

மருங்காபுரி என்ற கிராமத்தில் மாணிக்கம் என்ற பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வீட்டு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், ஆடு, மாடு, நாய், கிளி, புறா என பிராணிகளை வளர்த்து வந்தார்.
இவருடைய ஒரே மகனான பாபுவுக்கும், அப்பாவைப் போலவே பிராணிகளிடம் கொள்ளைப் பிரியம். பள்ளி முடிந்து வந்தால் அம்மா, அப்பாவிடம் பேசுகிறானோ, இல்லையோ பச்சைக்கிளிகளுடன் மழலை மொழியில் பேசி மகிழ்வான். பாபு பேசுவதைப் பார்த்து அந்தக் கிளிகளும் பேசக் கற்றுக்கொண்டன. அப்போது பாபுவுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை வந்தது.
ஒரு நாள் பாபுவின் மாமா பண்ணையார் பாண்டுரங்கன் வீட்டுக்கு வந்தார். கோடை விடுமுறை என்பதால் பாபுவை தன் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார். மாமாவின் பண்ணை வீட்டையும், அதைச் சுற்றி இருந்த தோட்டங்களையும் பார்த்து பாபுவுக்கு ஒரே சந்தோஷம். சாயங்கால வேளையில் வயல்வெளியில் கூட்டம் கூட்டமாய்ப் பச்சைக்கிளிகள் நெல்மணிகளைத் தின்று கொண்டும் பறந்து வட்டமடிப்பதும் பாபுவுக்குக் கண் கொள்ளாக் காட்சியாய் இருந்தது.
கோடை விடுமுறை மாமா வீட்டில் இன்பமாய் கழிந்தது. தன் வீட்டுக்கு வந்த பாபு, கூண்டில் அடைபட்டிருக்கும் கிளிகளுடன் பேசப் போனான். அதன் பிறகு கிளிகளை பாபு என்ன செய்தான் என்று கேட்கிறீர்களா? அதற்கு ‘நேர்மைக்குக் கிடைத்த பரிசு’ என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கவிஞர் செம்போடை வெ. குணசேகரன். குழந்தைகளுக்காக குட்டிக்குட்டி கதைகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார்.
நூல்: ‘நேர்மைக்குக் கிடைத்த பரிசு!’ ,
ஆசிரியர்: கவிஞர் செம்போடை வெ. குணசேகரன்,
பதிப்பகம்: தெய்வீகா பதிப்பகம்,
முகவரி: 3/57, கங்கையம்மன் கோயில் தெரு,
வெட்டுவாங்கேணி, சென்னை - 600 115.