

மிது கார்த்தி
கண்ணாடி டம்ளரை உங்களால் மறைய வைக்க முடியுமா? ஒரு சோதனை செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
2 பைரக்ஸ் கண்ணாடி டம்ளர் (டம்ளர் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று அதைவிடச் சிறியதாகவும் இருக்க வேண்டும்.)
சமையல் எண்ணெய்
எப்படிச் செய்வது?
# பெரிய கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் வையுங்கள்.
# அந்த டம்ளருக்குள் சிறிய கண்ணாடி டம்ளரை வையுங்கள்.
# இரண்டு கண்ணாடி டம்ளர்களுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும்.
# இப்போது சிறிய கண்ணாடி டம்ளருக்குள் சமையல் எண்ணெயை ஊற்றுங்கள்.
# சிறிய டம்ளர் நிரம்பினாலும் பெரிய டம்ளர் முழுவதும் எண்ணெயை ஊற்றுங்கள்.
# இப்போது பெரிய கண்ணாடி டம்ளர் வழியாகப் பாருங்கள். பெரிய டம்ளருக்குள் வைக்கப்பட்ட சிறிய டம்ளர் காணாமல் போயிருக்கும். சிறிய டம்ளர் மாயமாக மறைந்தது எப்படி?
காரணம்:
இந்தப் பரிசோதனையில் சிறிய கண்ணாடி டம்ளர் மாயமாக மறைய ஒளிவிலகல் குறியீடே காரணம். ஓர் ஊடகத்தில் ஒளிவிலகல் குறியீடு (Refractive index) என்பது அந்த ஊடகத்துக்குள் ஒளி எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பதை அளக்கும் அளவீடாகும். ஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து இன்னோர் ஊடகத்துக்குச் செல்லும்போது ஒளிவிலகல் குறியீட்டில் வித்தியாசம் இருந்தால், ஒளியானது விலகிக் காணப்படும். அதேவேளையில் குறியீடுகளில் வித்தியாசம் இல்லாமல் இருந்தால், ஒளி விலகாது.
இங்கே கண்ணாடி, எண்ணெயின் ஒளிவிலகல் குறியீட்டில் வித்தியாசம் இல்லை. இரண்டும் சமமாக இருப்பதால் ஒளி விலகவில்லை. இந்தச் சோதனையில் ஒளி கண்ணாடி வழியாகவும், பின்னர் எண்ணெய் வழியாகவும் பயணிக்கிறது. இதனால் ஒளியின் வேகம் குறைகிறது. பின்னர் அது கண்ணாடியைத் தாக்கி, பிரதி பலிக்கிறது. இதனால்தான் சிறிய கண்ணாடி டம்ளர் கண்ணுக்குத் தெரியாதது போலத் தோன்றுகிறது.
பயன்பாடு:
கேமரா லென்ஸ், பைனார்குலரில் இந்தத் தத்துவம் செயல்படுகிறது.