டிங்குவிடம் கேளுங்கள்: பிறந்தவுடன் மனிதனால் ஏன் நடக்க முடியவில்லை?

டிங்குவிடம் கேளுங்கள்: பிறந்தவுடன் மனிதனால் ஏன் நடக்க முடியவில்லை?
Updated on
3 min read

விலங்குகள் பிறந்த உடனே எழுந்து நடக்கின்றன. மனிதனால் அது முடியவில்லையே ஏன், டிங்கு?

– மகாசக்தி, 9-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி, திருநெல்வேலி.

நல்ல கேள்வி. கடற்கரையில் ஆமையின் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் யார் உதவியும் இன்றி, கடலை நோக்கிச் சென்றுவிடுகின்றன. மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் பிறந்த உடனே எழுந்து நின்றுவிடுகின்றன. ஒரு மணி நேரத்தில் நடக்கவும் ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால், மனிதக் குழந்தை பிறந்து எழுந்து நடக்க ஓர் ஆண்டை எடுத்துக்கொள்கிறது.

நன்றாகப் பேசுவதற்கும் தானாகச் சாப்பிடுவதற்கும் அடுத்த ஓராண்டு காலம் தேவைப்படுகிறது. இதற்குக் காரணம் மூளையின் வளர்ச்சி. ஒரு குழந்தை உருவாகி 18 முதல் 21 மாதங்களுக்குப் பிறகே நிற்க முடிகிறது. ஆனால், 9 மாதங்களே வயிற்றுக்குள் இருக்கிறது. மீதி வளர்ச்சிக்கான காலத்தைப் பிறந்த பிறகு எடுத்துக்கொண்டு படிப்படியாக வளர்கிறது. விலங்குகளின் கர்ப்ப காலம் அதிகம் என்பதாலும் பிறந்த பிறகு அவை தாமாகவே வளர வேண்டிய சூழல் இருப்பதாலும் முழுமையாக வளர்ந்தே பிறக்கின்றன.

மனிதர்களின் கர்ப்ப காலம் 9 மாதங்கள் என்பதால், வெளியே வந்த பிறகு மீதி வளர்ச்சி நடைபெறுகிறது. விலங்குகளைப் போல் மனித உடல் 21 மாதம் வரை வயிற்றுக்குள் குழந்தையைச் சுமக்கும் அளவுக்கு தகவமைப்பைப் பெற்றிருக்கவில்லை, மகா சக்தி.

ஷாஜஹானின் முதல் மகன் தாரா ஷிகோ நல்லவரா, கெட்டவரா, டிங்கு? நானும் அவரும் மார்ச் 20 அன்று பிறந்திருக்கிறோம்.

– எஸ். பி. சபரிஷ், 8-ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சென்னை.

எப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள், சபரிஷ்! ஷாஜஹானின் பிரியத்துக்குரியவர் தாரா ஷிகோ. மென்மையானவர். புத்திசாலி. சூஃபி அறிஞர். இந்து, இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் பொதுத் தன்மையை ஆராய்ந்தார். புத்தகங்கள் எழுதினார். ஓவியங்கள் தீட்டினார். இசை, நடனம் போன்ற கலைகளை ஆதரித்தார். ஓர் அரசராகப் போர்க்களத்தில் சிறந்த வீரராக அவரைச் சொல்ல முடியாது. அதனால்தான் தன் தம்பி ஒளரங்கசீப்பிடம் தோல்வியைச் சந்தித்தார்.

சூரியகாந்திப் பூ ஏன் சூரியனை நோக்கியே இருக்கிறது, டிங்கு?

– தர்மேஷ், 4-ம் வகுப்பு, பாலகுருகுலம், ஆரம்பப் பள்ளி, மதுரை.

சூரியகாந்திப் பூக்களின் அடியில் உள்ள தண்டில் ஒளியைத்தூண்டும் (Heliotropism) பண்பு இருக்கிறது. இது சூரிய ஒளியை நோக்கித் திரும்ப வைக்கிறது. நன்றாக மலராத சூரியகாந்திப் பூக்களில்தான் இந்த ஒளித்தூண்டல் நடைபெறுகிறது. அதனால் சூரியன் உதிக்கும்போது கிழக்கு நோக்கிப் பூக்கள் இருக்கின்றன. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கிச் செல்லும்போது இந்தப் பூக்களும் திசையை மாற்றிக்கொண்டே செல்கின்றன.

இரவில் மீண்டும் கிழக்கு திசைக்கு வந்து நிற்கின்றன. நன்றாகப் பூத்த சூரியகாந்திகள் இப்படிச் சூரியன் நகரும் திசையில் நகர்வதில்லை. கிழக்கு நோக்கி அப்படியே நின்றுவிடுகின்றன. சூரியகாந்தி இவ்வாறு சூரியனைப் பின்தொடர்ந்து செல்வதால் பூக்கள் வெப்பத்தைப் பெறுகின்றன. இதனால் பூச்சிகள் அதிகமாக ஈர்க்கப்படுகின்றன. மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறுகிறது, தர்மேஷ்.

சிறிய காயம் பட்டால்கூட டி.டி. ஊசி போடச் சொல்கிறார்களே ஏன், டிங்கு?

– ர. பரணிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

நோய்கள் வரும்முன்பே தடுத்துவிடுவதற்காகப் போடப்படுவதுதான் தடுப்பூசிகள். குழந்தை பிறந்து 2 வயதுக்குள் சுமார் 15 தடுப்பூசிகள் போடப்படுகின்றன். இதன் மூலம் போலியோ, காசநோய், தட்டம்மை, டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து காத்துக்கொள்ள முடிகிறது. காயங்கள் ஏற்படும்போது தொற்றுகள் உருவாகி, உடலைப் பாதிக்காமல் இருப்பதற்காக TT எனப்படும் டெட்டனஸ் டாக்ஸாய்ட் (Tetetanus Toxoid) ஊசியைப் போடச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது TT-க்குப் பதிலாக TD எனப்படும் டெட்டனஸ் டிப்தீரியா (Tetanus and Diptheria) ஊசியைப் போடுகிறார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஓர் ஊசி என்று போடாமல் 2 நோய்களுக்கும் சேர்த்து ஒரே ஊசியாக இது போடப்படுகிறது.

ஆரம்பத்திலேயே எல்லாத் தடுப்பூசிகளும் போட்டுவிடுவதால், 15 வயதுக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். 40 வயதுக்குப் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டால் போதும். காயம் ஏற்படும்போது இந்த ஆண்டுக் கணக்கு நினைவில் இருக்காது. அதனால் மருத்துவர்கள் டிடி ஊசியைப் போடச் சொல்லிவிடுகிறார்கள். இவ்வாறு போடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. காயம் பட்ட 24 மணி நேரத்துக்குள் ஊசி போட்டுவிட வேண்டும் என்பது முக்கியம், பரணிதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in