று மனப்பாடம் செய்துகொள். அர்த்தம் எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள், கவலைப்படாதே” என்று முதுகில் தட்டி, சமாதானம் செய்தார் ஆசிரியர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆப்பிள் பையே பரவாயில்லை என்னும் அளவுக்கு வரலாறு ஒரு பெரும் தகராறாக வளர்ந்து நின்று அச்சுறுத்தியது. ஏழாண்டுப் போர் எப்போது தொடங்கி, எப்போதுவரை நடைபெற்றது? யாருக்கும் யாருக்கும் இடையில்? விக்டோரியா மகாராணி என்பார் யார்? அவர் பெற்றோரின் பெயர் என்ன? அவர் எப்போது பிறந்தார்? அவருடைய செல்லப் பெயர் என்ன? அவர் எத்தகைய ஆடைகளை உடுத்திக்கொண்டார்? விக்டோரியா வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து எப்படி இருந்தது? அயர்லாந்து எப்படி இருந்தது? விக்டோரியாவின் மூத்த மகனான ஏழாம் எட்வர்ட்டின் சிறப்புகளை நன்றாக விவரித்து எழுதவும். வேல்ஸ் நிலவியலையும் ஸ்காட்லாந்து புவியியலையும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் விளக்கி எழுதவும்.

தலையும் காலும் புரியவில்லை என்றாலும் வேறு வழி? இங்கிலாந்தில் வசந்த காலம் எப்போது தொடங்கும், இலையுதிர் காலம் எப்போது முடிவடையும் என்பதைத் தூக்கத்தில் கேட்டால்கூட என்னால் இப்போது சொல்ல முடியும். ஆனால், நாளை சென்னையில் மழை வருமா என்று கேட்டால் தெரியாது. சென்னையிலிருந்து மைசூருக்கு எப்படிப் போக வேண்டும் என்று தெரியாது.

ஆனால், கேம்பிரிட்ஜுக்கும் பர்மிங்ஹாமுக்கும் மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் என்னால் இங்கிருந்தே வழி சொல்ல முடியும். மல்லிகைப்பூவோ சாமந்தியோ என் புத்தகத்தில் தப்பித் தவறியும் வந்துவிடாது. ஆனால், கார்ன்ஃபிளவர், ஃபர்கெட் மி நாட், ஸ்கார்லெட் பிம்பர்நெல் பற்றி எல்லாம் என்னால் அக்கு வேறு ஆணி வேறாக விவரிக்க முடியும்.

இங்கிலாந்து வானத்தில் பறந்தால்தான் அந்தப் பறவைகள் என் கவனத்துக்கு வரும். காடு என்றால் இங்கிலாந்தின் காடு. வீதி என்றால் இங்கிலாந்து வீதி. பொருளாதாரம் என்றால் இங்கிலாந்தின் பொருளாதாரம். மன்னர்கள் என்றால் இங்கிலாந்து மன்னர்கள். பக்கத்திலிருக்கும் பாரதியும் தாகூரும் தெரியாது. ஷேக்ஸ்பியரை, ஷெல்லியை, பைரனை, டென்னிஸனை என்னால் பக்கம் பக்கமாக ஒரு சொல்கூடப் பிசகாமல் ஒப்பிக்கமுடியும்.

ஏன் இந்த முரண் என்பதைப் புரிந்துகொள்ள நாராயணுக்கு மேலும் சில ஆண்டுகள் பிடித்தன. இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது இங்கிலாந்து. எது ஆள்கிறதோ அதுவே வலுவானதாக இருக்கிறது. நான் இங்கிலாந்தால் ஆளப்படுகிறேன் எனவே எனக்கு இங்கிலாந்தின் வரலாறு அவசியம். நான் இங்கிலாந்தால் ஆளப்படுகிறேன் என்பதால் எனக்கு இங்கிலாந்தின் நிலமும் காடும் விலங்கும் பூவும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அம்மாவும் ஆடும் இலையும் ஈயும் என்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விட்டன. ஆனால், ஏபிசிடி என்னோடு ஒன்று கலந்துவிட்டது.

அப்படி ஒன்று கலந்துவிட்ட ஆங்கிலத்தைக்கொண்டு ஆர்.கே. நாராயண் எழுதத் தொடங்கினார். தன்னை அச்சுறுத்திய ஒரு மொழியை அவர் இப்போது தன் வசப்படுத்தியிருந்தார். பூதம்போல் வாயைத் திறந்து காட்டிய 26 எழுத்துகளும் பூனைக்குட்டிகளாக மாறி அவர் மடியில் அமர்ந்துகொண்டன.

மொழி உன்னுடையது. ஆனால், சொற்கள் என்னுடையவை. அவற்றைக் கொண்டு என் நிலத்தின் கதைகளை நான் உருவாக்குவேன். என் மக்களின் வாழ்வைப் பதிவு செய்வேன். என்னுடைய நகரமும் என்னுடைய கிராமமும் என் நூல்களிலிருந்து உயிர்பெற்று எழும். என் புத்தகத்தில் என் காடும் என் போரும் என் மலரும் என் பறவையும் என் மழையும் என் வெயிலும் நிறைந்திருக்கும்.

அதை என் நாட்டின் குழந்தைகள் எடுத்துப் படிப்பார்கள். எது என்னை ஆதிக்கம் செய்கிறதோ, அதை என்னால் வசப்படுத்த முடியும் என்பதை அவர்கள் உணர்வார்கள். அந்த உணர்வோடு அவர்கள் தங்கள் கதைகளை எழுதும்போது, அந்தக் கதைகள் வளர்ந்து வளர்ந்து ஒரு நாள் உங்கள் இங்கிலாந்தை வந்தடையும்.
இட்லி என்றால் என்னவென்று உங்கள் குழந்தை ஒரு நாள் உங்களிடம் ஆர்வத்தோடு கேட்கும். அது இந்தியாவின் ஆப்பிள் பை என்று ஒரு வேளை நீங்கள் விளக்கம் அளிக்க நேரிடலாம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


மாய உலகம்ஆப்பிளும் ஆங்கிலமும்கரும்பலகைMagic Worldஏ ஃபார் ஆப்பிள்ஆங்கிலம்குழந்தைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author